அதியமான் பெருவழி

தருமபுரி அகழ்வைப்பகத்தில் உள்ள அதியமான் பெருவழிக்கல்
அதியமான் பெருவழி கல்லெழுத்து

அதியமான் பெருவழி என்பது அதியமான் மரபினரின் பெயரால் அமைந்த ஒரு பெருவழியாகும்

பெருவழி

பெருவழி என்பது தற்கால நெடுஞ்சாலைக்கு ஒப்பாக அமையாவிடினும், பழந்தமிழகத்தின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் வகையில் அமைந்த சாலைகளாகும்.[1]

அதியமான் பெருவழி

தருமபுரி மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியே அதியமானின் தலைநகரான தகடூர் ஆகும். இந்தத் தருமபுரிக்கு அருகில், அதியமான் மரபினர் பிற்காலத்தில் கோட்டைகட்டி வாழ்ந்த பகுதியே அதியமான் கோட்டை என்னும் ஊராகும். அதியமான் கோட்டையிலிருந்து. நாவற் தாவளம் என்ற ஊருக்குச் சென்ற பெருவழியே அதியமான் பெருவழியாகும்.[2]

நாவற் தாவளம்

இந்த நாவற் தாவளம் ஊர் எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தகடூருக்கு வடகிழக்கில் இன்றைய வேலூர் மாவட்டத்தில் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[3]

அதியமான் பெருவழிக்கல்

அதியமான் பெருவழிக்கலில் ஒன்று அதியமான் கோட்டை-பாலக்கோடு சாலையின் மேற்குபக்கம் வயல்களுக்கு இடையில் தமிழக தொல்லியல் துறையினரால் பெருவழி காதக் கல் (19 காதம்) கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து திருப்பத்தூர் - தருமபுரி நெடுஞ்சாலையில் கொண்டப்பநாயக்கன்பட்டியில் பெருவழிக்காதக்கல் (21 காதம்) கண்டுபிடிக்கப்பட்டது.[4] மற்றொரு கல் தருமபுரி-கன்னிப்பட்டி நகர பேருந்து சாலையில் தருமபுரியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தம்பட்டி என்னும் ஊரில் சாலையின் வலப்புறம் உள்ள கிணற்று மேட்டில் பெருவழிக்காதக்கல் (27 காதம்) கண்டுபிடிக்கப்பட்டது இக்கல்லை கண்டுபிடித்தவர்கள் சேலம் பா. அன்பரசு அவர்களும் மா. கணேசன் அவர்களுமாவர்.[5]

அதியமான் பெருவழிக் கல்லின் அமைப்பு

அதியமான் பெருவழி எந்த ஊர் செல்கிறது. எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பதை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொலைவுக் கல்லினும் மேலான செய்தியைக் கொடுக்கும் பெருவழிக்கல்லாக இது விளங்குகிறது. இவ்வளவு தொலைவு எனபது எண்ணால் மட்டுமின்றிக் கற்றோரோடு கல்லாதவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் குறியீடுகளாகவே காட்டப்பட்டுள்ளது. 29 காதம் என்பதை முதலில் எண்ணால் எழுதி, பின்னர் இரண்டு பெரிய குழிகளையும், அவற்றிற்கு கீழே வரிசைக்கு மூன்றாக ஒன்பது சிறிய குழிகளையும் செதுக்கிக் குறியீடு மூலமாகக் குறித்துள்ளனர்.[6] பெரிய குழிகள் ஒவ்வொன்றும் பத்து காதங்களையும், சிறிய குழிகள் ஒவ்வொன்றும் காதத்தைகயும் குறிக்கும் வகையில் உள்ளது.[7]

காலம்

இப்பெருவழி கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தகடூர் பகுதியை ஆண்ட இராசராச அதியமானுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

  1. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு, விழா மலர் மதுரை,1981 பக் 388
  2. தினமணி செய்தி 14.7.1978
  3. தகடூர் தந்த தடங்கள்.ப. அன்பரசு பக் 19
  4. "திருப்பத்தூர் - கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக் கல்வெட்டு கண்டெடுப்பு". Hindu Tamil Thisai. 2023-06-13. Retrieved 2025-02-24.
  5. தினமணி நாளிதழ் செய்தி 14.7.1978
  6. இரா.நாகசாமி,தருமபுரி கல்வெட்டுகள், முதல் தொகுதி எண்.1974/85;ARE 169/1968-69
  7. உலகிற்கே வழிகாட்டும் பண்டை தமிழகத்தின் மைல்கற்கள் - ஒரு சுவாரஸ்ய பயணம்!
  8. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு விழா மலர்,பக்.400
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya