கிளாசு யோகன்னிசு
கிளாசு வெர்னர் யோகன்னிசு (Klaus Werner Iohannis, அல்லது Johannis, பிறப்பு:சூன் 13, 1959) உருமேனிய அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 16, 2014இல் உருமேனியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2002 முதல் 2013 வரை உருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றத்தின் தலைவராக விளங்கிய கிளாசு 2014இல் உருமேனியாவின் தேசிய லிபரல் கட்சியின் தலைவரானார். யோகன்னிசு 2000ஆம் ஆண்டில் அரசியலில் ஈடுபட்டு தமது பிறந்த ஊரான சிபியுவின் நகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருகாலத்தில் இடாய்ச்சு மொழி பேசுவோர் பெரும்பாலாக இருந்த சிபியு நகரத்தில் அவர்களது இருப்பு படிப்படியாக குறைந்து சிறுபான்மையினர் ஆகினர். எனவே இச்சமூகத்தின் சார்பாக நிறுத்தப்பட்ட கிளாசின் வெற்றி எதிர்பார்க்கப்படவில்லை. இதே வெற்றியை 2004,2008 தேர்தல்களிலும் மீளவும் பெற்றார். தமது ஆட்சிக்காலத்தில் சிபியு நகரை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றினார். 2007ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகராக சிபியு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2013இல் யோகன்னிசு தேசிய லிபரல் கட்சியில் இணைந்தார். உடனடியாகவே அவருக்கு முதல் உதவித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2014இல் அக்கட்சியின் தலைவரானார். அக்டோபர் 2009இல் நாடாளுமன்றத்தின் ஐந்து அரசியல் குழுக்களில் நான்கு இவரை உருமேனியப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தன. அப்போதையக் குடியரசுத் தலைவர் டிராயன் பாசெசுகுவின் சனநாயக லிபரல் கட்சி மட்டுமே எதிர்த்தது. அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற அறிவிக்கை நிறைவேற்றப்பட்ட போதும் பாசெசுகு அவரை பிரமதராக்க மறுத்தார்.[1] யோகன்னிசு டிரான்சில்வேனிய சாக்சன் இனத்தைச் சேர்ந்தவர். உருமேனியாவில் சிறுபான்மையராக உள்ள இவர்கள் 12வது நூற்றாண்டில் டிரான்சில்வேனியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அரசியலில் நுழைவதற்கு முன்னர் யோகன்னிசு இயற்பியல் ஆசிரியராக இருந்தார். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia