அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் இறுதி வடிவம் பேராயத்திடம் அளிக்கப்படுதல்.
அமெரிக்க விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence) பிலடெல்பியாவில்சூலை 4, 1776 அன்று கூடிய இரண்டாவது தேசியப் பேராயத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். இதன்படி பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் போரில் ஈடுபட்டிருந்த பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றங்கள்[2]தங்களை பதின்மூன்று சுதந்திரமான இறைமையுள்ள நாடுகளாகவும் பிரித்தானிய ஆட்சியின் கீழல்லாதவையாகவும் அறிவித்தன. இவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற புதிய நாட்டை உருவாக்கின. இதனை முன்னெடுப்பதில் ஜான் ஆடம்ஸ் முதன்மைப் பங்காற்றினார். இதற்கான தீர்மானம் சூலை 2 அன்று எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பேராயம் விடுதலையை ஏற்ற தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவிக்க ஐந்து பேரடங்கிய குழு ஒன்று முறையான சாற்றுரையை ஏற்கெனவே வரைந்திருந்தது. இந்தச் சாற்றுரையில் "விடுதலைச் சாற்றுரை" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படவில்லை.