ஒட்டகச் சிவிங்கி
ஒட்டகச் சிவிங்கி (ⓘ) ஆபிரிக்காவில் காணப்படும் பாலூட்டியாகும். உலகின் மிக உயரமான விலங்கினம் இதுவாகும். ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீற்றர்) 900 கிலோ கிராம் வரை நிறையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிடப் பொதுவாக உயரத்திலும் நிறையிலும் குறைந்தவை. ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிற்றைத் தவிர ஏனைய உடல் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானவை. இவை நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டுள்ளன. இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட 10 சதவீதம் நீளமானவை. இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது. ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன. இவை நின்ற படியே குட்டியீனுபவை என்பது குறிப்பிடத்தக்கது. குட்டிகள் 1.8 மீற்றர் உயரமுடையவையாக இருப்பதோடு பிறந்து சில மணிநேரத்திலேயே எழுந்து ஓடக்கூடியவை. வளர்ந்த ஒட்டகச் சிவிங்கிகளைக் கொன்றுண்ணிகளால் தாக்க முடிவதில்லையாயினும் குட்டிகளை சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி மற்றும் ஆபிரிக்கக் காட்டுநாய்கள் போன்றவை வேட்டையாடுகின்றன. 25% முதல் 50% வரையான ஒட்டகச் சிவிங்கிகளே உயிர்தப்பி முழுவளர்ச்சியடைகின்றன. இவை தம்மைத் தாக்கும் விலங்குகளைக் கால்களால் உதைத்துத் தாக்குகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia