கான் திரைப்பட விழா (Cannes Festival, French: Festival de Cannes), என்பது பிரான்சு, கான் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும். 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழையதும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வும் ஆகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.[1][2][3] அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதமளவில் நடைபெறுகின்றது.
2015 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழா 2015 மே 13-24 காலப்பகுதியில் நடைபெற்றது. அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள் கோயென் சகோதரர்கள் நடுவர் குழுவின் கூட்டுத் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். பிரெஞ்சு இயக்குநர் சாக் ஆடியார் இயக்கி ஈழத்தமிழ் எழுத்தாளரும், போராளியுமான அந்தோனிதாசன் யேசுதாசன் நடித்த தீபன் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப் பனை) விருது வென்றது.[4][5][6][7][8]
நிகழ்ச்சிகள்
கான் திரைப்பட விழா பல பிரிவுகளாக ஒழுங்குசெய்யப்படுகிறது.[9]
- அதிகாரமுறைத் தேர்வு - விழாவின் முக்கிய நிகழ்வு.
- போட்டி - தங்க பாம் விருதுக்காகப் போட்டியிடும் 20 படங்கள் லுமியெர் அரங்கில் (Théâtre Lumière) திரையிடப்படுகின்றன.
- பல் நோக்குத் தேர்வு - இதற்காக 20 படங்கள், உலகின் பல பண்பாடுகளிலுமிருந்து தேர்வு செய்யப்படுகின்றன. இவை சாலே டெபுசி (Salle Debussy) அரங்கில் திரையிடப்படும்.
- போட்டிக்குப் புறம்பானவை - இவையும் லுமியே அரங்கிலேயே திரையிடப் படுகின்றன. ஆனால் இவை முக்கியமான பரிசுக்கான போட்டியில் இல்லை.
- சிறப்புத் திரையிடல் - இப் படங்களின் தன்மைக்குத் தக்கவாறு இவற்றுக்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட சூழல் தேர்வுக்குழுவினால் தெரிவுசெய்யப்படுகிறது.
- சினி பவுண்டேசன் - 15 குறும் படங்களும், இடைத்தர நீளம் கொண்ட படங்களும் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப் படுகின்றன.
- குறும்படங்கள் - இவை குறும்படத் தங்க பாம் விருதுக்காகப் போட்டியிடுகின்றன.
- இணைத் தேர்வுகள் - இவை போட்டி சாராத நிகழ்வுகள். திரைப்படத்துறையின் பிற அம்சங்களைக் கண்டறிவதற்காக ஒழுங்கு செய்யப்படுகின்றது.
- பிற பிரிவுகள் - கான் விழாவின் போது வெளி அமைப்புக்களால் வழங்கப்படும் நிகழ்வுகள்.
- இயக்குநர்களின் இருகிழமைகள்
- அனைத்துலக திறனாய்வாளர் கிழமை
- நிகழ்ச்சிகள்
மேற்கோள்கள்