அட்டாங்க யோகம்

சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையான திருமூலர் எழுதிய திருமந்திரம் ஒன்பது ஆகமங்களின் கருத்தை ஒன்பது தந்திரங்களில் விளக்குகின்றது. இதில் மூன்றாம் தந்திரம் வீராகமத்தின் சாரமாகும். மூன்றாம் தந்திரத்தில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது அட்டாங்க யோகம் எனப்படும்.

அது அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்களைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறுகிறது[1]:

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே (திருமந்திரம் : 3:1:4)

பெயர்க் காரணம்

அட்டம் என்பது எட்டு என்ற எண்ணைக் குறிக்கும். அங்கம் என்பதற்கு உறுப்பு எனப் பொருள். யோகம் என்பது கூடுகை, பொருந்துகை என்று பொருள்படும்; அதன்பொருளை வளர்த்து இறைவனுடன் அருளால் ஒன்றுதலைக் குறிக்கும் என்று கூறுவர். உயிர்கள் இறைவனுடன் ஒன்றுபடக் கடைப்பிடிக்க வேண்டிய எட்டுப் படிநிலைகளை எடுத்துரைப்பதே அட்டாங்க யோகம் எனப்படுகிறது. [2]

எட்டு உறுப்புகள்

முத்தி பெறுவதற்குரிய வழிகள் நான்கு என்பது சைவநெறி. அவற்றுள் யோகம் என்பது ஒன்று. யாகம் என்பது தவம். திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது. [3]

  1. இயமம்: பதஞ்சலி யோகசூத்திரம் ஐந்து இயமங்களை நவில்கின்றது: கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை  புலன் அடக்கம் என்பனவாம்.
    ஆனால் திருமந்திரமோ பத்தினை நவில்கின்றது: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, நல்ல குணங்கள், புலன் அடக்கம், நடுநிலைமை (விருப்பு வெறுப்புக்கள் இன்மை), பகுத்துண்டல், மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் ஆகும். கொல்லான்,பொய் கூறான், களவிலான், எள்குணன், நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய வல்லான், பகுத்துண்பான், மாசிலான், கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே [எள்குணன் = எள்கு உணன்; எள்கு = இகழ், புறக்கணி; எள்கும், அதாவது, தான் பெரிதும் ஆவல்கொள்ளாது எள்ளும் அல்லது இகழும் உணவினை உடையோன், எளிய உணவினன்]
  2. நியமம் - தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல். [4]
  3. ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல். [5] [6]
  4. பிராணாயாமம் - உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல். [7] [8] இதுவும் இரண்டு வகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் [9] ஒருவகை. பிரணவம் காயத்திரி முதலான மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு நிறுத்தல்.
  5. பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல். [10]
  6. தாரணை - உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; [11] [12]
  7. தியானம் - கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவனை உள்நோக்குதல் [13] [14]
  8. சமாதி - விந்துநாதம் காணல் [15] [16]


இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

இவற்றையும் காண்க

உசாத்துணை நூல்கள்

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்

அடிக்குறிப்பு

  1. "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்". www.thevaaram.org. Retrieved 2020-04-18.
  2. டாக்டர் கோமதி சூரியமூர்த்தி எழுதிய “சைவசமய சாத்திரக் கட்டுரைகள்” (தொகுதி3) பக்கம்171.
  3. திருமந்திரம், மூன்றாம் தந்திரம்
  4. திருமந்திரம் 555-557
  5. திருமந்திரம் 558-563
  6. பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல்.
  7. திருமந்திரம் 564-577
  8. வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்).
  9. அகற்பம்
  10. திருமந்திரம் 578-587
  11. திருமந்திரம் 588-597
  12. இதற்கு 'முழங்கால்,குதம், இதயம்,கண்டம்,கபாலம்' என்னும் ஜந்து இடங்களிலும் ஜம்பூதங்களை (நிலம், நீர், தீ, காற்று, வானம்) ஆகியவைகளையும் ஒடுக்கி அவ்விடங்களில் முறையே பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் பஞ்ச மூர்த்திகளையும் இருத்திப்பாவித்தல் எனவும் கூறுவர்.
  13. திருமந்திரம் 598-617
  14. ஐம்புலத்தையும், அந்தக்கரணத்தையும் அடக்கி, ஒரு கரத்து மழுவும் ஒருகரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங்களையுடையனவாய் சதுர்ப்புயம்,காளகண்டம்,திரிநேத்திரம் உடையனவாய் விளங்கும் சிவமூர்த்தியைத் தியானித்தலாம்.
  15. திருமந்திரம் 618-631
  16. ஓரிடத்தேனும் மந்திரத்தோடு நோக்காமல் எங்கணும் சிவவியாபகமாய், நோக்கி, அவ்வஸ்துவையும், தன்னையும் பிரிவறப்பொருத்துதல்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya