எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு எனப்படுவது எய்ட்சு நோய் பரவலைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில்,அமைப்புகள் மூலம் ஏற்படுத்துதலாகும்.

எய்ட்ஸ் ஒரு தீ நுண்மத்தால் (வைரசால்) பரவும் நோய்

எச்.ஐ.வி எனும் வைரஸினால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம். பக்டீரியா (Bacteria), பங்கஸ் (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம். சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும். தற்போது இலங்கையில் மிக வேகமாகப்பரவி வரும் பன்றிக் காய்ச்சலும், A H1N1 வைரஸ் தொற்றின் காரணமாகவே பரவுகின்றது.

வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து, பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell) தேவை. அது பெருகும் போது, தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக்கூடும்; அல்லது செயற்திறனைப் பாதிக்கக்கூடும்.

எயிட்சை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குகின்றது. நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீ-ஹெல்பர் கலங்களையே (T-helper Cell) இது முக்கியமாகத் தாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். HIV வைரஸ் தொற்றியிருக்கும் கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது.

வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எயிட்ஸின் தன் வரலாறு

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும். முதலில் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள '''தேசிய புற்று நோய் நிறுவனம்''' இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V – type III வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency (நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

HIV வைரஸின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை HIV-I என்றும், பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV – II என அழைக்கிறார்கள்.

எயிட்ஸ் பரவுதல் தன்மை

பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுறுப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. எனவே ஆண் பெண் உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகின்றது. எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவர்களாக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகையில் சுத்தம் செய்யாப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையின் போது சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், HIV பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் HIV உள்ள இரத்தம் மூலமாகவும் எளிதாக பரவுகிறது.

பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் எனும் போதுகர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் குழந்தைக்கு HIV பரவுகிறது. எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும். அதே நேரம் கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும், பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படக்கூடிய நிகழ்தகவு அதிகம். HIV தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல், புகையிரதம் மற்றும் பஸ் வண்டிகளில் பயணம் செய்தல், வியர்வை, கண்ணீர், சிறுநீர் மற்றும் முத்தமிடல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ, நீச்சல் குளம் மற்றும் இருமல், தும்மல், கொசுக்கடி மூலமாகவோ பரவாது. இருப்பினும் பொது இடங்களில் சவரம் செய்து கொள்ளும் ஆண்கள் பொதுக் கத்திகளைப் பயன்படுத்தாமல் புதிய சவர அலகுகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

எயிட்ஸ் அறிகுறிகள்

  • அறிகுறிகள் HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது “ஃப்ளு சுரமாக” (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித்துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும். “எய்ட்ஸ்” வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எய்ட்சு தெரிந்து கொள்ள வழி

எச்.ஐ.வி தொற்றடைந்தோர் நீண்டகாலம் செல்லும் வரை எவ்வித நோயறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.எனவே புறத்தே தென்படும் பண்புகளை கொண்டு அவர்களை இனம்காண முடியாது.எச்.ஐ.வி தொற்றடைந்துள்ளோரை இனம்காணப்படுவதற்கு மிகச் சிறந்த முறை அவர்களது இரத்தத்தில் அடங்கியுள்ள எச்.ஐ.வி பிறபொருளெதிரிகளை இனம்காண்பதாகும். இதற்காக இரண்டு வகை இரத்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை, எலைசா சோதனையாகும். இது இனம்காணல் பரிசோதனை எனப்படுகிறது. எலைசா சோதனையானது எச்.ஐ.வி தொற்று அல்லாத பிற காரணங்கள் தொடர்பாகவும் நேர் வகை பெறுபேற்றை தர இடமுண்டு. வெஸ்டர்ன் புலொட் சோதனை இது உறுதிப்படுத்தும் சோதனையாகும். எலைசா சோதனையில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் வெஸ்டர்ன் புலொட் சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனையாகும். இரத்த வகையில் எச்.ஐ.வி பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.

எலைசா சோதனை, வெஸ்டர்ன் புலொட் சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் நேர்(+ )வகை காணப்பட்டால் எச்.ஐ.வி பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.

யாரெல்லாம் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளலாம்?

தமது பாலியல் நடத்தைகள் தொடர்பாக ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப்படுவதாக இருந்தால், மேலும் வேலை வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். அதேபோல இரத்ததானம் செய்யப்படும்போது இரத்த மாதிரி ஒவ்வொன்றிலும் எச்.ஐ.வி தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல் அவசியம். இத்தகைய சந்தர்ப்பங்களில் இரத்த சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும். மேலும், சுய விருப்பின் பேரிலும் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். இத்தகைய இரத்த சோதனைகள் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிலையங்களிலும், அரசாங்க, தனியார் வைத்தியசாலைகளிலும், இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்களிலும், விசேட இரத்த பரிசோதனைக் கூடங்களிலும் இச்சோதனைகளை செய்து கொள்ளலாம். எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அறுவுத்தலானது மிக உறுத்துணர்வுடைய ஒன்றாக அமையக் கூடுமாதலால் சோதனைப் பெறுபேற்றை அறிந்து கொள்ளத்தக்க வகையில் அவரைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். இரத்தச்சோதனைக்கு உள்ளானவருக்கே சோதனை தெரிவுகள் வழங்கப்படும். அதன் அந்தரங்கத் தன்மையைப் பேணுவது சுகாதார ஊழியர் ஒருவரினதும் பொறுப்பாகும். நோய் பற்றித் தீர்மானிப்பதற்காக எச்.ஐ.வி சோதனை நடத்துதல். இச் சோதனை தெரிவுகள் அதனைக் கோரிய வைத்தியருக்கு மாத்திரமே வழங்கப்படும். ஒவ்வொரு சுகாதார ஊழியரும் சோதனையின் அந்தரங்கத் தன்மையைப் பேணக்கடமைப்பட்டுள்ளனர்..

எயிட்ஸ் மருந்துகள்

HIV தொற்று ஏற்பட்ட பின்பு அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது. இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு உண்டு.

HIV யைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பொதுவாக '''ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்''' (Antireteoviral Drugs) என்று அழைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக ஆன்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை பயன்படுத்துபவர்கள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். HIV க்காக மாத்திரமல்லாமல் அபாயகரமான வைரஸ் தொடர்பாக எத்தகைய தொற்றுக்களுக்கும் இது பொருந்தும். சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மாத்திரமன்றி வைத்தியர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்தை உரியநேரத்தில் உட்கொள்ளுதல் அவசியமானதாகும். மாறாக தான் நினைத்தவாறு மருந்துகளை உட்கொண்டால் அதன் பலன் குறைவாகவே இருக்கும். மேலும், தொடர்ச்சியாக மருத்துவரை உரிய நேரத்தில் சந்தித்து ஆலோசயைப் பெறுவதினூடாக, தான் உட்கொள்ளும் மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கிக் கொள்ளவும் முடியுமானதாக இருக்கும். ஒரு முறை ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை பயன்படுத்த வேண்டும். எனினும் இம்மருந்து வகைகளுக்கு அதிக பணம் செலுத்தவேண்டியதால் சிலர் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் தற்போது இம்மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம், HIV ஆனது இம் மருந்து வகைகளுக்கு இசைவாக்கமடைந்து எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து நிலையும் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் HIV தொற்றடைந்தோருக்காகப் பெரும்பாலும் ஏக காலத்தில் இரண்டு அல்லது மூன்று வகை மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. இவ்வாறான நிலைமைகளில் வைரஸின் இசைவாக்கத்தன்மை குறைவடையலாம்.

HIV தொற்றுக்கு பெரும்பாலும் பின்வரும் மருந்து வகைகளே பயன்படுத்தப்படுகின்றன. 1.Nucleoside analogues 2.NonNucleoside reverse trancriptasinhibirors 3.Protese inhibitors இந்த மருந்து வகைகள் வெவ்வேறு வர்த்தகப் பெயரில் சந்தையில் காணப்படுகின்றன.

ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்

ஆல்பேர்டா பல்கலைக்கழக (University of Alberta) விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM 22 என்ற ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி scienceblog.com ல் வெளியாகியுள்ளது. இந்த பரம்பரை அலகானது எச்.ஐ.வி வைரஸ் மனித கலங்களில் பெருகுவதைத்த தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கண்டுள்ளனர். ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் வைரஸ் தொற்றை அழிக்கும் முறையை இன்னும் அவர்கள் கண்டறியவில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸக்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.

தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி -1 தடுப்பூசி தயாரிப்பதென்பது கடினமான இலக்காகவே உள்ளது.

தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும். எச் ஐ வி தொற்றின் வீச்சு குறைகிறது – ஐ நா தெரிவிப்பு

கடந்த எட்டு ஆண்டுகளில் புதிதாக ஏற்படும் எச் ஐ வி தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அறிக்கை குறிப்புணர்த்தியுள்ளது. எயிட்ஸ் நோய் எதிர்ப்பில் செயலாற்றிவரும் ஐ.நா மன்ற அமைப்பின் அறிக்கையில், சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆபிரிக்க நாடுகளில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ வி தொற்றுக்களின் எண்ணிக்கை 4 லட்சமாகக் குறைந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு காரணமாக இருந்ததாக ஐநா மன்றத்தின் எயிட்ஸ் நோய் தடுப்புப்பிரிவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய் தன்னை தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதை தடுக்கும் நடைமுறைகள் சென்று அடைவதில்லை என்றும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக அரசின் இலவச மருத்துவ சிகிச்சை

  • 2-3 வருடம் தொடர்சிகிச்சை
  • இலவச இரத்த பரிசோதனை
  • தேவைப்பட்டால் உள்நோயாளியாக அனுமதி
  • மாதம் ஒரு முறை தாம்பரம் சென்றால் போதும்
  • மாதம் 2000-3000க்கு மருந்து இலவசம்

சிகிச்சை கிடைக்கும் இடங்கள்:

  • தாம்பிரம் டி.பி மருத்துவமனை
  • தண்டையார்பேட்டை அரசு மருந்துவமனை
  • மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனை

HIV தொற்று வராமல் இருக்க…

எய்ட்ஸ் பாதுகாப்பு HIV தொற்றுவராமல் இருக்க தடுப்பூசிகளோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும். பிரதானமாக உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தலுக்கான பூரண முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான உடலுறவுக்குப் பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.

ஒருவருக்கொருவர். உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் அவசியமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும். மேற்கத்தேய நாடுகளைப் போல எண்ணற்ற நபர்களுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்

பிற பாதுகாப்பு முறைகளிலும் அவதானம் செலுத்துதல் வேண்டும். ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை ஏற்க வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கருவுற்ற பெண்கள், “தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை” அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும். ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!

எய்ட்ஸ் நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக பள்ளி கல்வித்துைறை AIDS பற்றிய விழிப்புணர்வு போட்டிகளை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது.

எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொதுவாக வேண்டப்படாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இது தவறு. ஒரு எயிட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும்கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எயிட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. எயிட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தெரிந்து தெளிவடைதல், ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தையும் அதற்கு உட்பட்டவர், அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும்.

மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே மருத்துவர், ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும். அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதோ, விடுவதோ என்று வைத்தியர் முடிவெடுக்க வேண்டும். எயிட்ஸ் பாதிப்பானது மற்ற நோய்களிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். தெரிவித்த பின் வேறு ஒரு பரிசோதனையை மேற்கொள்ளல் கூடாது. இது நோயாளிகளின் உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நோயாளிகளினால் நீதி மன்றத்தை அணுக முடியும். ஆனால் HIV . மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர்.

வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை எனும் போது ‘எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும்.” இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனியாரிடம் இது காணப்படுவது குறைவு. இது குறித்து சட்டம் தெரிவிக்கும் கருத்து, அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவனங்களோ, அல்லது தனியார் துறையோ தங்களிடம் பணிபுரிந்தவர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும்.

தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும். எனவே எயிட்ஸ் நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம். அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக் குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால் HIV உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே HIV எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்.

எய்ட்சு வந்து விட்டால்: மனம் தளராமல், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அமைதியாக வாழப் பழகிக் கொள்வதுடன், மிகுந்த ஓய்வு எடுப்பதுடன் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.

புள்ளிவிபரம்

  • உலகில் ஒரு மணி நேரத்தில் 600 நபர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்படுகிறார்கள்
  • உலகில் ஒரு நிமிடத்தில் ஒரு குழந்தை எய்ட்ஸ் மூலம் இறக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் 2006 கணக்கெடுப்பின்படி உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் தொடர்புடைய நோயின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியனாக அதிகரித்திருந்தது. 39.5 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 4.3 மில்லியன் மக்கள் புதிதாக நோய் காவப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவின் சகாராப் பாலைவனப்பகுதியை அண்மித்த பகுதி எய்ட்ஸ் நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். 2007-ல் அப்பகுதியில் எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 % ஐயும், எயிட்ஸினால் மரணமடைந்தவர்களில் 76% ஐயும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பின்பு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் உள்ளடக்கியிருந்தது. ஏனைய பகுதிகளைப் போலல்லாமல் சகாராவை அண்மித்த பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61% பேர் பெண்களாவர். தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன.

கர்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க முடியும்:- கர்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க வசதி தற்பொழுது அனைத்து மருத்துவ கல்லுரி மருத்துவ மனையிலும், மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya