ஒட்டிப் பிறந்த இரட்டையர்
ஒட்டிப் பிறந்த இரட்டையர் (conjoined twins) என்போர் கருவிலேயே உடல்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் ஆவர்.[1] இது ஒரு அரிய நிகழ்வு ஆகும். 50,000 முதல் 1,00,000 பிறப்புகளில் ஒரு பிறப்பில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இத்தகைய பிறப்புகளின் எண்ணிக்கை சற்று கூடுதலாகக் காணப்படுகிறது.[2] இவ்வாறு பிறப்போரில் கிட்டத்தட்ட பாதி பேர் இறந்து பிறக்கிறார்கள். ஒரு சிலர் உயிரோடு பிறந்தாலும் தொடர்ந்து வாழ்வதற்கு உரிய உடல்நிலையில் இருப்பதில்லை. ஒட்டிப் பிறந்த இரட்டையரின் ஒட்டு மொத்த பிழைத்திருக்கும் விகிதம் 25% மட்டுமே[3]. இந்நிலை 3:1 என்ற விகிதத்தில் பெண்களிலேயே கூடுதலாகக் காணப்படுகிறது.[2] ஒட்டிப் பிறந்த இரட்டையர் உருவாகும் விதம் குறித்து ஒன்றுக்கு ஒன்று முரணான இரண்டு தேற்றங்கள் உள்ளன. காலத்தால் முந்திய தேற்றம், கருவுற்ற முட்டை பகுதியாக பிளப்பதால் இந்நிலை வரலாம் என்று கருதியது. அண்மைய தேற்றமோ கருவுற்ற முட்டை முற்றிலுமாக பிளந்தாலும், இரட்டையர்களில் உள்ள குருத்தணுக்கள் ஒத்த அணுக்களை நாடிக் கூடுவதால் இரட்டையர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொள்ளலாம் என்கிறது. இத்தேற்றமே பரவலான ஏற்பு பெற்றுள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இருவருக்கும் பொதுவாக ஒரே கரு வெளியுறை, சூல்வித்தகம், பனிக்குடப்பையைக் கொண்டுள்ளார்கள் என்றாலும் ஒற்றைக்கருவணு உடைய ஒட்டிப் பிறக்காத இரட்டையரும் கூட இந்த அமைப்புகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கது.[4] ஒட்டிப் பிறந்த இரட்டையரிலேயே மிகவும் புகழ் பெற்றோர் சாங்கு மற்றும் இங்கு பங்கர் (Chang and Eng Bunker, Thai: อิน-จัน, Frank-Bob, 1811–1874) ஆவர். தற்போது தாய்லாந்து என்று அறியப்படுகிற சயாமில் பிறந்தவர்கள். பி. தெ. பார்னமின் வட்டரங்குடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்த இவர்கள் சயாமிய இரட்டையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் உடலின் முண்டப் பகுதியில் உள்ள சதை, குருத்தெலும்பு, ஒன்றிணைந்த கல்லீரல்களால் பிணைக்கப்பட்டிருந்தனர். நவீன மருத்துவ வசதிகள் உள்ள இக்காலத்தில் ஒரு கத்தரிக்கோல் கொண்டே கூட இவர்களைப் பிரித்து இருக்கலாம்.[5] நாளடைவில் இவர்கள் பெற்ற புகழாலும் அரிதான உடல் நிலையாலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்றாலே சயாமிய இரட்டையர்கள் என்று அழைக்கும் நிலை வந்தது.[6] சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia