எழுத்துருச் சட்டம்

Grand Duchy of Lithuania-வின் எழுத்துருச் சட்டம், போலிஷ் மொழியில் எழுதப்பட்டது

ஓர் எழுத்துருச் சட்டம் (Statute) என்பது ஒரு நாடு அல்லது மாநிலம் அல்லது நகரத்தின் சட்டமியற்றும் அமைப்பால் முறைப்படி எழுதப்பட்ட சட்டமாகும்[1]. பொதுவாக, எழுத்துருச் சட்டங்கள் கட்டளைகளாகவோ, சிலவற்றைத் தடைசெய்வதாகவோ அல்லது கொள்கைகளை அறிவிப்பதாகவோ இருக்கும்[1]. எழுத்துருச் சட்டங்கள் சட்டமியற்றும் அமைப்புகளால் உருவாக்கப்படும் சட்டங்களாகவும், நீதியக தீர்ப்பினால் ஆகும் சட்டத்தில் இருந்தும், அரசு முகமைகள் கொண்டுவரும் கட்டுப்பாடுகளில் இருந்தும் மாறுபட்டதுமாகும்[1]. எழுத்துருச் சட்டங்கள் சில வேளைகளில் Legislation எனவும் அறியப்படுகிறது. எழுத்துருச் சட்டம், சட்டக் காரணிகளில் முதன்மைப் பொருளாகக் கருதப்படுகிறது. அனைத்து எழுத்துருச் சட்டங்களும், அந்தந்த ஆட்சிப் பகுதிகளின் அரசியல் அமைப்புச் சட்டம் அல்லது அடிப்படைச் சட்டத்துடன் இணங்கிய வடிவில் காணப்படும்.

எழுத்துருச் சட்டத்தின் பொதுத் தன்மை

எழுத்துருச் சட்டம் எனும் சொல் பொதுச் சட்டத்திற்கு எதிர்மறையாகப் பயன்படுத்தப் படுகிறது. நடைமுறைக்கு வரும் நாள் எதுவும் குறிப்பிடப்படாவிட்டால் எழுத்துருச்சட்டங்கள் இயற்றப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வரும். எழுத்துருச் சட்டங்கள் பல்வகைப்படும். அவை பொது அல்லது தனியார் சார்ந்ததாக; அறிவிப்பு அல்லது தீர்வாக; தாற்காலிகம் அல்லது நிரந்தரமானதாக இருக்கலாம். ஒரு தாற்காலிக எழுத்துருச் சட்டம் என்பது, அதன் காலாவதி அது இயற்றப்படும் போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இது நீக்கப் படாவிட்டால், இதன் காலாவதி தீரும் வரை நடைமுறையில் இருக்கும். ஒரு நிரந்தர எழுத்துருச் சட்டம் என்பது, அது தொடர்ந்து நடைமுறையில் இருக்க அதில் எந்தவொரு காலாவதியும் உட்படுத்தாமல் இருப்பதாகும். சில நாடுகளில், ஓர் எழுத்துருச் சட்டம், சட்டம் ஆவதற்கு முன் அந்நாட்டு அரசின் உயர்த்த ஆட்சியகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டு சட்டத்தொகுப்பின் பாகமாக வெளியிடப்பட வேண்டும். பெரும்பாலான தேசங்களில் தலைப்பு வாரியாக ஒழுங்குப்படுத்தப் பட்டு அல்லது வகைப்படுத்தப் பட்டு வெளியிடப் பட்டிருக்கும். பல்வேறு நாடுகளில் எழுத்துருச் சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து வேறுபட்டதும், ஆனால் அதற்கு கீழ்ப்படிவதாகவும் அமைந்திருக்கும்.

எழுத்துருச் சட்டத்தின் வகைப்பாடு

எழுத்துருச் சட்டங்களில் பல வகைகள் உண்டு. எழுத்துருச் சட்டங்கள் பொதுவாக அதன் கால அளவு, அமைப்பு ரீதி, குறிக்கோள், பயன்பாட்டின் அளாவல், மற்றும் பயன்பாட்டின் தன்மை ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.

1. கால அளவின் படியான வகைப்பாடு (Classification based on duration of time)

இதன் கீழ், எழுத்துருச் சட்டங்கள் (a) தாற்காலிக எழுத்துருச் சட்டம் மற்றும் (b) நிரந்தர எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது.

தாற்காலிக எழுத்துருச் சட்டம் (Temporary Statutes)

தாற்காலிக எழுத்துருச் சட்டங்களில் அது அமலில் இருக்கும் கால அளவு நிச்சயிக்கப்பட்டு இருக்கும். செய்யுளின் காலாவதி முடிந்த பின்பும் இது தொடர வேண்டும் என சட்டமியற்றகம் கருதினால் புதிய சட்ட நிர்மானம் தேவைப்படும். நிதி செய்யுள் ஒரு தாற்காலிகமான எழுத்துருச் சட்டமாகும் மற்றும் இது ஒவ்வொரு ஆண்டும் இயற்றப்பட வேண்டும்.

நிரந்தர எழுத்துருச் சட்டம் (Permanent Statute)

நிரந்தர எழுத்துருச் சட்டத்தில் அது அமலில் இருக்கும் கால அளவு குறிப்பிடப்பட்டு இருக்காது. ஆனால் இத்தகைய எழுத்துருச் சட்டங்கள் சட்டமியற்றகம் தீர்மானித்தால் திருத்தப்படவோ, நீக்கப்படவோ அல்லது மாற்றி அமைக்கவோ முடியும்.

2. திட்ட ரீதியான வகைப்பாடு (Classification based on method of operation)

இதன் கீழ் (a) நிர்பந்திக்கும் எழுத்துருச் சட்டம் மற்றும் (b) அறிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது.

நிர்பந்திக்கும் எழுத்துருச் சட்டம் (Mandatory Statute)

ஏதேனும் ஒரு காரியத்தை நிர்ணயிக்கப்பட்ட முறையில் செய்திட கட்டாயப்படுத்துவதாக இருக்கும். இதை மீறினால் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அறிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் (Directory Statute)

ஏதேனும் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தாமல் அனுமதித்தலாகவோ அறிவுறுத்தலாகவோ இருக்கும். இதை மீறினால் தண்டனைக்குள்ளாக்க முடியாது.

3. குறிக்கோள் அடிபடையிலான வகைப்பாடு

இதன் கீழ், (a) தொகுத்தல், (b) ஒன்றாக்கல் (c) தெரிவுறுத்தல் (d) தீர்வுகாணல் (e) அதிகாரப்படுத்தல் (f) பலவீனமாக்கல் (g) தண்டனைக்குள்ளாக்கல் (h) வரி விதித்தல் (i) விளக்கியுரைத்தல் (j) சீர்திருத்தல் (k) நீக்குதல் (l) குணமேன்மையாக்கல் எழுத்துருச் சட்டங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.

தொகுத்தமை எழுத்துருச் சட்டம் (Codifying statutes)

இந்த எழுத்துருச் சட்டம் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான சட்டம் முழுமையாக தொகுத்து அமையப்பெறும். இதில் முன்னால் நிலுவையில் இருந்த இந்த விடயம் தொடர்பான வேறுபட்ட எழுத்துருச் சட்டங்களில் ஏற்பாடுகளும் இது தொடர்பான பொதுச் சட்டமும் காணப்படும். எ.கா இந்து சட்டத்தொகுப்பு.

ஒன்றாக்கும் எழுத்துருச் சட்டம் (Consolidating statutes)

இத்தகைய எழுத்துருச் சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தின் மேலான சட்டத்தை ஒன்றாக்கி அமைக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான அனைத்து எழுத்துரு நியமங்களையும் சேகரித்து தேவைப்பட்டால் சிறிய திருத்தங்கள் மூலம் ஒரே எழுத்துருச் சட்டமாக வடிவம் தருவதாகும். எ.கா. இந்து திருமணச் செய்யுள், 1955.

தெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் (Declaratory statute)

நிலுவையில் உள்ள சட்டத்திலுள்ள சந்தேகத்தை களைவதே இந்த எழுத்துருச் சட்டத்தின் நோக்கமாகும். நிலுவையில் உள்ள எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகளில் அல்லது பொதுச் சட்டத்தில் ஏதேனும் கூற்று தவறுதலாக புரிந்து கொள்ளப்படும் போது தெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகள் தேவையுற்றதாக மாறும். பொதுவாக தெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டத்தில் ஒரு முன்னுரையும், 'இயற்றப்படுகிறது' என்பதை போன்று 'தெரிவுறுத்தப்படுகிறது' என்ற சொல்லும் காணப்படும்.

தீர்வுகாணூம் எழுத்துருச் சட்டம் (Remedial statute)

இதன் கீழ் புதிய அனுகூலம் அல்லது புதிய தீர்வு அளிக்கப்படும். நிலுவையில் உள்ள சட்ட ஏற்பாடுகளில் மேம்பாட்டை உருவாக்குவதே இதுப்போன்ற எழுத்துருச் சட்டத்தை இயற்றுவதின் முக்கிய குறிக்கோள் ஆகும். இது மேலும் சமூக பொருளாதார சட்டமியற்றமாகவும் கணக்காக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக மகப்பேறு நலன்பயக்கும் செய்யுள், 1961

அதிகாரப்படுத்தும் எழுத்துருச் சட்டம் (Enabling Statute)

ஓர் அதிகாரப்படுத்தும் செய்யுள் வாயிலாக சிலவற்றை செய்திட சட்டமியற்றகம் அதிகாரப்படுத்தியிருக்கலாம் அல்லாவிட்டால் இச்செயல் சட்டவிரோதமாக கருதப்படும். இது சட்டமியற்றகத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதில் ஏதேனும் இக்கட்டான நிலை ஏற்பட்டால் அதை நடப்பிலாக்க அதிகாரம் அளிப்பதாக அமையும்.

பலவீனமாக்கும் எழுத்துருச் சட்டம் (Disabling Statute)

இது பொதுச் சட்டத்தால் அளிக்கப்படும் உரிமையை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்கிறது.

தண்டனைக்குள்ளாக்கும் எழுத்துருச் சட்டம் (Penal Statute)

இந்த செய்யுளில் சில செயல்களை அல்லது தவறுகளை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் காணப்படும். எ.கா. உணவு கலப்பட தடுப்பு செய்யுள்.

வரி விதிக்கும் எழுத்துருச் சட்டம் (Taxing Statute)

வருமானம் அல்லது மற்ற வகையிலுள்ள பரிமாற்றத்தின் மீது வரி சுமத்துவதே இந்த எழுத்துருச் சட்டத்தின் நோக்கமாகும். இதன் குறிக்கோள் அரசிற்கு வருவாய் ஈட்டுவதாகும். எ.கா. வருமான வரி செய்யுள், விற்பனை வரி செய்யுள்.

விளக்கியுரைக்கும் எழுத்துருச் சட்டம் (Explanatory Statute)

ஒரு சட்டத்தை விளக்கி கூறுவதே இதன் நோக்கமாகும். இது பொதுவாக ஓர் எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு கூற்று கருதும் பொருளின் படி பன்பொருளை வகைப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ இயற்றப்படுகிறது.

சீர்திருத்தும் எழுத்துருச் சட்டம் (Amending Statute)

இந்த எழுத்துருச் சட்டம் முதலேற்பு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் தேவை என்பது முதலேற்பு சட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கி சீற்படுத்தி இதன் குறிக்கோளை நல்லமுறையில் நடப்பிலாக்குவதாகும்.

நீக்கும் எழுத்துருச் சட்டம் (Repealing Statute)

இது முந்தைய எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகள் மேலும் தேவையில்லை என சட்டமியற்றகம் கருதும் போது நீக்குகிறது.

குணமேன்மையாக்கும் எழுத்துருச் சட்டம் (Curative or validating Statute)

ஒரு குணமேன்மையாக்கும் எழுத்துருச் சட்டம் என்பது முந்தைய சட்டத்திலுள்ள குறைபாடுகளை சரிசெய்ய அல்லது அத்தகைய சட்டத்தின் படியான சட்ட விவகாரங்களை செல்லத் தக்கதாக்க வேண்டி இயற்றப்படுவதாகும். இத்தகைய ஒரு செய்யுள் இல்லாத பட்சத்தில் சட்டத்திலுள்ள குறைபாடன ஏற்பாடுகள் செல்லாததாகி விடும். செல்லத்தக்கதாக்குவதின் முடிவாக குறைபாடுள்ள சட்ட ஏற்பாட்டின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது அறிவிப்பு செல்லத்தக்கதாக மாறும்.

4. பயன்பாட்டின் அளாவல் அடிபடையிலான வகைப்பாடு (Classification Based on Extent of Application)

இதன் கீழ், எழுத்துருச் சட்டங்கள் (a) பொது எழுத்துருச் சட்டம் மற்றும் (b) தனியார் எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது. பொது எழுத்துருச் சட்டம் பொதுக் கொள்கையைச் சார்ந்த காரியங்கள் தொடர்பானதாகும். தனியார் எழுத்துருச் சட்டம் தனிப்பட்ட தன்மைலான காரியங்கள் தொடர்பானதாகும்.

5. பயன்பாட்டின் இயல்பின் அடிப்படையிலான வகைப்பாடு (Based on Nature of Application)

இதன் கீழ் (a) எதிர்காலத்திற்கான எழுத்துருச் சட்டம் (b) முற்காலம் உட்படும் எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது. எதிர்காலத்திற்கான எழுத்துருச் சட்டத்தின் உட்பாகங்கள் வருங்கால உரிமைகளை உட்படுவதாகவும் இதேபோல் முற்காலம் உட்படும் எழுத்துருச் சட்டத்தின் உட்பாகம் உரிமைகளை கடந்தகாலத்திற்குமாக அமையப் பெறும்.

எழுத்துருச் சட்டத்தின் பாகங்கள் (Parts of Statute)

ஓர் எழுத்துருச் சட்டத்தில் கீழேயுள்ள பாகங்கள் காணப்படும். இவைகள் எழுத்துருச் சட்டத்தின் பொருள்விளக்கத்திற்கான அடிபடை கருவிகளாக பயன் படுகிறது.

1.பெயர் (Title)

பெயர் எழுத்துருச் சட்டத்தின் ஒரு முக்கிய பாகமாகும். இது எழுத்துருச் சட்டத்தின் மேல் பாகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கு இரண்டு விதமான பெயர்கள், சுட்டுப்பெயர் மற்றும் விரிவுப்பெயர் எனும் பெயர்களில் உள்ளன.

(a) சுட்டுப்பெயர் (Short title)

இந்தப் பெயர் ஒரு பொது தலைப்பாகவோ பெயராகவோ இருக்கும். எல்லா செய்யுளுக்கும் இந்தப் பெயர் காணப்படும். எல்லா எழுத்துருச் சட்டத்திலும் உள்ள இந்த பெயரின் இறுதியில் இது இயற்றப்பட்ட ஆண்டும் காணப்படும்.[2] எல்லா ஆண்டுகளிலும் சட்டமியற்றகங்கள் அனேக செய்யுள்களை இயற்றுகிறது. இது அத்தகைய செய்யுள்களுக்கு வரிசை எண் தருகிறது. இந்த வரிசை எண்ணும் இந்த பெயரின் பாகமாகும். எ.கா. சொத்து கைமாற்றச் செய்யுள், 1882 (செய்யுள் எண் 4/1882) (The Transfer of Property Act, 1882 (Act No. 4 of 1882))

(b) விரிவுப்பெயர் (Long title)

ஒரு செய்யுளின் விரிவுப்பெயர் எழுத்துருச் சட்ட நூலில் சிறிய எழுத்துகளில் சுட்டுப்பெயருக்கு கீழாக இதன் முன்னுரைக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு இருக்கும். இது சுருக்கமாக ஆனால் புரிந்துகொள்ள ஏதுவாக எழுத்துருச் சட்டத்தின் தேவையைப் பொதுவாக விவரித்து கூறும். உணவுக் கலப்பட தடுப்பு செய்யுள், 1954-ன் விரிவுப்பெயர், "உணவுக் கலப்படத்தை தடுப்பதற்கான ஏற்பாட்டை உண்டாக்கும் ஒரு செய்யுள்".

2.முகப்புரை (Preamble)

முகப்புரை செய்யுளின் முக்கிய குறிக்கோள் காணப்படும். முகப்புரை செய்யுளின் பாகமாகும். சட்டமியற்றகத்தின் நோக்கம் முதன்மை குறிக்கோள், தேவை ஆகியன முகப்புரை வாயிலாக புரிந்து கொள்ளலாம்.[3] இந்திய தண்டித்தல் தொகுப்பு, 1860-ன் முகப்புரை "இது இந்தியாவிற்கு ஒரு பொதுவான தண்டித்தல் சட்டத் தொகுப்பை விரைந்து தருவதனால்; இது பின்வருமாறு சட்டமாக்கப்படுகிறது".

3.படலத் தலைப்பு (Title of Chapter)

பொதுவாக எழுத்துருச் சட்டம் படலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படலத்திற்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு இருக்கும். இது அந்த படலத்தின் நோக்கத்தை ஊகிக்க உதவும்.

4.ஓரக் குறிப்புகள் (Marginal Notes)

இவைகள் ஒரு செய்யுளில் பிரிவுகளின் பக்கத்தில் சேர்க்கப்பட்டு இருக்கும். மற்றும் இது பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும்.

5.தலைப்புகள் (Headings)

இது ஒரு கூட்டம் பிரிவுகளுக்கோ அல்லது ஒரு தனிப்பிரிவுக்கோ நல்கப்படும். இது அத்தகைய பிரிவுகளின் முன்னுரையாகவே கருதப்படுகிறது.

6.பொருள்விளக்கக் கூறு அல்லது வரையறைப் பிரிவு (Interpretation Clause or Definition Section)

இது பொதுவாக எழுத்துருச் சட்டத்தின் முந்தைய பாகத்தில் இருக்கும். எழுத்துருச் சட்டத்தின் சில வார்த்தைகள் கூற்றுகளை இந்த பிரிவு வரையறுத்து கூறுகிறது.

7.பிரிவுகள் (Sections)

எழுத்துருச் சட்டத்தின் இயற்றப்படும் பாகம் பிரிவுகளாக கட்டமைக்கப்படுகிறது. எழுத்துருச் சட்டத்தின் எல்லாப் பிரிவும் ஓர் உறுதியான நியமமாக இருக்கும். ஒரு பிரிவில் ஒன்றிற்கு மேலான நியமங்கள் காணப்படலாம்.

8.நிபந்தனைகள் (Provisos)

பிரிவின் ஏற்பாடுகளின் பயன்பாட்டிலுள்ள வரம்புகள் காணப்படும் கூறுகளாகும் இவை.

9.நிறுத்தக் குறிகள் (Punctuations)

முற்றுப்புள்ளி, அடைப்புக்குறி, போன்ற குறியீடுகள் எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்கும்.

10.எடுத்துக்காட்டி விளக்கம் (Illustration)

இது சட்ட ஏற்பாட்டை உதாரணத்தோடு தேளிவுப்படுத்தி விளக்க வேண்டி பிரிவோடு இணைக்கப்பட்டு இருக்கும்.

11.விளக்கம் (Explanation)

செய்யுளின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தொடர்பான சந்தேகங்களை நீக்குவதற்காக சேர்க்கப்படுகிறது.

12.விதிவிலக்கு கூறு (Exceptions clause)

செய்யுளின் ஏற்பாடுகளின் அளாவலை சிலவற்றில் இருந்து தவிர்க்க வேண்டி இது இணைக்கப் படுகிறது.

13.ஒழிவாக்கு கூறு (Saving Clause)

இது பொதுவாக ஓர் எழுத்துருச் சட்டத்தின் மறு உருவாக்கம் அல்லது அதை நீக்கும் சூல்நிலையில் இணைக்கப்பட்டு இருக்கும். சாதாரணமாக இது நீக்கும் எழுத்துருச் சட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். நீக்கப்படும் எழுத்துருச் சட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் உரிமைகள் பாதிக்காமல் இருப்பதே இதன் நோக்கம்.

14.பட்டிகைகள் (Schedules)

ஓர் எழுத்துருச் சட்டத்திற்காக இவைகள் சேர்க்கப்படுகிறது. இது எழுத்துருச் சட்டத்தின் பாகமாக அமைக்கப்படுகிறது. இவைகள் எழுத்துருச் சட்டத்தின்படியான உரிமைகளை கோரும் முறையைக் காட்டலாம், இதிலுள்ள அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை காட்டலாம்.

15.படிவங்கள் (Forms)

இவைகள் பட்டிகையோடு இணைக்கப்பட்டு இருக்கும் மாதிரிகள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Black, Henry Campbell (1990). Black's Law Dictionary, Sixth Edition. West Publishing. p. 1410. ISBN 0-314-76271-X.
  2. According to Lord Thering
  3. Salkeld v. Johnson, [(1848) 2 Ex 256 (272)]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya