உறுப்பு நீக்கம்
உறுப்பு நீக்கம் (Amputation) என்பது அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ உடல் உறுப்புக்கள் உடலில் இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை வலியிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் நோயிலிருந்தோ பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. புற்றுநோய், இழைய அழுகல் (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது ஒரு உடல் உறுப்பிற்கு நோய் பரவப் போகின்றது என்ற நிலையில் பாதுகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது.[1][2][3] பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம் (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். பனிக்குடப்பையினுள் முளைய விருத்தி நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, குருதியோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் குழந்தை குறிப்பிட்ட உறுப்பை இழந்தநிலையில் பிறக்கும். சில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம். சில கலாச்சார அல்லது சமய வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான சடங்காக மேற்கொள்ளப்படுகின்றது. பல்லி, தட்டைப்புழு, விண்மீன் உயிரி போன்ற சில பாலூட்டிகள் அல்லாத உயிரினங்களில் சில குறிப்பிட்ட உறுப்புக்கள் இழக்கப்படும்போது, அவை மீண்டும் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் மனிதரில் அப்படியான விலங்குகளில் போன்று உறுப்புக்கள் மீள உருவாவதில்லை. செயற்கை உறுப்பு பொருத்தல் (Prosthesis) மூலம் இழந்த உறுப்பை பிரதியீடு செய்வதன் மூலமோ , அல்லது உறுப்பு மாற்றம் (Organ transplantation) சிகிச்சை மூலமாகவோ தமது நிலையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia