இசிக்-குல் ஏரி
இசிக்-குல் ஏரி (கிர்கீசியம்: Ысык-Көл, உருசியம்: Иссык-Куль), கிர்கிஸ்தானில் உள்ள தியான் சான் மலையின் வடபகுதியில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது ஒரு நீர் வெளியேறும் வழியற்ற, மேலிருந்து கீழாக மாறா வெப்பநிலையைக் கொண்ட நீரையுடைய ஓர் ஏரி ஆகும். இது கொள்ளளவு அடிப்படையில் பத்தாவது பெரிய ஏரி ஆகும். அத்துடன், காஸ்பியன் கடலுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரி ஆகும். இது பனி மூடிய குன்றுகளால் சூழப்பட்டிருந்தாலும் இது ஒருபோதும் உறைவதில்லை.[5] இசிக்-குல் என்பது கிர்கீசிய மொழியில் இளஞ்சூடான ஏரி எனப் பொருள்படும். இந்த ஏரி உயிரியற் பல்வகைமையில் உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் சாசனத்தினால் பாதுகாக்கப்படும் ஏரிகளுள் ஒன்றாகும். புவியியல் அமைவு![]() ![]() இசிக்-குல் ஏரியானது 182 கிலோமீட்டர்கள் (113 mi) நீளமும், 60 கிலோமீட்டர்கள் (37 mi) அகலமும் உடையது. இதன் பரப்பளவு 6,236 சதுர கிலோமீட்டர்கள் (2,408 sq mi) ஆகும். இது தென்னமெரிக்காவில் உள்ள திதிகாகா ஏரிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும். இது 1,607 மீட்டர்கள் (5,272 அடி) உயரத்தில் உள்ளதுடன் 668 மீட்டர்கள் (2,192 அடி) ஆழமானது.[6] ஏறத்தாழ 118 ஆறுகளும் ஓடைகளும் இவ்வேரியில் வந்து கலக்கின்றன. இவற்றுள் பெரியவை டிஜைர்காலன் மற்றும் டியூப் நதிகள் ஆகும். நிர்வாக ரீதியாக இது கிர்கிஸ்தானின் இசிக்-குல் பிரதேசத்திற்குட்பட்டது. சுற்றுலாசோவியத் ஒன்றிய காலத்தில், இது ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்பட்டது. இதன் வடக்குக் கரையில், சொல்பொன்-அற்றா நகரைச் சூழ்ந்து பல இயற்கை மருத்துவக் கூடங்களும் விடுமுறை விடுதிகளும் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் பிரிவுக்குப் பின்னர் இவை அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை. எனினும் தற்போது மீண்டும் விடுதிகள் மீளமைக்கப்படுகின்றன. இசிக்-குல் பிரதேசத்தின் நிர்வாக நகரான காராக்கோல் இவ்வேரியின் கிழக்கு முனையை அண்டி உள்ளது. வரலாறுதூர கிழக்குக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருந்த பழைமையான பட்டுப்பாதையில் இது ஒரு தரிப்பிடமாக இருந்தது. மதகுருவும் கல்வியிலாளருமான சீனப் பயணி சுவான்சாங், ஏழாம் நூற்றாண்டில் இந்த ஏரி வழியாகப் பயணம் மேற்கொண்டு அது குறித்த தகவல்களைத் தனது மேற்குப் பிரதேசங்கள் குறித்த பெரிய தாங் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த ஏரி சிங் அரசமரபின் உடைமையாக இருந்து பின்னர் உருசியாவிடம் கொடுக்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டில் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவிய கறுப்புச் சாவு என்ற தொற்று நோயின் பிறப்பிடமாகப் பல வரலாற்றாய்வாளர்கள் இவ்வேரியையே கருதுகின்றனர்.[7] 1916 இல் இசிக்-குல்லில் உள்ள மடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதில் ஏழு பௌத்த துறவிகள் கொல்லப்பட்டனர்.[8] சுற்றுச் சூழல்கிர்கிஸ்தானின் முதலாவது பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இசிக்-குல் பிரதேசம் இப்பிரதேசத்தின் இயற்கை வனப்பைப் பேணும் வகையிலும் அன்செரிபார்மஸ் பறவையினத்தைப் பாதுகாக்கும் வகையிலும் 1948இல் உருவாக்கப்பட்டது. 1975இல் இது ஒரு ராம்சார் சாசனப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. பல இவ்வேரிக்கே உரிய மீன் இனங்களை இந்த ஏரி கொண்டுள்ளது. இவற்றுள் சில அருகிவரும் இனங்கள் ஆகும். ஆர்மேனியாவில் உள்ள செவான் ஏரிக்குரிய இனமான செவான் டிரௌட் என்ற மீனினம் 1970களில் இவ்வேரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செவான் ஏரியில் அருகி வரும் அதேவேளை இசிக்-குல் ஏரியில் நன்கு பரவியுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia