அப்பல்லோ 12 ஆனது அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தில் ஆறாவது ஆளேற்றிய விண்பயணமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. குழுத்தலைவர் சார்லசு பீட் கன்ராடும் நிலவுக் கலன் ஓட்டி/விமானி ஆலன் எல். பீன்-ம் ஒரு நாள் ஏழு மணி நேரத்தில் நிலவின் தரைப்பரப்பில் ஆய்வுகளை முடித்தனர். கட்டளைப் பெட்டக விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே இருந்தார். சூறாவளிகளின் கடல் (Ocean of Storms) என்றழைக்கப்பட்ட நிலவுப் பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது குறிக்கோளாக இருந்தது. அப்பல்லோ 11-ஐ விட துல்லியமாக தரையிறங்குவது இதன் குறிக்கோளாக இருந்தது. மேலும் சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்துவருவது. நவம்பர் 24 அன்று இத்திட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. திட்டக் குறிக்கோள்கள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டன.