கரிநிறமிப் புற்றுநோய் அல்லது கரும்புற்றுநோய் அல்லது மெலனோமா (Melanoma) என்பது கரிநிறமி உயிரணுக்களில் ஏற்படுகின்ற கேடுதரும் கட்டி வகையாகும்.[1] கரிநிறமி உயிரணுக்கள் மெலனின் (கரிநிறமி) எனும் நிறமியை உற்பத்தி செய்கின்றன, இவை தோலின் நிறத்துக்குக் காரணமாக அமைகின்றன. இப்புற்றுநோய் தோலில் மிகைப்படியாக உருவாகினாலும், எங்கெங்கு கரிநிறமி உயிரணுக்கள் அமைந்துள்ளனவோ அவ்விடங்களில் எல்லாம் தோன்றக்கூடியது. சீதமென்சவ்வு, இரையகக் குடலியத்தொகுதி, கண், சிறுநீரகப் பிறப்புறுப்பு வழி போன்றவை கரிநிறமி உயிரணுக்கள் காணப்படும் ஏனைய பகுதிகளாகும்[2]
கரும்புற்றுநோய் ஏனைய தோல் புற்றுநோய்களை விடக் குறைவான வீதத்திலேயே காணப்படுகின்றது, ஆனால் மிகவும் கேடுதரும் புற்றுநோய்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியத் தவறின் ஈற்றில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்ககூடியது. தோல் புற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு வீதத்தில் பெரும்பான்மையான (75%) பகுதியை கரும்புற்றுநோய் வகிக்கின்றது.[3] உலகளாவியநோக்கில் மருத்துவர்களால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 160,000 புதிய நோய்ச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆண்களிலும் பார்க்க பெண்களே இப்புற்றுநோயால் அதிகளவு பாதிப்படைகின்றனர். பெண்களில் பொதுவாகப் பாதிப்படையும் பகுதி கால்கள் ஆகும்; ஆண்களில் பின்புறப் பகுதி பொதுவாக பாதிப்படையும்.[4]
உலக சுகாதாரத் திணைக்களத்தின் தரவின்படி, உலகளாவியநோக்கில் ஏறத்தாழ 48,000 இறப்புகள் நிகழ்கின்றன.[5]
இதற்குரிய சிகிச்சை அறுவை மருத்துவம் ஆகும். கரும்புற்றுநோய் பரவியுள்ளதையும் ஆழத்துக்கு ஊடுருவியுள்ளதையும் வைத்துக் குணமடைவதைத் தீர்மானிக்கலாம். அறுவை மருத்துவத்தில் புற்றுநோய்ப் பகுதியும் அதை அண்மித்துள்ள சிறுபகுதியும் வெட்டி அகற்றப்படுகின்றது.
காரணிகள்
தோல், முடி போன்றவற்றிற்கு நிறத்தை ஊட்டும் கரிநிறமியை கரிநிறமி உயிரணுக்கள் சுரக்கின்றன, இவ்வுயிரணுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களால் கரும்புற்றுநோய் ஏற்படுகின்றது. இது சாதாரணமான தோல் மேற்பரப்பில் தோன்றலாம் அல்லது மச்சம் ஒன்றின் மீது உருவாகத்தொடங்கலாம். பிறப்பின்போதே தோன்றும் சில மச்சங்கள் கரும்புற்றுநோயாக மாறக்கூடும்.[6]
புற்றுநோய்கள் மரபணுவில் ஏற்படும் சிதைவால் ஏற்படுகின்றன. மரபணுச் சிதைவு பரம்பரையாக விகாரம் ஏற்படுவதன் மூலம் கடத்தப்படலாம், எனினும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் சூழல் காரணிகளால் ஒருவரின் வாழ்க்கைக்காலத்தில் அவரது உயிரணுக்களில் ஏற்படும் மாற்றத்தாலும் ஏற்படலாம். டி.என்.ஏ மரபணுவில் ஏற்படும் சிதைவு அது காணப்படும் உயிரணுக்களை அபரிமிதமாக வளர்ச்சியுறச் செய்கின்றது, இது கட்டியை உருவாக்குகின்றது. கரும்புற்றுநோயைப் பொறுத்தவரையில் புறச்சூழல் காரணியான, சூரியனில் இருந்து வெளிவிடப்படும் புற ஊதாக் கதிர்கள் வழமையான காரணியாக அமைகின்றது, செயற்கையான சூரியப்படுக்கையில் இருந்து வெளிவிடப்படும் புற ஊதாக் கதிர்களும் இந்நோயை ஏற்படுத்தலாம்.[7]
நோய் அறிஉணர்குறிகள்
அறிகுறிகள் ABCD வரிசையில்:- இடது புறத்தில் மேலிருந்து கீழ்: (A) சமச்சீரின்மை, (B) ஒழுங்கற்ற விளிம்பு, (C) பல நிறங்கள் - பழுப்பு, கருப்பு, மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் (D) அளவில் மாற்றமுற்ற விட்டம். சாதாரண மச்சம் வலது புறத்தில் காட்டப்பட்டுள்ளது.
மச்சம் ஒன்றின் வடிவத்தில் அல்லது நிறத்தில் ஏற்படும் மாற்றம் ஆரம்ப அறிகுறியாக இருக்கின்றது. கணு மெலனோமாவில் ( nodular melanoma) தோலில் புதிதாக சிறுகட்டி உருவாகும் (இத்தகைய சந்தர்ப்பங்களில் உடனடியாக உகந்த மருத்துவரை அணுகுவது சாலச்சிறந்தது). பிந்திய கட்டங்களில், மச்சம் உள்ள பகுதியில் அரிப்பு தோன்றும்; புண் உண்டாகும்; மேலும் குருதிக்கசிவும் நிகழலாம்.[8] ஆரம்ப அறிகுறிகள் ஆங்கிலத்தில் ஒவ்வொரு அறிகுறியினதும் முதல் சொல்லை வைத்து "ABCDE" என இலகுவில் நினைவில் நிறுத்தப்படுகிறது.
சமச்சீரின்மை (Asymmetry)
ஒழுங்கற்ற விளிம்பு (irregular Borders)
பல நிறம் (Color variegated)
விட்டம் (Diameter) ( 6 மில்லிமீட்டரிலும் கூடியது)
படிப்படியாக வெளித்தோன்றும் (Evolving over time)
கணு மெலனோமா எனும் மிகத்தீங்கான கரும்புற்றுநோய்க்குரிய இயல்புகள்:
தோல் மட்டத்தில் இருந்து உயர்ந்து காணப்படும். (Elevated)
தொடுவதற்கு வன்மையாக இருக்கும் (Firm)
வளர்ச்சி (Growing)
வகைப்பாடு
கரும்புற்றுநோயானது பின்வரும் வகையான பிரிக்கப்பட்டுள்ளது:
லென்டிகோ மலிங்னா(Lentigo maligna)
லென்டிகோ மலிங்னா கரும்புற்றுநோய்(Lentigo maligna)
மேலோட்டமான பரவல் கரும்புற்றுநோய்(Superficial spreading melanoma)
புறமுனை நீண்ட கரும்புற்றுநோய்(Acral lentiginous melanoma)
தசைநார் கரும்புற்றுநோய் (Mucosal melanoma)
முடிச்சுரு கரும்புற்றுநோய் (Nodular melanoma)
பலமுனை கரும்புற்றுநோய் (Polypoid melanoma)
உள்ளார்ந்த கரும்புற்றுநோய் (Desmoplastic melanoma)