கடுவன் மள்ளனார்

கடுவன் மள்ளனார் சங்ககாலப் புலவர். சங்கப் பாடல்களில் 4 பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. அகநானூறு 70, 256, 354, குறுந்தொகை 82 ஆகியன அவை.

பாடல் தரும் செய்திகள்

சங்கப் பாடல்களில் இராமாயணம்

தனுஷ்கோடியில் இராமன் (அகநானூறு 70)

பாடல்

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
‌வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே'

செய்தி

இவர் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டார். அவரையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.

உவமை

  • கோடி = தனுஷ்கோடி
  • கவுரியர் = பாண்டியர்

இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. இந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய இந்த ஆலமரம் தன் ஒலியை அவித்து வைத்துக்கொண்டது. அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. (ஆல மரத்தடியில் குழுமியிருந்த மற்ற உயிரினங்களும் ஒலி எழுப்பாமல் வாய்மூடிக்கொண்டன.)

கள்ளூர் மக்கள் மன்றத் தீர்ப்பு (அகநானூறு 256)

கள்ளூர் மக்கள் மன்றத் தீர்ப்பு

அழகி ஒருத்தியின் நல்லுடலை ஒருவன் அவளது விருப்பம் இல்லாமல் நுகர்ந்துவிட்டான். கள்ளூர் மக்கள் மன்றத்தில் அவன் முறையிட்டாள். மக்கள் மன்றம் கேட்டபோது அவளை எனக்குத் தெரியாது என்று அந்த அறனிலாளன் பொய் கூறினான். சூள் உரைத்துச் சத்தியமும் செய்தான். மன்றம் சாட்சிகளை வினவி உண்மையைத் தெரிந்துகொண்டது. மன்றம் அவனது சுற்றத்தாரைக் கேட்டது. சுற்றத்தாரில் சிலர் அவன் குற்றவாளி என ஒப்புக்கொண்டனர். சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாத சுற்றத்தாரையும் குற்றவாளி என மன்றம் தீர்மானித்து இவர்களையும் அவனையும் மன்றத்தில் நிறுத்தி அவர்கள் தலையில் சுண்ணாம்புக் கற்களை வைத்துத் தண்ணீர் ஊற்றி நீறாக்கியது. (சுண்ணாம்புக் கல் வேகும்போது உச்சாந்தலையும் வெந்து புண்ணாகும்). இது சங்ககாலத் தீர்ப்புகளில் ஒன்று.

சங்கப்பாடல் (பகுதி)

தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே'

தலைவன் பரத்தையோடு சேர்ந்து நீராடினான். பரத்தையும் அவளது சுற்றத்தாரும் தலைவிக்குத் தெரியாவண்ணம் மறைத்துவிட்டனர். என்றாலும் ஊருக்குத் தெரிந்துவிட்டது. ஊர் கோவை பேசியது. கள்ளூர் அவைக்களம் சிரித்து ஆரவாரித்தது போலத் தலைவனைப் பற்றிப் பேசிச் சிரித்ததாம்.

ஆமை நடை போல் கள் உண்டவர் நடை

கள் உண்டவர் நடையை இப்பாடல் 'மகிழ்பு இயங்கு நடை' என்று குறிப்பிடுகிறது. இந்த நடை ஆமை நடப்பது போல் இருக்குமாம்.

தீதிலாட்டி (அகநானூறு 354)

தீதில்லாத் தன் மனைவியைத் தலைவன் தீதிலாட்டி என்று குறிப்பிடுகிறான்.

வேந்தன் பாசறை வெற்றி முழக்கத்தில் இருக்கிறோம். ஆனிரை இல்லம் மீள ஆயர் ஊதும் குழலோசை கேட்கிறது. தீதிலாட்டியின் கண்கள் முல்லைப் போது போல் மலர, அவள் நெற்றிப் பசப்பு நீங்க வலவன் வள்பு உறுக்க வேண்டும் (தேரோட்டி தன் குதிரைகளுக்குச் சேணம் பூட்டவேண்டும்) - என்கிறான் போரில் வென்று மீளும் தலைவன்.

வாருறு வணர் கதுப்பு (குறுந்தொகை 82)

  • வணர் கதுப்பு = வணங்கிப் படிந்திருக்கும் மகளிர் கூந்தல்

தலைவன் தலைவியின் கூந்தலைக் கோதி வாரி உலர வைப்பானாம். அவரைப் பூ பூக்கும் அறுசிரப் பனிக்காலமும் வந்துவிட்டது. அப்படிச் செய்ய அவன் இங்கு இல்லையே என்று அவனைப் பிரிந்திருக்கும் தலைவி தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya