இரண்டாம் சேனன்இரண்டாம் சேனன் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னர்களுள் ஒருவன். முதலாம் சேனனின் சகோதரன் கசபனின் மகனான இவன் முதலாம் சேனனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தான். கி. பி. 853 இல் அரியணை ஏறிய இரண்டாம் சேனன் கி. பி. 887 வரை ஆட்சி செய்தான். இளம் வயதிலேயே இவனுடைய வலிமையையும், ஆற்றலையும் கண்ட முதலாம் சேனன் இவனை நாட்டின் தென்பகுதிக்கு ஆளுனன் ஆக்கினான். முதாலாம் சேனன் இறந்ததும், தெற்கிலிருந்து அனுராதபுரத்துக்குப் படைகளுடன் வந்த இரண்டாம் சேனன் தன்னைத் தானே அரசனாக அறிவித்துக்கொண்டான்.[1] இயல்புகள்இறை பக்தி உள்ளவனாகவும் அதே நேரம் வலிமை கொண்டவனாகவும், செல்வம் பொருந்தியவனாகவும் அதேவேளை பேராசை அற்றவனாகவும் இருந்ததுடன், அறம் செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும், நல்லியல்புகளைக் கொண்டவனாகவும், வலிமை பொருந்திய படைகளையும் போர்த்தளவாடங்களையும் உடையவனாகவும், நல்லது கெட்டதைப் பிரித்தறியக் கூடியவனாகவும், விடயங்களைப் பற்றி நுணுகி அறியும் திறன் கொண்டவனாகவும் இரண்டாம் சேனன் இருந்தான் என மகாவம்சம் கூறுகிறது. தன்னுடைய சொத்து, வருமானம் முதலியவற்றைத் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கியவன், நாட்டின் நலன்கருதி ஆட்சியை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டானாம்.[2] பாண்டி நாட்டுப் போர்பாண்டியன் சீமாறன் சீவல்லபன், முதலாம் சேனன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்து அனுராதபுரத்தில் இருந்த புத்த சின்னங்களையும், பெருஞ் செல்வத்தையும் எடுத்துச் சென்றதற்கும் பழிவாங்கும் முகமாகவும், அச்செல்வங்களைத் திருப்பிக் கொண்டுவரும் நோக்குடனும், சீவல்லபனுக்கு எதிராக இயங்கிய இளவரசன் ஒருவனுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க முடிவு செய்தான். தளபதி ஒருவன் தலைமையிலான சிங்களப் படைகள் சீவல்லபனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றதுடன், மதுரையையும் சூறாயாடி, இலங்கையில் இருந்து பாண்டியனால் முன்னம் எடுத்துச் செல்லப்பட்ட செல்வங்களையும், கிடைத்த பிற செல்வங்களையும் எடுத்துக்கொண்டு இலங்கை மீண்டதாக மகாவம்சம் கூறுகிறது. அத்துடன், திருப்பிக் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டதாகவும், நாடு பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அந்நூல் எடுத்துரைக்கிறது.[3] ஆனால் மகாவம்சத்தின் கூற்று உண்மையல்ல என்றும், போரில் சிங்களப் படைகள் தோற்றுத் திரும்பியதாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[4] அறங்கள்இரண்டாம் சேனன், மக்களின் நல்வாழ்வுக்காகவும், புத்த சமயத்தின் வளர்ச்சிக்காகவும் பல அறங்களைச் செய்ததாகத் தெரிகிறது. ஆயிரம் பிராமணர்களுக்கு பெறுமதியான பொருட்களும், பொன்னால் செய்யப்பட்ட பூணூலும் தானமாக வழங்கியது பற்றியும் குறிப்புகள் உள்ளன. மேலும், அவனது ஆட்சியின் கீழ் துணை அரசனும், பிற அரச குடும்பத்தினரும் கூட அறச் செயல்களில் ஈடுபட்டனர். பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்ததாக மகாவம்சம் இந்த அரசனைப் புகழ்கிறது.[5] இறப்புஇரண்டாம் சேனன் தனது 35 ஆவது ஆட்சியாண்டில் காலமானான். அவ்னுக்குப் பின் அவனது தம்பியான உதயன் அரசனானான். மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia