கானமயில்
கானமயில், (Ardeotis nigriceps) இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பஸ்டார்ட்டாகும்.[2] இது நெருப்புக் கோழிகளைப் போல தடித்த கால்களோடு இருக்கும் ஒரு பெரிய பறவை ஆகும். இப்பறவையே உலகில் பறக்கக்கூடிய பறவைகளில் எடை மிகுந்த பறவை ஆகும்.[3] இந்தியத் துணைக்கண்டத்தின் வறண்ட சமவெளிகளில் ஒரு காலத்தில் மிகுதியாக வாழ்ந்த இப்பறவை, 2018 இல் 150 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உயிர்வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது (2011 இல் 250 பறவைகள் இருந்திதாக மதிப்பிடபட்ட நிலையில் அதில் இருந்து குறைந்துள்ளது).[4] இந்த இனம் வேட்டையாடுதல் மற்றும் அதன் வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பெரும்பாலும் புல்வாய் வாழ்விடத்தை போன்ற வாழ்விடத்துடன் தொடர்புடையவை. இது இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றபட்ட 1972 வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இப்பறவை இராசத்தான் மாநிலப்பறவையாகும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த இப்பறவை தென்னிந்தியாவில் அற்றுப் போய்விட்டது. இதற்கு காரணம் இவற்றின் வாழிடமான இயற்கைப் புல்வெளிகளின் அழிவும் வேட்டையும் ஆகும். மேலும் இவை தரையில் இடும் முட்டைகளை தெருநாய்கள் உண்டுவிடுவதும் இவற்றின் இனப்பெருக்கத்துக்கு ஊறு செய்வதாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் 1500 முதல் 2000 என்ற எண்ணிக்கையில் இருந்த இப்பறவைகள் தற்போது 150 என்ற எண்ணிக்கை என்ற அளவில் குறைந்துவிட்டன. விளக்கம்கானமயிலானது ஒரு மீட்டர் உயரம் கொண்ட ஒரு பெரிய தரைப் பறவையாகும். இதன் உச்சந்தலை கறுப்பு நிறத்திலும், நீண்ட வெள்ளைக் கழுத்துக் கொண்டதாகவும், சுமார் 15 கிலோவரை வளரக்கூடியதாகவும் இருக்கும். ஆண் பறவையின் உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் சிறு கருங்கோடுகளோடு காணப்படும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாக இருக்கும். கீழ் மார்பில் அகன்ற பெரிய கருப்பு வளையம் காணப்படும். பெண் ஆணைவிட உருவில் சிறியது. பெண்ணின் உடலின் மேற்பரப்பில் கருங்கோடுகள் மிகுந்தும் மார்பு, கழுத்துப் பகுதிகளில் வெண்மை நிறம் தூய்மையற்றதாக இருக்கும்.[5]
பரவலும் வாழிடமும்![]() இந்த இனம் ஒரு காலத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவலாக காணப்பட்டது. கானமயில்கள் பாக்கித்தானில் முதன்மையாக பாதுகாப்பின்மை மற்றும் பரவலான வேட்டையாடுதல் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.[6] பாகித்தானில் உள்ள சோலிஸ்தான் பாலைவனத்தில் செப்டம்பர் 2013 கணக்கெடுப்பில் சில பறவைகள் கண்டறியப்பட்டன.[7] இந்தியாவில், பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், இராசத்தான், குசராத்து, மகாராட்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்தப் பறவை வரலாற்று ரீதியாகக் காணப்பட்டது. இன்று கானமயில் ஆந்திரம், குசராத்து, கர்நாடகம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், இராசத்தான் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் மட்டுமே காணப்படுகிறது.[8] ஆண்பறவைகள் பல பெண் பறவைகளை துணையாக கொண்டிருக்கும்.[9] இவை பெரும்பாலும் வறண்ட மற்றும் அரை வறண்ட புல்வெளிகள், முள் புதர்கள் கொண்ட திறந்தவெளி, உயரமான புற்கள் கொண்ட பகுதிகளை வாழ்விடமாக கொள்ளக்கூடியவை. இவை பாசனப் பகுதிகளைத் தவிர்க்கின்றன.[5] நடு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் இவை இனப்பெருக்கம் செய்வதாக அறியப்படும் முக்கிய பகுதிகளாகும். இராசத்தானின் சில பகுதிகள் வறண்ட அரை-பாலைவனப் பகுதிகளாக இருந்த நிலையில் அப்பகுதிகள் பாசனக் கால்வாய்களால் மாற்றத்துக்கு உள்ளாகி, தீவிர விவசாயப் பகுதியாக மாற்றியுள்ளது குறிப்பிடதக்கது.[10] இப்பறவை தரையில் முட்டையிடக்கூடியது. நடத்தையும் சூழலியலும்கானமயில் ஒரு அனைத்துணி ஆகும். இவை தானியங்கள், பழங்கள் புழு பூச்சிகள், வண்டுகள் (குறிப்பாக மைலாப்ரிஸ் எஸ்பி.) பல்லிகள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. பயிரிடப்பட்ட பகுதிகளுக்கு வந்து நிலக்கடலை, தினை, பருப்பு வகைகள் காய்கள் போன்ற பயிர்களை உண்ணும்.[11] தண்ணீர் கிடைத்தால் இவை குடிக்கும்.[12] அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, கானமயில்கள் இளம் குஞ்சுகளை இறக்கையின் கீழ் சுமந்து செல்வதாகக் கூறப்படுகிறது.[13] இளம் பறவைகள் அடிக்கடி தூசியில் குளிப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.[14] ![]() மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் இவை இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. பெண் பறவை தரையில் குழியில் புல் புதர்கள் ஓரமாகப் புற்களால் மெத்தெனச் செய்து ஒரு முட்டை இடும்.[15] முட்டை ஆலிவ் நிறப் பழுப்பின்மேல் ஆழ்ந்த பழுப்புக் கறைகளைக் கொண்டதாக இருக்கும். முட்டையை அடைக்காத்தல், குஞ்சுகளை பராமரித்தலில் பெண் பறவைகள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. முட்டைகள் நாய்கள் போன்ற விலங்குகள் மற்றும் காகங்களால் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia