ஒசைரிசு-ரெக்சு (OSIRIS-REx, ஆங்கிலத்தில் Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer "தோற்றம், நிறமாலை விளக்கம், வளங்களை அடையாளமிடல், பாதுகாப்பு, பாறைப்படிவு ஆய்வுப்பணி" என்பவற்றின் சுருக்கம்) என்பது தற்போது நாசா நடத்தும் சிறுகோள்களை ஆய்வு செய்யவும் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரவுமான செயற்திட்டமாகும்.[11][12][13][14] இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் 101955 பென்னு என்ற புவியருகுசிறுகோளின் மேற்பரப்பு மாதிரிகளைச் சேகரித்து புவிக்குக் கொண்டு வருவதாகும். இதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், அதன் ஆரம்பக் கட்டக் கோளுருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிமச் சேர்மங்களின் மூலம் ஆகியவற்றை ஆராய்ந்தறிய அறிவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.[15][16]
இத்திட்டத்தின் செலவு கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும், அத்துடன் அட்லஸ்-V ஏவூர்திக்கு 183.5 மில்லியன் டாலர்கள் செலவு.இது "புதிய எல்லைகள்" திட்டதின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது கோள் அறிவியல் பணியாகும். இதற்குமுன் "ஜூனோ" மற்றும் "நியூ ஹரைசன்ஸ" விண்கலங்கள் "புதிய எல்லைகள்" திட்டதில் ஏவப்பட்டன. இத்திட்டத்தின் முதன்மை விசாரணையாளர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டான்டி லோரெட்டா (Dante Lauretta) ஆவர்.
இத்திட்டத்தின் விண்கலம் 2016 செப்டம்பர் 8-இல் ஏவப்பட்டது. 2017 செப்டம்பர் 22 இல் புவியைக் கடந்து, 2018 திசம்பர் 3 இல் 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து 19 கிமீ தூரத்தை அணுகியது.[17] அடுத்த பல மாதங்களை அது பென்னுவில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை ஆராய்வதில் செலவிட்டது. 2019 திசம்பர் 12 இல் மாதிரிகளை எடுப்பதற்கான முதலாவது இடத்தை நாசா அறிவித்தது. இதற்கு நைட்டிங்கேல் எனப் பெயரிடப்பட்டது.[18] 2020 அக்டோபர் 20 இல் ஒசைரிசு-ரெக்சு பென்னுவை சென்றடைந்து, மாதிரிகளை சேகரிக்கும் பணிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தியது.[19] 2023 செப்டம்பர் 24 அன்று, பூமிக்கு அருகில் பறக்கும் போது, விண்கலம் அதன் மாதிரியைத் அனுப்பும் கலத்தை வெளியேற்றியது. இக்கலம் பூமிக்கு வான்குடை மூலம் அனுப்பப்பட்டது, அது யூட்டாவில் உள்ள சால்ட் லேக் நகரில்லுள்ள அமெரிக்க அரசுப் பயிற்சி வரம்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.
செயற்திட்டம்
இத்திட்டம் அரிசோனா பல்கலைக்கழகதின் "சந்திரன் மற்றும் கிரக ஆய்வகம்", நாசாவின் "கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் மையம்" மற்றும் "லாக்ஹீட் மார்டின் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்" என்பவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது, செப்டம்பர் 8 2016 அன்று ஏவப்பட்டது. இப்பணியின் விஞ்ஞானிகள் அணி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ராஜ்யம், மற்றும் இத்தாலி நாட்டினர்களை உறுப்பினர்களாகக்கொண்டுள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகள் பயணத்திற்குப் பின் ஓசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2018இல் உடுக்கோள் 101955 பின்னுஐ சந்தித்து சுமார் 5 கி.மீ. (3.1 மைல்) தொலைவிலிருந்து அதன் மேற்பரப்பை 505 நாட்களில் வரைபடமாக்கும் பணியை தொடங்கஉள்ளது. அவ்வரைபடத்தை பயன்படுத்தி உடுக்கோளின் எப்பகுதியிலிருந்து மாதிரியை எடுப்பதென அணி முடிவுசெய்யும். பின்னர் விண்கலம் உடுக்கோளை நெருங்கி அணுகி (உடுக்கோள் மீது தரையிறங்காமல்) ஒரு இயந்திர கையை நீட்டி மாதிரியை சேகரிக்கும்.
ஓர் சிறுகோள் தெரிவு செய்யப்பட்டதற்கு காரணம் சிறுகோள்கள் சூரிய குடும்பம் பிறந்த காலத்திலிருந்து வந்த 'காலப் பேழை' ஆகும். குறிப்பாக பின்னு தெரிவுசெய்யப்பட்டதட்கு காரணம் இது கொண்டுள்ள ஆதியான கரிம பொருள்களும், பூமியின் தோற்றத்திற்கு முந்திய பொருள்களை கொண்டுள்ளதுமாகும். கரிம பொருள்கள் உயிரினங்களின் தோற்றத்திட்டக்கு முக்கிய காரணியாகும். அமினோ அமிலங்கள் போன்ற சில கரிமவேதியல் சேர்மங்கள் விண்கல் மற்றும் வால்மீன் மாதிரிகளில் முன்பு அவதானிக்கப்பட்டுள்ளன. அதனால் உயிரினக்களின் தோற்றத்திற்காண சில காரணிகள் விண்வெளியில் உருவாகியிருக்கலாம் கருதப்படுகிறது.
அறிவியல் நோக்கங்கள்
இப்பணியின் அறிவியல் நோக்கங்கள்
பீன்னுவின் மேற்பரப்பு மாதிரியை பூமிக்கு ஆய்வுக்காக கொண்டுவருவது.
சிறுகோள் பின்னுவை வரைபடமாக்குவது.
மாதிரி எடுக்கப்பட்ட இடத்தை ஆவணப்படுத்துவது.
ஈர்ப்பு தவிர்ந்த வேறு விசைகளால் (யார்க்கோவ்ஸ்க்கி விளைவு) சிறுகோளின் சுற்றுப்பாதையின் ஏற்படும் விலகலை அளவிடுவது.