கரவாஜியோ
![]() மிக்கேலாஞ்சலோ மெரீசி தா கரவாஜியோ (இத்தாலிய ஒலிப்பு: [karaˈvaddʒo]; மிலன், 29 செப்டம்பர் 1571 – 18 ஜூலை? 1610) உரோமை, நாபொலி, மால்ட்டா மற்றும் சிசிலி ஆகிய இடங்களில் 1592 (1595?) முதல் 1610 வரை பணியாற்றிய இத்தாலிய ஓவியர் ஆவார். இவரின் ஓவியங்கள் மனிதர்களின் உடலியல் மற்றும் உணர்ச்சி நிலைகளை துல்லியமாகப் படம் பிடித்ததாலும், இவர் ஒளியினை வியத்தகு முறையில் பயன்படுத்தியதாலும் இவரின் ஓவியங்கள் பரோக் ஓவியக்கலையின் துவக்ககாலத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியது.[1][2][3] மிலன் நகரில் ஓவியம் பயின்ற இவர் உரோமையில் இருந்த அரண்மனைகளிலும் கோவில்களிலும் படங்கள் வரைய உரோமைக்கு வந்தார். கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கால ஓவியர்களில் இவர் குறிக்கத்தக்கவர்.[4] இவரின் ஓவிய முறை தீவிரவாத மெய்மையிய வகையாகவும், சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட சியாரோஸ்கியூரோவாகவும் இருந்தது. இப்பயன்பாடு ஓவியக்கலையில் தனிப் பிரிவையே (tenebrism) துவங்கியது. இவர் மிக இள வயதிலேயே புகழின் உச்சிக்குச் சென்றாலும், இவர் மிகவும் முரட்டுக் குணமுடையவராக இருந்தார். 1606இல் நடந்த பூசலில் இவர் ஒருவரைக் கொன்றதால் இவரின் தலையைக் கொணர்வோருக்கு பரிசுத்தொகை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இவர் உரோமையிலிருந்து 1608இல் மால்டாவுக்கும், 1609இல் நேபல்சுக்கும் தப்பி ஓடினார். அங்கேயும் பூசல்களில் ஈடுபட்டதால் பல எதிரிகளை உருவாக்கிக்கொண்டார். ஒரு ஆண்டுக்குப்பின்னர் தமது 38ஆம் அகவையில், புதிர் நிறைந்த சூழ்நிலையில் காய்ச்சலினால் இறந்தார். அவர் வாழ்ந்த போது மிகவும் புகழுடன் இருந்தாலும், இவரது மரணத்திற்குப் பின்னர் விரைவில் இவரின் புகழ் மறைந்தது. மேற்கத்திய கலையின் வளர்ச்சியில் இவரின் குறிக்கத்தக்கத் தன்மை 20ஆம் நூற்றாண்டிலேதான் மீண்டும் உணரப்பட்டது. இருப்பினும் இவரின் சமகாலத்தவரிலும், இவருக்குப்பின் வந்தோரிலும் இவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக பீட்டர் பவுல் ரூபென்ஸ், ரெம்பிரான்ட் முதலியோரின் ஓவியங்களில் இவரின் தாக்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுகின்றது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia