அசெட்டைல் அசெட்டோன்(Acetylacetone) என்பது இரண்டு அமைப்புச் சமநிலை மாற்றிய வடிவங்களில் காணப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பெரும்பாலான பயன்பாடுகளில் இவை இரண்டும் விரைவாக தங்களுக்குள் இடைமாற்றம் அடைந்து ஒரே சேர்மமாக இணைந்து விடுவதாகக் கருதப்படுகிறது[2]. முன்னதாக இச்சேர்மம் இரு கீட்டோன் வடிவமாகக் கருதப்பட்டு 2,4,பென்டேன்டையோன் என்று பெயரிடப்பட்டாலும் ஈனால் வடிவம் இச்சேர்மத்திற்குரிய போதுமான வடிவமாக உருவாவதாகக் கருதப்படுகிறது. மேலும் பல கரைப்பான்களுக்கு இதுவே சாதகமான வடிவமாகவும் உள்ளது. நிறமற்ற அல்லது ஓரளவு மஞ்சள் நிறமுள்ள எளிதில் பாயும் [3]நீர்மமான இச்சேர்மம் பொது ஈரணு ஈணியான அசெட்டைல் அசெட்டோனேட்டு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடியாக விளங்குகிறது. தொகுப்பு முறையில் பல்வளைய சேர்மங்கள் தயாரிப்பதறகான கட்டுறுப்புகளாகவும் இவை செயல்படுகின்றன.
பண்புகள்
அமைப்புச் சமநிலை மாற்றியம்
அசெட்டைல் அசெட்டோன் கரைசலில் கீட்டோ மற்றும் ஈனால் வடிவங்கள் அமைப்புச் சமநிலைகளாக ஒருங்கே காணப்படுகின்றன. ஈனால் வடிவமானது C2v சீரொழுங்கில் காணப்படுகிறது. இரண்டு ஆக்சிசன் அணுக்கள் ஐதரசன் அணுக்களுடன் சமமாக பகிர்ந்து கொள்கின்றன என்பது இதன் பொருளாகும்[4]. வாயு நிலையில் கீட்டோ-ஈனால் சமநிலை மாறிலி 11.7, ஈனால் வடிவத்திற்கு சாதகமாக இருக்கிறது. அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல், அகச்சிவப்பு நிறமாலையியல் மற்றும் பலமுறைகளிலும் இரண்டு அமைப்புச் சமநிலைகளும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன[5][6].
நீர்க் கரைசலில் 25° செல்சியசுவெப்பநிலையில் இச்சமநிலையின் மதிப்பு pKa மதிப்புகள் 8.99±0.04 (I = 0), 8.83±0.02 (I = 0.1 M NaClO4 மற்றும் 9.00±0.03 (I=1.0 M NaClO4) என்று (I = கரைசலில்அயனிகளின் அடர்த்தியின் அளவான அயனிவலிவு ) ஐயுபிஏசி பரிந்துரைக்கிறது[9]. கலப்புக் கரைப்பான்களின் மதிப்புகளும் அறியப்பட்டுள்ளன. மிகவலிமையான காரங்களான கரிம இலித்தியம் சேர்மங்கள் அசெட்டைல் அசெட்டோனை இருமுறை புரோட்டான் நீக்கம் செய்கின்றன. இந்நீக்கத்தால் விளையும் இருலித்தோ சேர்மங்களின் முதலாவது கார்பன் (C1) ஆல்கைலேற்றப்படுகிறது.
இத்தொகுப்பு வினையின் எளிமை காரணமாக பல அசெட்டைல் அசெட்டோனேட்டுச் வரிசைச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. C6H5C(O)CH2C(O)C6H5 மற்றும்(CH3)3CC(O)CH2C(O)CC(CH3)3.என்பன சில உதாரணங்களாகும். அறுபுளோரோஅசெட்டைல் அசெட்டோனேட்டும் பல்வேறு ஆவியாகும் உலோக அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.