கெலாவோ மக்கள்கெலாவோ மக்கள் (Gelao people) என்பது சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். இருப்பினும், பல கெலாவோ மக்கள் சீன அரசாங்கத்தால் யி, மியாவோ மற்றும் சுவாங் என வேறு பிரிவினருடன் அடையாளம் காணப்படுகின்றனர். சீனாவில் ஏறத்தாழ நான்கரை இலட்சம் கெலாவோ மக்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் குய்சோவின் மேற்குப் பகுதியில் உள்ள வுச்சுவான் கெலாவ் மற்றும் மியாவ் தன்னாட்சி மாகாணங்களிலும், ஜூனியில் உள்ள தாவோஜென் கெலாவ் மற்றும் மியாவ் தன்னாட்சி கவுண்டி போன்ற கெலாவ் தன்னாட்சி மாகாணங்களிலும் காணப்படுகின்றனர். இந்த மக்களில் சிலர் மேற்கு குவாங்சி (லாங்லின் தன்னாட்சி மாகாணம்), தென்கிழக்கு யுன்னான் மற்றும் தெற்கு சிச்சுவான் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[1] வியட்நாமில் கெலாவோ மக்கள் ஒரு அதிகாரப்பூர்வ இனக்குழுவினராக உள்ளனர். அங்கு ஏறத்தாழ மூன்றாயிரம் கெலாவோ மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஹா ஜியாங் மாகாணத்தின் கார்ஸ்ட் பீடபூமியில் வசிக்கின்றனர்.[2] வரலாறுகெலாவோ மக்கள் பெரும்பாலும் குயிசூ மாகாணத்தின் பழங்குடியினராகக் கருதப்படுகிறார்கள். கெலாவோ மக்களின் மூதாதையர்கள் பண்டைய யெலாங்கில் வாசித்த ராவ் மக்கள் என கருதப்படுகின்றது. மொழிகெலாவோ மக்கள் பேசும் மொழிகள் கிரா-டாய் மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை. இன்று இவர்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே இன்னும் இந்த மொழியைப் பேசுகிறார்கள். பல்வேறு கெலாவோ பேச்சுவழக்குகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், மாண்டரின் மொழி ஒரு பொது மொழியாகப் பயன்படுத்தப்பட்டு, இப்போது கெலாவோ மக்கள் பேசும் மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. மற்ற மொழிகளில் ஹுமாங்க், நுவோசு மற்றும் போயி ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. கலாச்சாரம்ஆண்களின் பாரம்பரிய உடைகள் ஒரு நீளக்கை சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டது. பெண்கள் ஜாக்கெட்டுகள் மற்றும் குறுகிய பாவாடைகளை அணிகிறார்கள். இந்த பாவாடைகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன: முதல் பகுதி சிவப்பு நிறத்தால் ஆனது, மற்ற இரண்டு பகுதிகள் முறையே கருப்பு மற்றும் வெள்ளை நிற துணியால் அலங்கரிக்கப்படுகிறது. சில சமயங்களில் பெண்கள் நீண்ட தாவணியை அணிவார்கள். கெலாவோ மக்களின் பாரம்பரிய இசையில் ஜியாவோஹு (角胡; பின்யின் : ஜியோஹோ) எனப்படும் மாட்டுக் கொம்பிலிருந்து செய்யப்பட்ட இரண்டு சரங்கள் கொண்ட பிடில் போன்ற ஓர் இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. கெலாவோ மக்களின் இலக்கியங்கள் பொதுவாக நாட்டுப்புற கவிதைகள் மற்றும் பழமொழிகள் போன்றவற்றை உள்ளடக்கிய வாய்வழி இலக்கியங்களாகும். இவர்களின் பழங்கால நாட்டுப்புறப் பாடல்கள் வெவ்வேறு எண்ணிக்கையிலான சொற்களின் நீண்ட மற்றும் குறுகிய வாக்கியங்களைக் கொண்டிருக்கின்றன. கடந்த இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளில், இவர்களின் இலக்கியங்கள் பல சீன மொழியிலிருந்து வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கடன் வாங்கியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் தாவோயிச சமயத்தை கடைபிடிக்கின்றனர். இவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஆனால் பௌத்த சமயத்தை கடைபிடிக்கின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia