உ. வே. சாமிநாதையர் நூலகம்![]() உ.வே.சாமிநாதையர் நூலகம் என்பது தமிழ் இலக்கியங்களைப் பதிப்பதில் ஈடுபட்ட உ.வே.சாமிநாதையர் அவர்கள் சேகரித்த நூல்களைக் கொண்ட நூலகம் ஆகும். உ.வே. சாமிநாதையர் நினைவாக, 1943-இல் சென்னை, பெசண்ட் நகர், அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்ட பொது நூலகம் ஆகும். இங்கு 1,832 நூல்களும்; 939 அரிய தமிழ்ச் சுவடிகளும், உ.வே.சா. தம் கைப்பட பிற தமிழ் அறிஞர்களுக்கு எழுதிய 3,000 கடிதங்களும் மற்றும் அவரின் நாட்குறிப்புகளும் உள்ளன.[1] மேலும் பல அச்சுப் பதிக்கப்படாத சுவடிகளும் இங்கு உள்ளன.[2] இந்நூலகம் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்நூலகம் காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[3] வரலாறு1942-ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதையர் மறைவுக்குப் பிறகு, அவரால் சேகரிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாத்து ஒரு நூலகமாக்க அவரது மகனான கலியாண சுந்தர ஐயர் விரும்பினார். இவரது விருப்பத்திற்கிணங்க பிரம்மஞான சபையின் உறுப்பினரும், கலாசேத்திராவின் தலைவியான ருக்மிணி தேவி அருண்டேல் அவர்கள் உ.வே.சா.வின் சேகரிப்பில் இருந்த சுவடிகளையும் அரிய குறிப்புகளையும் பெற்று, சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைமை அலுவலக கட்டடத்தில் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் என்ற பெயரில் நூல் நிலையத்தை 1943 சூலை 5 அன்று நிறுவினார். அந்த நூலகமானது இந்த இடத்திலேயே சுமார் இருபது ஆண்டுகள் இயங்கிவந்தது. அதன் பின்னர்த் திருவான்மியூருக்கு மாற்றப்பட்டு கலாசேத்திரா கட்டடத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்தது. இந்த நூலகத்துக்குச் சொந்த கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நூலகக் கட்டடம் கட்ட நடுவண் அரசு, பாதித்தொகையை ஏற்க முன்வந்தது. தமிழக அரசு அளித்த தொகை மற்றும் தமிழ் அன்பர்கள் அளித்த நன்கொடையைக் கொண்டு நூலகத்துக்குச் சொந்த கட்டடத்தைச் சென்னை, பெசன்ட் நகரில், அருண்டேல் கடற்கரைச் சாலையில் கட்டடம் கட்டும் பணிகள் 1962-இல் தொடங்கியது. பணிகள் முடிந்ததையடுத்து 1967, மே 22 அன்று திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் நுழைவாயியில் 1997-ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதையருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.[4] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia