எச். என். ரிட்லி
சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி (Henry Nicholas Ridley[1], 10 டிசம்பர் 1885 - 24 அக்டோபர் 1956) என்பவர் மலாயாவில் (இப்போதைய மலேசியா) ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர்.[2] இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர்.[3] இவருடைய படங்கள் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் இன்றும் இருக்கிறது. அந்த மரத்தின் வயது 135.[4] வரலாறு‘ரப்பர் ரிட்லி’ என்று அன்பாக அழைக்கப்படும் சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி, இங்கிலாந்தில் உள்ள நார்போல்க் எனும் இடத்தில் 10 டிசம்பர் 1885 ஆம் தேதி பிறந்தார். தகப்பனாரின் பெயர் ஆலிவர் மேத்தியூ ரிட்லி. தாயாரின் பெயர் லூயிசா போல். ரிட்லி கைக் குழந்தையாக இருக்கும் போதே தாயார் இறந்து விட்டார். இவர் சிறுவனாக இருந்த போது தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை மிகவும் விரும்பி ரசித்தார். எதிர்காலத்தில் தான் ஓர் இயற்கைவியலாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம்1877ஆம் ஆண்டு அறிவியல் துறையில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் பிரித்தானிய அரும்பொருள் காப்பகத்தில் ஓர் உதவியாளராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ரிட்லியின் பிரசாரம்ரிட்லி போகின்ற இடங்களுக்கு எல்லாம் ரப்பர் கொட்டைகளை எடுத்துச் செல்வார். அங்கு உள்ளவர்களிடம் அந்தக் கொட்டைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொல்வார். அவர் மேற்கொண்ட தீவிரமான பிரசாரங்களினால் பலர் ரப்பர் கன்றுகளை நட்டனர். முதன்முதலாக 22 ரப்பர் கன்றுகள் சிங்கப்பூருக்கு இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டன.[5] சிங்கப்பூரில் இருந்து ஒன்பது கன்றுகளை ரிட்லி 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார். அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. கொண்டு வரப்பட்ட கன்றுகளில் எட்டு கன்றுகள் இறந்துவிட்டன.[6] எஞ்சிய 13 கன்றுகள் சிங்கப்பூரில் நடப்பட்டன. அவற்றில் இரண்டு கன்றுகள் மட்டுமே பிழைத்தன. அந்த இரண்டும் பெரிய மரங்களாகி சிங்கப்பூரியர்களுக்கு காட்சி பொருளாக அமைகின்றன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது.[7] அவற்றின் வயது 135. மலாயாவில் முதல் ரப்பர் தோட்டம்ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகள் எடுக்கப்பட்டு மலாயாவின் மற்ற பகுதிகளில் நடப்பட்டன. அந்த ஒரே ஒரு மரத்தின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின. அந்தக் கன்றுகள் ஒட்டுக் கட்டப்பட்டு புதிய வகை கன்றுகள் உருவாக்கப் பட்டன. இதைத் தொடர்ந்து, 1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா உருவானது. மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் எஞ்சிய ஒரே ஒரு கன்று வளர்ந்து பெரிய மரமாகி இன்னும் கோலாகங்சாரில் மலேசிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் காட்சிப் பொருளாக உள்ளது. கோலா கங்சார் கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன்பாக அந்த மரம் இருக்கிறது. இப்போது அந்த மரத்திற்கு வயது 135 ஆகின்றது. ரிட்லியின் அணுகு முறைகள்ரப்பர் மரத்தின் பாலை மரத்திற்கு காயம் படாமல் சேகரிக்கும் புதிய அணுகு முறைகளை ரிட்லி உருவாக்கினார். ரப்பர் மரத்தின் பட்டைகளைச் சேதப்படுத்தாமல் சீவி எடுக்கும் முறையை உருவாக்கிக் கொடுத்த பெருமை ரிட்லி அவர்களையே சாரும். அந்தப் புதிய முறை மலாயா மக்களிடையே வெற்றி கண்டது. மலாயாவில் காபி தோட்டங்கள் போட்டவர்கள் எல்லாம் ரப்பர் கன்றுகளை நடத் தொடங்கினர். அதன் பின்னர், மலாயாவின் மூலை முடுக்குகள் எல்லாம் ரப்பர் தோட்டங்கள் தோன்றின. ரிட்லி போகும் இடங்களுக்கு எல்லாம் ரப்பர் விதைகளை தன் கால்பைக்குள் நிறைத்துக் கொண்டு போவார். யார் யாரைப் பார்க்கிறாரோ அவர்களிடம் எல்லாம் அந்த விதைகளைக் கொடுத்து நடச் சொல்லுவார். அவரே நட்டும் கொடுப்பார். தடங்கல்களும் வெற்றியும்அவர் மலாயாவில் இருந்த 30 ஆண்டு காலத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உருவாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தார். மலாயாவில் ரப்பர் தொழில்துறை துளிர் விட்டு வளர்ந்தது. ரிட்லியின் செல்லப்பெயர் ’திருவாளர் ரப்பர்’. சில இடங்களில் அவரை ’பைத்தியக்கார ரிட்லி’ என்றும் அழைத்தனர். அவருக்கு பலவித தடங்கல்கள், பலவித ஏச்சு பேச்சுகள், பலவகையான நெருக்குதல்கள் வந்தன. இருப்பினும், அவற்றையும் எல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுடைய ரப்பர் பயிரிடும் முறையை அமல்படுத்துவதிலேயே விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார். ஒரு கட்டத்தில் அவர் மனமுடைந்து இங்கிலாந்திற்கு திரும்பி விடலாமா என்று கருதினாலும் மலேசிய ரப்பர் மீது கொண்டிருந்த ஈடுபாட்டால் அவ்வாறு செல்லவில்லை. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ரப்பர் தொழிலை மேம்படுத்துவதிலேயே செலவழித்தார். மலாயா உலகப் பொருளாதார அரங்கில் இடம்பெற ரிட்லியே காரணமாவார். கண் பார்வையை இழந்தார்1912 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். அங்கு போயும் தாவர ஆராய்ச்சிகளைச் செய்தார். இருப்பினும், மலாயாவில் அவர் விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அவரை விடவில்லை. 1917-இல் ஐந்து ஆண்டுகள் கழித்து மறுபடியும் சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் வந்தார். அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து 1922-இல் மறுபடியும் வந்தார். அவருக்கு 83 வயதாகும் போது லில்லி எலிசா டோரான் எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1953-இல் அவரால் சரிவர நடக்க முடியாமல் போய்விட்டது. படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலாயாவில் உள்ள நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதி ரப்பர் மரங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார். அவருடைய 93ஆவது வயதில் கண் பார்வையை இழந்தார். அடுத்து செவிப் புலன்களின் தனமைகளையும் இழந்தார். இருந்தாலும் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் மலாயாவைப் பற்றியும் அங்கு இருக்கும் ரப்பர் மரங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார். இறப்பு24 அக்டோபர் 1956-இல் தன்னுடைய 101ஆவது வயதில் இங்கிலாந்தில் உள்ள சுர்ரேயில் சர்.ரிட்லி காலமானார். அவரின் நினைவாக உலகப் புகழ்பெற்ற கியூ தாவரவியல் பூங்காவில் ஒரு பகுதியை ரிட்லி பூங்கா என்றும் பெயர் சூட்டி அவருக்கு சிறப்பு செய்துள்ளனர். அவருடைய படங்கள், ஆய்வு நூல்கள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு மலேசிய அரும் பொருள் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மலேசியாவில் கோலாகங்சார், சுங்கை சிப்புட், தைப்பிங், ஈப்போ, ஜொகூர் பாரு, மலாக்கா போன்ற நகரங்களில் உள்ள பல சாலைகளுக்கு ரிட்லி சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விருதுகள்மலாயா, சிங்கப்பூர் நிலப்பகுதிகளில் அவர் ஆற்றிய தாவரவியல் சேவைகளுக்காக அவருக்கு நிறைய விருதுகள் கிடைத்தன. அவற்றுள் மிக முக்கியமானது இங்கிலாந்தின் ‘சர்’ பட்டம். இந்தப் பட்டம் 1911ஆம் ஆண்டு கிடைத்தது. அடுத்தபடியாக, 1907ஆம் ஆண்டு பிரித்தானிய வேந்திய அறிவியல் கழகத்தின் சக ஆய்வாளர் (Fellow of the Royal Society) எனும் கல்வி விருது அவருக்கு வழங்கப்பட்டது.[8] மலாயா மற்றும் சிங்கப்பூரிலிருந்து அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆய்வாளர் ரிட்லி. அதற்கு முன்னர் சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டான்பர்ட் ராபில்ஸுக்கு கிடைத்தது. உலகின் பல கலைக்களஞ்சியங்களிலும் ரிட்லியின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரை ரப்பர் தொழில்துறையின் தந்தை (Father of the Rubber industry) எனும் அடைமொழியுடன் சிறப்பு செய்கின்றன. இயற்கை ரப்பரை தென்கிழக்கு ஆசியாவில் பிரபலம் செய்த மனிதர் என்றும் புகழாரம் செய்கின்றன. ரிட்லியின் தாவர ஆய்வு நூல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia