ஆனையிறவுக் கோட்டை
ஆனையிறவுக் கோட்டை இலங்கையில், இன்றைய ஏ-9 நெடுஞ்சாலை வன்னித் தலைநிலத்தில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான நுழைவாயிலில் ஆனையிறவு என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்திருந்தது. இது ஒரு சிறிய கோட்டை ஆகும். தோற்றம்1776 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் இக் கோட்டையை நிறுவினர். இக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் ஆனையிறவுக்கும் தலை நிலத்துக்கும் இடையே ஆழம் குறைவான நீரேரி இருந்தது. கோடை காலத்தில் மட்டும் நீர் வற்றிக் குறுகிய நிலத்தொடர்பு இருக்கும் இப்பகுதியூடாக முறையான சாலைகள் எதுவும் இருக்கவில்லை. வற்றுக் காலத்தில் ஏற்றுமதிக்காக வன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் யானைகளை இவ்வழியூடாகவே ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவந்தனர். இது தவிர பிற வணிகப் பொருட்களும் இவ்விடத்தினூடாக வன்னிக்கும், யாழ் குடாநாட்டுக்கும் இடையே எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறான வணிகக் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்காகவே ஒல்லாந்தர் ஒரு கோட்டையை ஆனையிறவில் நிறுவினர்[1]. அமைப்புஇக் கோட்டையின் தள அமைப்பு ஏறத்தாழச் சதுர வடிவானது. இதன் பக்கங்கள் 50 அடி நீளம் கொண்டவை. இக் கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் உள்ளன. கொத்தளங்களின் முகப்பகுதி 30 அடி நீளமானவை, கோட்டைச் சுவர்களில் இருந்து 8 அடிகள் முன்தள்ளி உள்ளன. 2-1/2 அடிகள் தடிப்புக் கொண்ட கோட்டைச் சுவர்கள் முருகைக் கற்களும், செங்கற்களும் கலந்து கட்டப்பட்டவை. 7 அடி உயரமான கோட்டை வாயில் கிழக்குப் புறச் சுவரில் அமைந்துள்ளது[2]. மாற்றங்கள்பிரித்தானியர் இதன் ஒரு பகுதியைச் சிறிய ஓய்வுவிடுதியாக மாற்றியமைத்தனர். ஓய்வுவிடுதியின் அமைப்புக்காகத் தென்புறச் சுவரும், மேற்குப் புறச் சுவரின் பெரும் பகுதியும் உடைக்கப்பட்டன. கொத்தளச் சுவர்கள் இருந்தவாறே பேணப்பட்டாலும், வடமேற்குக் கொத்தளப் பகுதியில் நிரப்பியிருந்த மண் அகற்றப்பட்டு அப்பகுதியில் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது[3]. தற்போதைய நிலை1980 களுக்குப் பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது ஆனையிறவுப் பகுதி பெருமளவு தாக்குதலுக்கு உட்பட்டது. இதனால் ஆனையிறவுக் கோட்டையும் பெரும் சேதத்துக்கு உள்ளானது. 2004 ஆம் ஆண்டுக்கு முன்னரே இக் கோட்டை முற்றாக அழிந்துவிட்டது[4]. குறிப்புகள்உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia