காயிங் கெக் இயேவ்
காயிங் கெக் இயேவ் (Kang Kek Iew அல்லது Kaing Kek Iev) அல்லது பொதுவாக தோழர் டூச் (Duch) நவம்பர் 17, 1942 – செப்டம்பர் 2, 2020)[1][2] என்பவர் 1975 முதல் 1979 வரை பொல் பொட் தலைமையில் கம்போடியாவை ஆண்ட கெமர் ரூச் ஆட்சியில் ஒரு முக்கிய தலைவராக இருந்தவர். நோம் பென் நகரில் தியோல் சிலெங் என்ற சிறைச்சாலை அதிகாரியாக இவர் பெரிதும் அறியப்பட்டார். கம்போடியாவின் ஐநா ஆதரவுப் போர்க்குற்ற நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்ட முதலாவது கெமரூச் தலைவர் இவராவார்[3]. இவர் டுவோல் சிலெங் சிறைச்சாலையில் 17,000 இற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் படுகொலை, சித்திரவதை செய்ய்யப்பட்டதை நேரில் கண்காணித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு 35 ஆண்டு கால சிறைத்தண்டனை 2010 ஜூலை 26 ஆம் நாள் வழங்கப்பட்டது. இவரது மேன்முறையீட்டை 2012, பெப்ரவரி 3 இல் விசாரித்த நீதிமன்றம் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுட்காலமாக அதிகரித்துத் தீர்ப்பு வழங்கியது.[4] 1975 முதல் 1979 வரை கம்போடியாவை ஆட்சி புரிந்த கெமரூச் நிர்வாகம், தமக்கு எதிரானவர்களை டுவோல் சிலெங் சிறையில் அடைத்து வைத்திருந்தது. அதற்குத் தலைமை அதிகாரியாக டூச் பணியாற்றினார். கெமரூச் நிர்வாக காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். 1979 இல் வியட்நாமியப் படையெடுப்பை அடுத்து கெமரூச் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. கெமரூச் தலைவர் பொல் பொட் 1998 ஆம் ஆண்டில் இறந்தார். கெமரூச்சின் வீழ்ச்சியை அடுத்து டூச் தலைமறைவானார். பல மாற்றுப் பெயர்களில் வடமேற்கு கம்போடியாவில் வாழ்ந்து வந்த இவர் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia