எரியும் மனிதன்
எரியும் மனிதன் (Burning Man) எனப்படும் விழா ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அமெரிக்காவின் நெவாடாவில் கரும்பாறை பாலைவனத்தில் இதற்காக உருவாக்கப்படும் தற்காலிக குடியிருப்பில் கொண்டாடப்படுகின்றது. இந்த விழா குமுகாயம் மற்றும் கலைக்கான பரிசோதனையாக விவரிக்கப்படுகின்றது; "மாற்றாளர் ஏற்பு", குமுகாய ஒத்துழைப்பு, "மாற்றுக்கருத்தியல் வெளிப்பாடு", "பகுத்தறி தன்னம்பிக்கை", கொடையளித்தல், பண்டமாக்கலுக்கு எதிர்ப்பு, மற்றும் எந்தவொரு தடயமுமின்றி விட்டுச் செல்லுதல் என்பன போன்ற 10 முதன்மைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது முதன்முதலில் 1986இல் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள பேக்கர் கடற்கரையில் சிறு விழாவாக இலேர்ரி ஆர்வி என்பவராலும் அவரது நண்பர் குழாமாலும் துவங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதத்தின் கடைசி திங்கட்கிழமையிலிருந்து செப்டம்பர் முதல் நிங்கட்கிழமை (அமெரிக்கத் தொழிலாளர் நாள்) வரை நடத்தப்படுகின்றது. இந்த விழாவின்போது வருகையாளர்களாலும் பிறராலும் பல்வேறு கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன; ஒருங்கிணைப்பாளர்களால் அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தை ஒட்டி சோதனையோட்டமாக அல்லது எதிர்வினை ஆற்றும் வகையான காட்சிகள், நிகழ்ச்சிகள், கலை உந்திகள் உருவாக்கப்படுகின்றன. இடையில்வரும் சனிக்கிழமையன்று சடங்காக எரிக்கப்படும் பெரிய மர உருவபொம்மையை ஒட்டி இவ்விழா எரியும் மனிதன் என அழைக்கப்படுகின்றது.[2][3][4][5] இந்த விழாவிற்குப் பலர் செல்கின்றனர்; 2012ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்திற்கு 55,000 மக்கள் குழுமினர். கரும்பாறை பாலைவனம் மற்ற நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் தொலைவில் இருப்பதால் இவ்விழாவிற்குச் செல்பவர்கள் தங்களுக்கான தேவைகளை, குடிநீர், உணவு, தங்கும் கொட்டகை ஆகியவற்றை, எடுத்துச் செல்ல வேண்டும். மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia