ஆக்ரி (மாநிலம்)
ஆக்ரி (Acre, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [ˈakɾi]) பிரேசிலின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். நாட்டின் மேற்குக் கோடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் பிரசிலியாவிலிருந்து இரண்டு மணி நேர வேறுபாட்டில் உள்ளது. இதன் எல்லை மாநிலங்களாக வடக்கு மற்றும் வடகிழக்கில் அமேசோனாசு, கிழக்கில் ரோன்டோனியாவும் தென்கிழக்கில் பொலிவியாவின் மாநிலமான பாண்டோவும், தெற்கிலும் மேற்கிலும் பெருவின் மாத்ரெ டெ டியாசு, உகயாலி, லவரேட்டோ மண்டலங்களும் அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 152,581.4 கிமீ2 ஆகும்; இது தூனிசியாவை விட சற்றே சிறியதாகும். ரியோ பிரான்கோ இதன் தலைநகரமாகவும் மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது. மாநிலத்தின் பிற முதன்மை இடங்களாக குருசீரோ டொ சூல், சேனா மதுரீரா, தரவுக்கா மற்றும் ஃபீழ்சா உள்ளன. தீவிரமான பிரித்தெடுப்புத் தொழில் பிரேசிலின் மற்ற மண்டலங்களிலிருந்து இந்த மாநிலத்திற்கு ஈர்த்தது; இருபதாம் நூற்றாண்டில் இத்தொழில் தன் உச்சத்தை எட்டியது. பல்வேறு மண்டலத்து மக்கள் கூடி வாழ்ந்ததால் இங்கு தென் மண்டல, பாவுலோ, வட மண்டல மற்றும் உள்ளூர் வழக்கங்கள் இணைந்து பல்வேறுபட்ட உணவுமுறைகள் உருவாகின. இந்த மாநிலம் பெரும்பாலும் அமேசான் மழைக்காடுகளால் நிறைந்துள்ளது. பல ஆறுகள் ஆக்ரியில் பாய்கின்றன. ஆற்றுப் போக்குவரத்து, மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஜுருவா, மோவா ஆறுகளையும் வடமேற்கில் தரவுக்கா, என்விரா ஆறுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது; குறிப்பாக நவம்பர் முதல் சூன் வரை சாலைகள் துண்டிக்கப்படுவதால் ஆற்றுப் போக்குவரத்தே முதன்மையாக உள்ளது. மாநிலத்தின் பொருளியல்நிலை வேளாண்மை, மாடு கால்நடை வளர்ப்பு, மற்றும் இயற்கை மீள்மத் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஆக்ரி பொலிவியாவின் பகுதியாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே, ஆக்ரியின் பெரும்பான்மை மக்களாக பிரேசிலியர்கள் இருந்தனர்; இவர்கள் விடுதலை பெற்ற மாநிலத்தை நிறுவினர். 1889இல் இந்தப் பகுதியை பொலிவியா மீண்டும் கைப்பற்ற முயன்றதால் பல சண்டைகள் நடந்தன. 1903ஆம் ஆண்டு நவம்பர் 17இல் ஆக்ரி பிரேசிலின் அங்கமாக ஆனது. ஜூன் 15, 1962இல் ஒன்றிணைக்கப்பட்டு பிரேசிலின் மாநிலங்களில் ஒன்றானது. மேற்சான்றுகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia