கீர்த்திமுகம்

கீர்த்திமுகம் (Kirtimukha) என்பது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்து சமய கோவில் கட்டிடக்கலையிலும் பௌத்த கட்டடிடக் கலையிலும் காணப்படும் ஓர் உருவ அமைப்பு ஆகும்.[1] கீர்த்திமுகம் அல்லது 'புகழுக்குரிய முகம்', என்பது ஆசியா முழுவதிலும் உள்ள கோயில் கட்டிடக்கலையில் காணப்படும் ஒரு கொடூரமான அசுர முகமாகும். உடலற்ற தலை, உக்கிரமான முகத்தில், புருவங்களைக் குறிக்கும் முக்கோண வடிவிலான அலங்காரக் கோடு, குறுகிய நெற்றி, நீண்ட கண் இமைகள், கற்பனையான வடிவத்துடன் கூடிய இரண்டு கொம்புகள், சிங்கத்தின் நிமிர்ந்த காதுகள், அடர்ந்த மீசை, வீங்கிய கன்னங்கள், கூர்மையான கோரைப்பற்கள், பரந்து திறந்த வாய் மற்றும் நீட்டிக் கொண்டிருக்கும் நாக்கு என்று கொடூரமான கோர முகம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு பாதுகாக்கும் தெய்வமாகும் (ஆங்கிலம்: Guarding deity). தீமைகளிலிருந்து கட்டிடங்களைக் காக்கும் தெய்வம். சம்ஸ்கிருத மொழியில் கீர்த்தி என்றால் 'புகழ்தல்' அல்லது 'கொண்டாடுதல்' என்று பொருள். கீர்த்தி முகம் என்றால் புகழுக்குரிய அல்லது பெருமைக்குரிய முகம் என்று பொருள்.[2]

ஆசிய கட்டிடக்கலையில் கீர்த்திமுக மாற்றுருவங்கள்

இந்தியாவில் கீர்த்தி முகம் என்பது பொதுவாக சிங்க முக வடிவமாகும். ஒரிசா கட்டிடக் கலையில் ராஹுர்-முகர்-மாலா என்று குறிப்பிடுகிறார்கள். கிராஸ்பதி என்பது கீர்த்தி முகத்திற்கு குஜராத்தில் வழங்கும் பெயராகும். சீனத்து கட்டிடக்கலையில் ஒரு மலைப்பாம்பின் உடலும், பேயின் தலையும் கொண்ட 'டாட்டி' டிராகன் வடிவமாக அமைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில், கீர்த்திமுகர்கள் புத்தரின் பாதுகாவலர்கள் ஆவர். ஜாவா, சுமத்ரா மற்றும் கம்போடியாவில், கீர்த்தி முகத்தை 'காலா' அல்லது 'பனஸ்பதி' ('மரங்களின் ராஜா') என்று அழைக்கிறார்கள். மகர-தோரணத்திலிருந்து காலா முளைத்து வருவது போன்ற சிற்ப அழகணிகள் ஜாவா மற்றும் சுமத்ராவில் காணப்படுகிறன. இந்த மகரதோரண அழகணிகள் திராவிட மற்றும் நாகர கட்டிடக்கலைகளிலும் இடம்பெறுகின்றன.

இந்து சமய கட்டிடக்கலையில் கீர்த்தி முகம்

நாகர விமானத்தின் கவக்ஷா பகுதி (ஆங்கிலம்:Gavaksha), விமானத்தின் கபோத நேத்ர நசிகைகள், கபோதத்தின் குடு வளைவுகள் (Kudu arches in Kapota), கருவறை வாசல் விட்டங்களில் (ஆங்கிலம்: Lintel Brow), கோட்டங்களில் இடம்பெறும் மகர தோரணங்களின் உச்சியில், தெய்வச்சிலைகளின் பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் திருவாச்சியின் உச்சியில், திராவிட கோபுர சிகரங்களின் இருபுறமும், கீர்த்தி முக வடிவங்கள் அமைக்கப்படும்.

புராணக்கதை

கந்தபுராணத்தில் இது குறித்த சுவையான கதை உள்ளது. சிவன் தனது நெற்றிக் கண்ணின் தீயிலிருந்து ஜலந்தரன் என்ற அசுரனை உருவாக்கினார். அசுரன் சிவனின் துணையான பார்வதியின் மீது இச்சை கொண்டான். தனக்காக பார்வதியை அணுகுமாறு இராகுவிடம் வற்புறுத்தினான்.

சிவன் இதனைக் கண்டு சினமடைந்த்தார். மீண்டும் நெற்றிக் கண்ணைத் திறந்து ஜீபா என்ற அசுரனை உருவாக்கினார். ஜீபா இராகுவை உண்ணத் தொடங்கினான். இராகு சிவனிடம் உயிர் பிச்சை கேட்டான். மனமிரங்கிய சிவன் இராகுவை விட்டுவிடுமாறு பணித்தார்.

தற்போது ஜீபாவிற்கு உண்பதற்கு எதுவுமில்லை என்பதால், தன்னுடைய கைகள், கால்கள், உடல் ஆகியவற்றை உண்ணத் தொடங்கினான். மிஞ்சியது தலை மட்டுமே. சிவன் அவனது ஒளிமிகுந்த முகத்தைப் பார்த்தார். உன்னைப்போல தன்னைத்தானே உண்ணக்கூடியவன், எல்லாக் கடவுள்களுக்கும் மேலானவன் என்று அவனிடம் கூறி வியந்தார். இதன் காரணமாகவே கோவில்களில் கீர்த்தி முகம் படைப்பது சிற்பக்கலை மரபாயிற்று. மனிதனின் உள்ளே வெற்றிடம் உருவானால் அங்கு தெய்வீகம் குடிகொள்ளும். மனிதனின் முகமும் கீர்த்தி முகமாகும்.

கீர்த்தி முகம் காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "Yalli and Mukha". Retrieved 13 April 2022.
  2. "Kirtimukha — The ‘Face of Glory’". Kalpavriksha (Sep 12, 2019). https://medium.com/@Kalpavriksha/kirtimukha-the-face-of-glory-9ba093dafea1. பார்த்த நாள்: 13 April 2022. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya