குடிசார் உரிமைகள் இயக்கம்![]() குடிசார் உரிமைகள் இயக்கம் என்பது சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமை கோரிய உலகளாவிய அரசியல் இயக்கங்கள் பலவற்றை ஒருங்கே குறிப்பது. இத்தகைய இயக்கங்கள் ஏறத்தாழ 1950களுக்கும், 1980களுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின. பெரும்பாலான வேளைகளில், மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அமைதி வழியில் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பியக்கங்களாகக் காணப்பட்டன. வேறு சில சமயங்களில், இதனுடன் சேர்ந்தோ அல்லது அதைத் தொடர்ந்தோ குடிமக்கள் கிளர்ச்சிகளும், ஆயுதப் போராட்டங்களும் இடம் பெற்றன. பல நாடுகளில் இது நீண்டதாகவும், பலம் குன்றியதாகவும் இருந்ததுடன், இவ்வாறான பல இயக்கங்கள் தமது நோக்கங்களை முழுமையாக அடையவும் முடியாமல் போயிற்று. இருந்தாலும், இவ்வியக்கங்களின் முயற்சிகளினால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலரது சட்ட உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.
பின்னணிகுடிசார் உரிமைகளுக்கான போராட்டங்கள் நீண்டகால வரலாறு கொண்டவை எனினும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் குடிசார் உரிமைகள் குறித்து உலகளாவிய வகையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், அக்கால அரசியல் நிலைமைகளும் குடிசார் உரிமைகள் தொடர்பான போராட்டங்களுக்கும், அவற்றை முன்னெடுத்துச் சென்ற இயக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன எனலாம். இந்தப் பின்னணியிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவின் ஒரு பகுதியில் தோன்றிய இயக்கம் நாடு தழுவிய அளவில் வளர்ந்ததுடன், உலகின் கவனத்தையும் ஈர்த்தது. குடிசார் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்கள் அனைத்துக்கும் "குடிசார் உரிமைகள் இயக்கம்" என்னும் பெயர் பொருந்துமாயினும். சிறப்பாக 1954க்கும் 1965க்கும் இடையில் நிகழ்ந்த அமெரிக்கக் கறுப்பு இனத்தவரின் போராட்ட இயக்கத்தையே இது சிறப்பாகக் குறிக்கும். |
Portal di Ensiklopedia Dunia