பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் நாசி ஜெர்மனிக்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் அல்பேனியா நாட்டினை இத்தாலிய படைகள் ஆக்கிரமித்தன. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள்.
அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலைச் சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன.
கள நிலவரம்
முதல் இத்தாலியத் தாக்குதல் அக்டோபர் 28 – நவம்பர் 13, 1940.
கிரேக்க எதிர்த் தாக்குதல் நவம்பர் 14, 1940 – மார்ச், 1941.
இரண்டாவது இத்தாலியத் தாக்குதல் மார்ச் 9 – ஏப்ரல் 23, 1941.
Hellenic Army General Staff (1997). An Abridged History of the Greek-Italian and Greek-German War, 1940–1941 (Land Operations). Athens: Army History Directorate Editions. கணினி நூலகம்45409635.