கோடநாடு எஸ்டேட்![]() கோடநாடு எஸ்டேட் (Kodanad estate) என்பது தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டமாகும். இந்தத் தோட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுமார் 12 கி.மீ. தொலைவில் கோடநாட்டில் உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோடநாடு காட்சி முனைக்கு அருகே இந்தத் தோட்டம் அமைந்துள்ளது. வரலாறு1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஓரிரு ஆண்டுகளில் சசிகலா தரப்பினரின் பார்வையில் கோடநாடு எஸ்டேட் பட்டது. கோடநாடு காட்சி, மாயாறு அருவி போன்றவை இந்த இடத்தை வாங்கியே தீரவேண்டும் என்ற ஆர்வத்தை சசிகலா தரப்பினருக்குத் தூண்டுகோலானது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பலரிடம் கைமாறிய இந்த எஸ்டேட், கிரேக் ஜோன்ஸ் என்பவரது குடும்ப சொத்தாக இருந்தது. அவர்களிடமிருந்து ஜெயலிலிதா தரப்பினரால் வலுவந்தமாக வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தங்களிடம் இருந்து எஸ்டேட் அபகரிக்கபட்டதாக அதன் முன்னாள் உருமையாளர் ஊடகங்களில் தெரிவித்தார். ஆறுமுகசாமி ஆணையத்திலும் சாட்சியளித்தார். இப்படி இந்த எஸ்டேட் 1992 ஆம் ஆண்டு ரூபாய் 7 கோடிக்கு வாங்கப்பட்டது.[1] எஸ்டேட்டின் பங்குதாரர்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டன. அப்போது இந்தத்தோட்டத்தின் பரப்பளவு சுமார் 906 ஏக்கர் ஆகும். அதன் பின்னர் இந்தத் தோட்டத்தின் பக்கத்திலிருந்த வேறு தோட்டங்கள் வாங்கப்பட்டு இதனுடன் இணைத்து 1,600 ஏக்கராக விரிவாக்கப்பட்டது. இங்கு சுமார் 5,000 சதுர அடி பரப்பிலான பிரம்மாண்ட பங்களா, உலங்கு வானூர்தி தளம், படகு குழாம், தேயிலைத் தொழிற்சாலை, தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் போன்றவை உள்ளன. இந்த தோட்டத்துக்கு வி. கே. சசிகலா, ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். ஜெயலலிதாவுக்கு இதில் 10 சதவீத பங்குகள் இருந்தன. ஜெயலலிதா இங்கு பல முறை தங்கி ஓய்வு எடுத்துள்ளார்.[2] இவர்களால் இந்த எஸ்டேட்டை வாங்கப்பட்டதில் இருந்து கோடநாடு பகுதியில் கடும் கெடுபிடிகள் அரங்கேற்றப்பட்டன. சாமானிய மக்கள் உள்ளே நுழையாத வகையில் தோட்டத்தில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்டேட்டில் இருந்து 500 சதுர மீட்டர் அளவில் இருந்த குடியிருப்பு 99 அறைகள் கொண்ட பிரம்மாண்ட பங்களாவாக புதுப்பிக்கப்பட்டது. இந்த பங்களா வெளியில் இருந்து பார்க்க முடியாதவாறு கட்டப்பட்டது. இந்த எஸ்டேட்டில் சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வி. கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி. என். சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டையும் பறிமுதல் செய்ய அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த எஸ்டேட் அரசுடமையாகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.[3] கொலை மர்மங்கள்2016 திசம்பர் 5 ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, 2017 பிப்ரவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், எப்போதும் மின்சாரம் தடைபடாத கொடநாட்டில் 2017 ஏப்ரல் 24 அன்று மின்சாரம் தடைபட்டது. எஸ்டேட் பங்களாவில் காவலில் இருந்த ஓம் பகதூர் என்பவர் அன்று நள்ளிரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும், அவருடன் காவல் பணியில் இருந்த கிருஷ்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் இருந்தார். இந்தக் குற்றங்கள் உள்ளே இருந்த ஆவணங்களைத் திருட நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இநிநிகழ்வின், நீட்சியாக இக் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வு தொடர்பாக சந்தேகிக்கப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகியோரை காவல் துறையினர் தேடி வந்தனர். ஆனால், சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு அருகே தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில், சயானின் மனைவி, மகள் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய சயான் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை நிகழ்வு தொடர்பாக, தீபு, சதீஷன், சந்தோஷ், உதய குமார், ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி, மனோஜ் சமி, வாளயார் மனோஜ், ஜிஜின் உள்ளிட்ட 9 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சயானையும் சேர்த்து இது தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கனகராஜ் என்பவர் உயிரிழந்தார்.[4] இந்த வழக்கில் கைதான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போதே, `யாருக்காக இதனைச் செய்தோம்?' என வெளிப்படையாக பேட்டி கொடுத்தனர். இதை தெகல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரிரியர் மேத்யு சாமுவேல் வெளிக்கொணர்ந்தா. அவர் வெளியிட்டக் கானொளியில் இந்தக் குற்றங்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் க. பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.[5] இதன் காரணமாக மூவர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia