எட்டாம் எட்வர்டு
எட்டாம் எட்வர்டு (Edward VIII, 23 சூன் 1894 – 28 மே 1972) என்பவர் ஐக்கிய இராச்சியம், மற்றும் மேலாட்சிகளின் அரசராகவும், இந்தியாவின் பேரரசராகவும் 1936 சனவரி 20 முதல் 1936 திசம்பரில் முடிதுறக்கும் வரை பதவியில் இருந்தவர்.[a] எட்வர்ட் தனது முப்பாட்டி விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் போது யோர்க் கோமகன் (பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்), ராணி மேரி ஆகியோரின் மூத்த குழந்தையாக 1894 சூன் 23 இல் பிறந்தார். அவரது தந்தை மன்னராக ஆன ஏழு வாரங்களுக்குப் பிறகு, எட்வர்ட் அவரது 16வது பிறந்தநாளில் வேல்சு இளவரசராக்கப்பட்டார். ஒரு இளைஞனாக, எட்வர்ட் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றினார். அவரது தந்தையின் சார்பாக பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். வேல்சு இளவரசராக இருந்தபோது, தந்தை, மற்றும் பிரித்தானியப் பிரதமர் இசுட்டான்லி பால்ட்வின் இருவரையும் கவலையடையச் செய்த தொடர் பாலியல் விவகாரங்களில் ஈடுபட்டார்.[2][3] 1936 சனவரி 20 இல், அவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு, எட்வர்ட் வின்சர் மாளிகையின் இரண்டாவது மன்னரானார்.[4] புதிய மன்னர் நீதிமன்ற நெறிமுறையில் பொறுமையின்மையைக் காட்டினார், அத்துடன் நிறுவப்பட்ட அரசியலமைப்பு மரபுகளை அவர் வெளிப்படையாக புறக்கணிப்பதன் மூலம் அரசியல்வாதிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.[5] அவரது ஆட்சியின் சில மாதங்களில், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது கணவரிடமிருந்து விவாகரத்து கோரிய அமெரிக்கரான வாலிசு சிம்ப்சன் என்பவரைத் திருமணம் செய்து கொள்ள அவர் முன்மொழிந்ததால் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. ஐக்கிய இராச்சியம் மற்றும் மேலாட்சிகளின் பிரதம மந்திரிகள் இத்திருமணத்தை எதிர்த்தனர். விவாகரத்துப் பெற்ற பெண் ஒருவர் முன்னாள் கணவர்கள் இருவரும் உயிருடன் இருக்க வருங்கால மனைவியாகவும் அரசியாகவும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். கூடுதலாக, அத்தகைய திருமணம் எட்வர்டின் இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற தராதரத்திற்கும் ஏற்றதல்ல. அன்றைய காலகட்டத்தில் முன்னாள் கணவர் உயிருடன் இருக்க விவாகரத்துக்குப் பிறகு மறுமணத்தை திருச்சபை ஏற்றுக் கொள்வதில்லை.[6] திருமணம் நடந்தால் பால்ட்வின் அரசாங்கம் பதவி விலகும் என்று எட்வர்டு அறிந்திருந்தார், இது ஒரு பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் ரீதியாக நடுநிலையான அரசியலமைப்பு மன்னராக தனது நிலையை அது அழித்துவிடும் என்று எட்வர்ட் கருதினார். இதனால் அவர் சிம்ப்சனைத் திருமணம் செய்துகொண்டு அரியணையில் இருக்க முடியாது என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்ததும், அவர் முடி துறந்தார்.[1][7] அவருக்குப் பிறகு அவரது இளைய சகோதரர் ஆறாம் சியார்ச் மன்னரானார். இதன்மூலம் 326 நாட்களின் ஆட்சியுடன், எட்வர்ட் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி செய்த பிரித்தானிய மன்னர் ஆவார். முடி துறந்ததன் பின்னர், எட்வர்ட் வின்ட்சர் பிரபுவாக பதவியேற்றார்.[8] சிம்ப்சனின் இரண்டாவது விவாகரத்து இறுதியான பிறகு, 1937 சூன் 3 இல் பிரான்சில் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், தம்பதியினர் நாட்சி செருமனியில் சுற்றுப்பயணம் செய்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, எட்வர்ட் முதலில் பிரான்சுக்கான பிரித்தானிய இராணுவ நடவடிக்கையில் நிறுத்தப்பட்டார்,[5] எனினும் அவர் ஒரு நாட்சி ஆதரவாளர் என்று தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படவே,[9][10] அவர் பகாமாசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். போருக்குப் பிறகு, எட்வர்ட் தனது வாழ்நாள் முழுவதையும் 1972 இல் இறக்கும் வரை தனது மனைவியுடன் பிரான்சில் கழித்தார். குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia