அலெக்சாண்டர் எர்சின்
அலெக்சாண்டர் எமில் ழான் எர்சின் (Alexandre Emile Jean Yersin, செப்டம்பர் 22, 1863- மார்ச்சு 1,1943) சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற மருத்துவரும் நுண்ணுயிரியியலாளரும் ஆவார். அரையாப்பு பிளேக்கிற்குக் காரணமான கோலுயிரியைக் கண்டறிந்ததற்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இந்தக் கோலுயிரிக்கு பின்னர் இவரது நினைவாக எர்சினியா பெசுட்டிசு எனப் பெயரிடப்பட்டது. இளமையும் கல்வியும்சுவிட்சர்லாந்தின் வாட் கன்டனில் ஆபோன் நகரில் பிரெஞ்சுக் குடும்பத்தில் செப்டம்பர் 22, 1863ஆம் ஆண்டில் பிறந்தார். 1883 முதல் 1884 வரை சுவிட்சர்லாந்தின் லோசானில் மருத்துவம் கற்றார். பின்னர் செருமனியின் மார்பர்கிலும் பாரிசிலும் (1884–1886) மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். 1886இல் எகோல் நோர்மல் சுபீரியர் கல்வி நிறுவனத்தில் அமைந்திருந்த லூயி பாஸ்ச்சர் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். அங்கு வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான நீர்ப்பாயம் உருவாக்குவதில் பங்கேற்றார். 1888இல் காசநோய் குறித்த ஆய்வேடு வழங்கி தமது முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். செருமனியின் ராபர்ட் கோக்குடன் இரண்டு மாதங்கள் பணி புரிந்தார். பணி வாழ்க்கை1889இல் புதிதாக துவங்கப்பட்ட பாஸ்டர் கழகத்தில் எமில் ரூவின் உதவியாளராக இணைந்தார். இருவரும் இணைந்து தொண்டை அடைக்கும் நச்சை (திஃப்தீரியா) கண்டறிந்தனர். பிரான்சில் மருத்துவராகப் பணியாற்றும் பொருட்டு 1888இல் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றார். 1890இல் தென்கிழக்காசிய பிரான்சிய இந்தோசீனாவிற்கு கப்பல் நிறுவனத்தின் மருத்துவராக சென்றார். ஹோ சி மின் நகரம்-மணிலா தடத்திலும் சைகோன்-ஐபோங் தடத்திலும் பணியாற்றினார். 1894இல் பிரெஞ்சு அரசும் பாஸ்டர் கழகமும் இவரை ஆங்காங் சென்று அங்கு பரவிவந்த மஞ்சூரியன் வளிம்ப் பிளேக் தொற்றுநோயை ஆய்வுசெய்ய அனுப்பினர். அங்கு நோய்க்காரணியான பாக்டீரியாவைக் கண்டறிந்தார். ஆங்காங்கில் அதேநேரம் இருந்த முனைவர் கிடசாடோ சிபாசாபுரோ, இந்த பாக்டீரியாவை பலநாட்களுக்கு முன்னதாகவே கண்டறிந்திருந்தார். இவை இரண்டுமே ஒரே பாக்டீரியாவா அல்லது வேறானவையா என்ற சர்ச்சை எழுந்தது. கிடசாடோவின் அறிக்கைகள் தெளிவாக இல்லாததாலும் முரணாக இருந்ததாலும் எர்சினே முதலில் கண்டறிந்ததாக சிலர் கூறுவர்.[1][2] இருப்பினும், சரியான பகுப்பாய்வுகளுக்குப் பின்னர் கிடாசாடோவும் அதே கோலுயிரியை 1894இன் சூன்/சூலை மாதங்களில் கண்டறிந்துள்ளதாக பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[3] 1895இலிருந்து 1897 வரை எர்சின் அரையாப்பு பிளேக் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1895இல் பாரிசு திரும்பிய எர்சின் பிளேக்கிற்கு எதிரான நீர்ப்பாயத்தை தயாரிக்க பாஸ்டர் கழகத்தின் மற்ற மருத்துவர்களுடன் பணிபுரிந்தார். அதே ஆண்டு இந்தோசீனாவிற்கு திரும்பி அங்கு நா டிராங்கில் இந்த நீர்ப்பாயத்தை தயாரிக்க சிறு ஆய்வகத்தை உருவாக்கினார். 1905இல் இது பாஸ்டர் கழகத்துடன் இணைந்தது. பாரிசில் தயாரிக்கப்பட்ட நீர்ப்பாயத்தை 1896இல் குவாங்சோ, அமோய் நகர்களிலும் 1897இல் இந்தியாவின் மும்பையிலும் சோதித்தார்; இந்த ஆய்வுமுடிவுகள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. 1902இல் ஹனோயில் மருத்துவக் கல்லூரி அமைக்க உதவினார். இதன் இயக்குநராக 1904 வரை பணிபுரிந்தார். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia