சந்தியாகோ கலத்ராவா (ஜூலை 28, 1951) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரது வடிவமைப்புகள் இன்று உலகம் முழுவதிலும் பரவலான பிரபலம் பெற்றுள்ளன.
தோற்றமும் கல்வியும்
கலத்ராவா ஸ்பெயினிலுள்ள வலென்சியா என்னுமிடத்தில் பிறந்தார். அங்கேயுள்ள கலை மற்றும் கைவினைகள் கல்லூரியிலும், கட்டிடக்கலைக் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1975 ல் சுவிட்சர்லாந்தின், சூரிச் நகரத்திலுள்ள சுவிஸ் பெடரல் பொறியியல் நிறுவனத்தில் சேர்ந்து குடிசார் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே என்பவருடைய செல்வாக்கினால் உந்தப்பட்ட கலத்ராவா, கட்டிடக்கலையில் சிக்கலான வடிவங்களைப் புரிந்துகொள்வதும் அவற்றை உருவாக்குவதும் எப்படி என்பது குறித்து ஆராய்ந்தார். 1981 ல், அவரது முனைவர் பட்டத்துக்கான "வெளிச்சட்டகங்களின் மடிக்கப்படக்கூடிய தன்மை" (On the Foldability of Space Frames) பற்றிய ஆராய்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு, கட்டிடக்கலை மற்றும் குடிசார் பொறியியலில் தனது தொழிலைத் தொடங்கினார்.
கட்டிடக்கலைப் பாணி
தனித்துவமான, படைப்பாற்றல் சார்ந்த, பெரும் செல்வாக்கு மிக்க கலத்ராவாவின் பாணி, வளைந்து கொடாத பொறியியலின் கோட்பாடுகளும், கட்டிடக்கலையின் கவர்ச்சிமிக்க அழகியல் அம்சங்களும் இசைவுடன் இணைந்த ஒன்றாகும். இவருடைய வடிவமைப்புகளுக்கான வடிவங்களுக்கும் அமைப்புகளுக்குமான கருத்துருக்கள் பெரும்பாலும், இயற்கைச் சூழலிலிருந்து பெறப்பட்டனவாகும். பாலங்கள் முதலிய சில குடிசார் பொறியியல் வேலைத் திட்டங்களுக்கான வடிவமைப்புகளை இவரது வேலைகள் புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இவர் பல தொடர்வண்டி நிலையங்களை வடிவமைத்துள்ளார். ஒளி பொருந்தியனவும், திறந்த அமைப்பும், இலகுவாகப் பயணம் செய்யத்தக்கதாகவும் இவ் வடிவமைப்புகள் அமைந்துள்ளன.
பொதுவாக ஒரு கட்டிடக்கலைஞராகவே அறியப்பட்டாலும், கலத்ராவா ஒரு திறமையான சிற்பியும், ஓவியரும் ஆவார். கட்டிடக்கலை என்பது இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த கலையே என்பது இவரது கருத்து.