இரத்தச் சர்க்கரை![]() இரத்தக் குளுக்கோசுச் செறிவு அல்லது இரத்தச் சர்க்கரை அளவு என்பது மனிதர்களில் அல்லது விலங்குகளில் இரத்தத்தில் கலந்திருக்கும் குளுக்கோசின் அளவைக் குறிப்பதுவாகும். மனித உடலானது இதனைப் பொதுவாக 3.6 - 5.8 மில்லி மோல்/ லீட்டர் அளவில் பேணுகிறது. குளுக்கோசு ஆனது உயிரணுக்களுக்குப் பிரதானமான சக்தி வழங்கியாகத் தென்படுகிறது, இது குடலில் இருந்து அகத்துறிஞ்சப்பட்டு, கல்லீரலில் இருந்து உயிரணுக்களுக்கு குருதியருவி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. உயிரணுக்களுக்குள் உட்செல்லுவதற்கு இன்சுலின் எனும் கணையத்தில் சுரக்கப்படும் இயக்குநீர் துணைபோகின்றது. சராசரி இரத்தச் சர்க்கரை அளவு நான்கு மில்லி மோல்/ லீட்டர் (72 மில்லிகிராம்/ டெசிலீட்டர்) ஆகும், ஆனால் இதன் அளவு வெவ்வேறு சந்தர்ப்பங்களைப் பொறுத்து வேறுபடும், உதாரணமாக, காலையில் சாப்பாட்டின் முன்னர் குளுக்கோசு அளவு குறைவாகவும், சாப்பாட்டின் பின்னர் உயர்ந்தும் காணப்படும்.[1][2][3] சாதாரண அளவு இடைவெளிகளில் இருந்து குளுக்கோசின் அளவு மாறுபடுதல் உடல்நல வேறுபாட்டைக் குறிக்கின்றது. குளுக்கோசின் அளவு உயர்வடைதல் இரத்தச் சர்க்கரை மிகைப்பு என்றும் குறைவடைதல் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்றும் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் நிரந்தரமான இரத்தச் சர்க்கரை மிகைப்பைக் கொண்டிருக்கிறது, நீரிழிவைப் போல ஏனைய சிலநோய்களும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமையைக் கொண்டிருக்கிறது. தற்காலிகமான இரத்தச் சர்க்கரை மிகைப்பானது மன அழுத்தம், காயங்கள், அறுவைச்சிகிச்சை, மாரடைப்பு, தொற்றுநோய்கள் போன்றவற்றால் ஏற்படலாம். மதுபானம் அருந்தலில் முதலில் சர்க்கரை அளவை மிகைப்பட்டு பின்னர் குறைத்துவிடும். சில குறிப்பிட்ட மருந்துகள் சர்க்கரையின் அளவைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia