ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை கொண்ட ஒன்றிய வாழ்வைக் காட்டும் கடற் சாமந்தியும், கிளவுன்ஃபிஷ் (Clownfish) எனப்படும் ஒரு வகை மீனும். கடற்சாமந்திக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தன்மை கொண்ட முதுகெலும்பிலிகளை கிளவுன்ஃபிஷ் உணவாக்கிக் கொள்ளும் வேளையில், அதன் கழிவுப் பொருட்களில் இருந்து கடற்சாமந்தி ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்ளும்.
ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல்இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும்.
வரைவிலக்கணம்
1877 இல் பெனெற் என்பவர் பாசி-காளான்களிடையே (lichens-fungal) காணப்பட்ட தொடர்பை விளக்க இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்.[1] 1879 இல் செருமானிய ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் அன்ரன் டீ பரி என்பவர் ஒன்றிய வாழ்வை "வேறுபட்ட உயிரினங்கள் இணைந்து வாழ்தல்" என வரைவிலக்கணப்படுத்தினார்.[2][3] ஒன்றிய வாழ்வு என்ற பதமானது மிகவும் பரந்த உயிரியல் இடைவினைகளை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையில் இந்த ஒன்றிய வாழ்வானது ”அண்டி வாழ்தல்” (commensalism), ”இணைவாழ்வு” அல்லது ”சமபங்கித்துவம்” (mutualism), ”ஒட்டுண்ணி வாழ்வு” எனப் பகுக்கப்படுகின்றது.[4][5]
உடலியல் இடைவினை
சில ஒன்றிய வாழ் உயிரினங்களில் அப்படியான வாழ்வு இன்றியமையாததாக இருக்கின்றது. அவ்விரு உயிரினங்களும் தமது வாழ்வுக்கு ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையாக, ஒன்றுக்கொன்று வாழ்வாதாரமாக இருக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருக்கின்றன. சில பாசி, காளான்கள் தனித்தனியாக இருப்பின் வாழும் திறனற்றவையாக இருக்கின்றன.[2][6][7][8] வேறு சில உயிரினங்கள் அமையத்திற்கேற்றபடி ஒன்றிய வாழ்வை மேற்கொண்டு, மாற்றுச் சூழலில் தனித்தியங்கும் பண்பையும் கொண்டிருக்கின்றன. ஒன்றிய வாழ்வானது சிலசமயம் உயிரினத்துக்குப் பயனுள்ளதாக இருப்பினும், வாழ்வுக்கு அத்தியாவசியமானதாக இல்லாமல் இருக்கலாம்.
அக ஒன்றிய வாழ்வு
ஆல்டெர் மரத்தின் வேர்க்கணு
ஒரு உயிரினத்தின் உடலின்இழையங்களின் உள்ளாக அடுத்த உயிரினம் வாழுமாயின் அது அக ஒன்றிய வாழ்வு (Endosymbiosis) என அழைக்கப்படும். இழையத்தினுள்ளே இருப்பவை என்னும்போது, அவை உயிரணுக்களின் உள்ளாகவோ, அல்லது உயிரணுக்களுக்கு வெளியாகவோ வாழலாம்.[9][10] இதற்கு எடுத்துக்காட்டாக அவரையினத் தாவரங்களின் வேர்களில் வாழும் நைதரசன் பதிக்கும் ரைசோபியா வகைப் பாக்டீரியாக்கள், அல்டர் மரவேர்க் கணுக்களில் வாழும் நைதரசன் பதிக்கும் அக்ரினோமைசிட் இன பாக்டீரியாக்கள், பவளப் பாறைகளில் (Coral reef) வாழும் தனிக்கல பாசிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
வெளி ஒன்றிய வாழ்வு
ஓர் உயிரினத்தின் உடல் இழையங்களுக்கு வெளிப்புறமாக இரண்டாவது உயிரினம் வாழுமாயின் அது வெளி ஒன்றிய வாழ்வு (Ectosymbiosis) எனப்படும். இவை உடலின் வெளிப்புறமாகவோ, அல்லது உடலின் உட்பரப்பில் சமிபாட்டுத் தொகுதியின் குழாய்களிலோ, அல்லது சுரப்பிகளின் வெளிப்புறத்திலோ வாழும்.[9][11] இவற்றுக்கு எடுத்துக்காட்டாக ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் பேன், சில வகைத் திமிங்கலங்களின் தாடையில் இணைவாழ்வை வாழும் பிளவுச்சிப்பிகள் (Barnacles), அழுக்கை உண்ணும் மீன்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சில ஒன்றியவாழித் தொடர்புகள்
ஒட்டுண்ணியியல்பு
மனிதரில்தெள்ளு ஒட்டுண்ணியாக வாழ்ந்து மனிதருக்குத் தீமையை கொடுக்கும். தெள்ளு கடித்தமையால் தோலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் படத்தில் காணலாம்.
ஒட்டுண்ணியியல்பு (parasitism) என்பது போசணையை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்களுக்கிடையிலான இடைத்தொடர்பாகும். இங்கு உயிரினங்கள் தம் விருந்து வழங்கிகளிடமிருந்து உணவையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வதுடன் ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கிக்கு பொதுவாக தீமையை ஏற்படுத்துவதாய் அமையும்.[12]
இவற்றுக்கிடையேயான இடைத் தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வு என அழைக்கப்படுகின்றது.
மேலொட்டித் தொடர்பு
ஈ (Pseudolynchia canariensis) யின் மீது ஒட்டி நகரும் பெரோட்டிக் உண்ணி
போசணையைப் பெறுவதற்கன்றி இடத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வதற்காக மற்றொரு உயிரினத்துடன் இணைந்து வாழுதல் மேலொட்டித் தொடர்பாகும். இது அண்டி வாழ்தல் எனப்படுகின்றது. இங்கு பொதுவாக அண்டிவாழும் உயிரினம், தான் தங்கியிருக்கும் உயிரினத்துக்கு தீமை பயப்பதில்லை.
ஓர் உயிரினம் நன்மையைப் பெறும் அதேவேளை மற்றைய உயிரினம் நன்மையையோ தீமையையோ அடையாத வகையிலான இரு உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பு ஓரட்டிலுண்ணல் (commensalism) ஆகும். இதுவும் அண்டி வாழும் முறையே ஆகும்.
இரண்டு உயிரினங்கள் தமக்கிடையிலான தொடர்பு காரணமாக இரண்டுமே நன்மை அடையுமாயின் இத்தொடர்பு ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை ((mutualism) எனப்படும்.[13] இது இணைவாழ்வு என அழைக்கப்படுகின்றது.
இவ்வகை வாழ்வு இரு உயிரினங்களுக்கும் அவசியமானதாகவோ, அல்லது ஓர் உயிரினத்துக்கு அவசியமானதாகவும், மற்றைய உயிரினத்துக்கு அவசியமற்றதாகவோ, அல்லது இரு உயிரினக்களுக்குமே அவசியமற்றதாகவோ இருக்கலாம்.
எ.கா:
அவரை இனத்தைச் சேர்ந்த தாவரங்களின்வேர் முடிச்சுக்களில் வாழும் பாக்டீரியாக்கள் நைதரசன் உட்பதித்தல். இங்கு அவரையத்துக்கு தேவையான நைதரசன் பதித்தலை பாக்டீரியாக்கள் செய்யும் வேளையில், அவை உயிர் வாழும் இடமாக அவரையம் இருக்கின்றது
இறைச்சி எறும்புகள் (Meat ants) எனப்படும் ஒரு வகை எறும்புக் கூட்டத்தால் பாதுகாக்கப்படும் இலைத்தத்தி/தத்துப்பூச்சி
உயிரியல் இனங்களுக்கிடையிலான இடைத் தொடர்பில், இரை பிடித்துண்ணல், உணவு, நீர், உறைவிடம் போன்றவற்றிற்கான போட்டியிடல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த ஒன்றிய வாழ்வுக்கு வரலாற்றில் குறைந்த கவனிப்பே அளிக்கப்பட்டு வந்தது.[15] ஆனாலும் பல உயிரியல் இனங்கள் வரலாற்றில் நீண்ட காலத்துக்கு ஒன்றிலொன்று தங்கியிருந்து இணையாகவே கூர்ப்பை அடைந்ததனால்,[16] கூர்ப்பிற்கான தேர்வு முறையில், ஒன்றிய வாழ்விற்கான முக்கியத்துவமும் நாளடைவில் அதிகரித்து வந்துள்ளது.[17][18]
டார்வினின்படிவளர்ச்சிக் கொள்கையின்படி உயிர் வாழ்வுக்காக உயிரினங்களுக்கிடையில் ஏற்படும் போட்டியில், சில உயிரினங்களில் ஏற்படும் இயற்கைத் தேர்வு காரணமாக குறிப்பிட்ட உயிரினங்கள் இயற்கையில் பிழைத்துக் வாழும். லின் மர்குலிஸ் (Lynn Margulis) என்ற உயிரியலாளர் டார்வினின் கூற்று முழுமையற்றது எனவும் உயிரியல் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, இடைத் தொடர்பு, ஒன்றிலொன்று தங்கியிருத்தல் ஆகியவையும் கூர்ப்பில் மிக முக்கியமானது எனக் கூறுகின்றார். மர்குலிஸ், டோரியன் சேகன் (Dorion Sagan) ஆகிய இருவரது கூற்றுப்படி உயிரியல் இனங்களுக்கிடையிலான போட்டியைவிட, அவற்றிற்கிடையிலான வலையமாக்கம் (networking) முக்கியமானது.[19]
பூக்கும் தாவரங்களுக்கும், அவற்றின் மகரந்தச்சேர்க்கைக்கு உறுதுணையாயிருக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஒன்றிய வாழ்வு முறையானது, அவற்றின் இணைக் கூர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பூச்சிகள், வௌவால், பறவைகளால் மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாகிய தாவரங்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தினால் மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாகக்கூடிய வகையில் தமது பூக்களின் அமைப்பில் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டதும், அந்த விலங்கு இனமும் அதற்கேற்ற வகையில் மாற்றம் அடைந்ததும் நிகழ்ந்துள்ளது. முதன்முதலில் தோன்றிய பூக்கும் தாவரம் மிகவும் எளிமையான பூவைக் கொண்டிருந்தது. பின்னர் அவற்றில் தேன், ஒட்டும் தன்மையுள்ள மகரந்தம் போன்றவை விருத்தியடைந்து, பல்வேறுபட்ட இனங்கள் உருவாகின. அதற்கேற்ப, இப்படியான உணவை சேகரிக்கக் கூடிய வகையில், பூச்சிகளிலும் விசேட உருவவியல் அமைப்புகள் உருவாகி, பல்வேறு புதிய இனங்கள் உருவாகின. ஒரு குறிப்பிட்ட இன பூச்சியால் மட்டுமே மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாகும் தாவரமாக இருக்குமிடத்து,[20] அத்தாவரத்திற்கும், பூச்சிக்கும் இடையிலான இடைத் தொடர்பு ஒன்றிலொன்று தங்கியதாக அமைந்துவிடும்.[21]
↑Dethlefsen L, McFall-Ngai M, Relman DA (2007), "An ecological and evolutionary perspective on human-microbe mutualism and disease", Nature, 449 (7164): 811–808, doi:10.1038/nature06245, PMID17943117.{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Paszkowski U. (2006), "Mutualism and parasitism: the yin and yang of plant symbioses", Curr Opin Plant Biol, 9 (4): 364–370, doi:10.1016/j.pbi.2006.05.008, PMID16713732.
Nair, S. (2005), "Bacterial Associations: Antagonism to Symbiosis", in Ramaiah, N (ed.), Marine Microbiology: Facets & Opportunities;, National Institute of Oceanography, Goa, pp. 83–89, retrieved 2007-10-12
Sagan, Dorion; Margulis, Lynn (1986), Origins of sex: three billion years of genetic recombination, New Haven, Conn: Yale University Press, ISBN0-300-03340-0
Sagan, Dorion; Margulis, Lynn (1997), Microcosmos: Four Billion Years of Evolution from Our Microbial Ancestors, Berkeley: University of California Press, ISBN0-520-21064-6
Sapp, Jan (1994), Evolution by association: a history of symbiosis, Oxford [Oxfordshire]: Oxford University Press, ISBN0-19-508821-2
Sapp, Jan (2009), The New Foundations of Evolution. On the Tree of Life, New York: Oxford University Press