அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights) என்பது, 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பல தரப்பு ஒப்பந்தம் ஆகும். இது 1976 மார்ச் 23 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இதன் பங்காளர்கள் தனியாட்களுடைய குடிசார் உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் மதிப்பதாக உறுதியளிக்கிறது. வாழும் உரிமை, மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கூடுவதற்கான சுதந்திரம், தேர்தல் உரிமை, தக்க சட்டமுறைகளுக்கும், நேர்மையான விசாரணைக்குமான உரிமை என்பன மேற்படி குடிசார், அரசியல் உரிமைகளுக்குள் அடங்குகின்றன. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இவ்வொப்பந்தத்துக்கு 167 பங்காளர்கள் இருப்பதுடன் 72 நாடுகள் கைச்சாத்தும் இட்டுள்ளன. அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, மனித உரிமைகளுக்கான பன்னாட்டுச் சட்டமூலத்தின் ஒரு பகுதியாகும். பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம், அனைத்துலக மனித உரிமைகள் சாற்றுரை என்பன இச் சட்டமூலத்தில் மற்றப் பகுதிகள். இந்த ஒப்பந்தம் மனித உரிமைகள் குழுவினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்த உறுப்பு நாடுகளின் அறிக்கைகளை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதன் பின்னர் ஒரு ஆண்டு காலத்தில் ஒரு அறிக்கையை அளிக்க வேண்டும் பின்னர் குழு கேட்கும்போது இந்நாடுகள் அறிக்கைகளை அளிக்க வேண்டும். பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நிகழும். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia