கிளென் மெக்ரா
கிளென் டொனால்ட் மெக்ரா Glenn Donald McGrath (/məˈɡrɑː/; பிறப்பு: பெப்ரவரி 9, 1970)[1] என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மித விரைவு வீச்சாளர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். அனைத்துக்காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2] 1990 முதல் 2000 ஆகிய ஆண்டுகளில் துடுப்பாட்டங்களில் ஆத்திரேலியா ஆதிக்கம் செலுத்தியதற்கு இவரும் முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.[3] நிலையான வேகத்திலும் துல்லியமான பந்துவீச்சிற்காகவும் ,சிக்கனமாகப் பந்து வீசி இலக்குகளை வீழ்த்துவதற்காகவும் இவர் பரவலாக அறியபடுகிறார். இவரின் காலகட்டத்தில் அபாயகரமான பந்துவீச்சளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளை வீழ்த்திய விரைவு வீச்சாளர்களில் முதல் இடத்திலும் அனைத்துப் பந்துவீச்சளர்களின் வரிசையில் முத்தையா முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளே ஆகியோர்க்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார். மேற்கூறிய அனைத்துப் பந்துவீச்சளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.[4] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 381 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளார். மேலும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் எனும் சாதனையைப் படைத்துள்ளார். டிசம்பர் 23, 2006 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[5] சனவரி,2007 இல் நடைபெற்ற ஐந்தாவது ஆஷஸ் தொடரோடு இவர் ஓய்வு பெற்றார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தோடு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதினைப் பெற்று ஆத்திரேலிய அணிவெற்றி பெற மிக முக்கியமான நபர்களில் ஒருவராக விளங்கினார்.[6] இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் மிகச் சிக்கனமாகப் பந்து விசியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால் இரண்டாவது பருவகாலங்களில் இருந்து அவர் விளையாடவில்லை.[7] மெட்ராசு இறப்பர் பேக்டரி பேஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கு முன்பாக டென்னீஸ் லில்லீ என்பவர் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இயக்குநராக இருந்தார்.[8] இவர் தற்போது மெக்றா பவுண்டேசனுடைய துணை இயக்குநராக இருந்து வருகிறார். இவரின் முதல் மனைவி ஜேன் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பகால வாழ்க்கைமெக்ரா பெப்ரவரி 9, 1970 டப்போவில் பிறந்தார். இவரின் பெற்றோர் பிவர்லி மற்றும் கெவின் மெக்ரா ஆவர்.[9] இவர் நியூ சவுத் வேல்ஸ்சில் வளர்ந்து வந்தார். இங்கு துடுப்பாட்டம் விளையாடி வந்த போது இவரின் திறமையை டக் வால்டர்ஸ் என்பவர் கண்டறிந்தார்.[10] பின் சதர்ன்லேண்ட் அணிக்காக முதல் துடுப்பாட்டங்களில் விளையாடினார். பின் 1992- 1993 ஆம் ஆண்டுகளில் நியூ சவுத்து வேல்சு புளூசு அணிக்காக விளையாடினார். எட்டு முதல் தரத் துடுப்பாட்டங்களில் விளையாடிய பிறகு இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்.[11] உள்ளூர் போட்டிகள்மெக்ராத் 2000 ஆம் ஆண்டில் கவுண்டி வாகையாளர் போட்டியில் வொர்செஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடினார். 14 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர் 80 இழப்புகளை 13.21 எனும் சராசரியில் எடுத்தார். அதன் ஒரு போட்டியில் 41 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இழப்புகளைக் கைப்பற்றினார்.மேலும் நார்தம்ப்டன்ஷர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் தனது முதல் ஐந்து இலக்குகளையும் , அரை நூறு ஓட்டங்களையும் எடுத்தார். அவர் 2004 இல் மிடில்செக்ஸிற்காக ஒரு சில போட்டிகளிலும் விளையாடினார்.நான்கு போட்டிகளில் விளையாடிய இவர் ஒன்பது இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார். தனிப்பட்ட வாழ்க்கைகிளெனின் முதல் மனைவி, ஜேன் லூயிஸ் (நீ ஸ்டீல்), ஐக்கிய இராச்சியத்தில் பிறந்தார், இவர்களது திருமணத்திற்கு முன்பு விமான உதவியாளராக பணிபுரிந்தார். கிளென் மற்றும் ஜேன் 1995 ஆம் ஆண்டில் ஜோ பனானாஸ் என்ற ஹாங்காங் இரவு விடுதியில் சந்தித்தனர். 2001 ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேம்ஸ் மற்றும் ஹோலி என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஜேன் மெக்ராத்திற்கு 1997 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலாக கண்டறியப்பட்டது. 26 ஜனவரி 2008 அன்று (ஆஸ்திரேலியா தினம் ) கிளென் மற்றும் ஜேன் மெக்ராத் இருவரும் ஆஸ்திரேலியாவின் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். ஜேன் மெக்ராத் 22 ஜூன் 2008 அன்று 42 வயதில் இறந்தார்.[12] க்ளென் மெக்ராத் 2009 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது உள்ளரங்க வடிவமைப்பாளரான சாரா லியோனார்டியை சந்தித்தார். இவர்கள் நவம்பர் 18, 2010 அன்று க்ரோனுல்லாவில் உள்ள வீட்டில் திருமணம் செய்து கொண்டனர்.[13] ஏப்ரல் 2011 இல், மெக்ராத் தனது வீட்டை சந்தையில் 6 மில்லியனுக்கு விற்பனைக்கு வைத்தார்.[14] மாடிசன் மேரி ஹார்பர் மெக்ராத் எனும் மகள் செப்டம்பர் 4, 2015 அன்று பிறந்தார் [15] 2015 ஆம் ஆண்டில் மெக்ராத் தென்னாப்பிரிக்காவில் பலவகையான விலங்குகளை வேட்டையாடிக் கொன்றது தெரியவந்தபோது பரவலான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றார்.[16] மெக்ராத்தின் புகைப்படங்கள் சிபிடானி சஃபாரிஸ் என்ற விளையாட்டு இணையதளத்தில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் இறந்த எருமை, இரண்டு ஹைனாக்கள் மற்றும் யானையின் தந்தங்கள் போன்றவற்றின் அருகே இவர் இருப்பது போன்று உள்ளது.[17] இதையடுத்து இவர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.[18][19] மெக்ராத் முன்னர் ஆஸ்திரேலிய ஷூட்டர் பத்திரிகைக்கு கோப்பையினை வேட்டையாடுவதில் தனக்கு ஆர்வம் உள்ளது எனத் தெரிவித்தார்.[20] இந்தியன் பிரீமியர் லீக்2008 ஆம் ஆண்டி நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் டெல்லி டேர்டெவில்சு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இவரை அந்த அணி நிர்வாகம் இந்திய மதிப்பில் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.[21] இவரின் புனைப் பெயரான பிஜீயன் என்பதனைச் சுருக்கி பிட்ஜ் என்று இவரின் ஆடையில் இருந்தது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia