சரட்டோகா சண்டைகள்
சரட்டோகா சண்டைகள் (செப்டெம்பர் 19, அக்டோபர் 7, 1777) சரட்டோகா படை நடவடிக்கையின் உச்சக் கட்டமாக அமைந்து, பிரித்தானியருக்கு எதிரான அமெரிக்கப் புரட்சிப் போரில் அமெரிக்கர்களுக்குத் தீர்மானமான வெற்றியைக் கொடுத்தன. பிரித்தானியத் தளபதி யோன் பேர்கோயின் கனடாவின் சம்பிளெயின் பள்ளத்தாக்கில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பெரிய படை ஒன்றுக்குத் தலைமை தாங்கினார். பிரித்தானியப் படைகள் நியூயார்க்கில் இருந்து வடக்கு நோக்கியும், இன்னொரு படை ஒன்டாரியோ ஏரிப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கியும் வந்து தனது படையுடன் இணைந்து கொள்ளும் என பேர்கோயின் எதிர்பார்த்தார். ஆனால், இவ்விரு படைகளும் வரவில்லை. பேர்கோயினின் படைகள் அமெரிக்கப் படைகளால் சூழப்பட்டிருந்தன. இந்தச் சுற்றிவளைப்பை உடைத்து வெளியேறுவதற்காக, 18 நாட்கள் இடைவெளியில் நியூயார்க்கில் உள்ள சரகோட்டாவுக்கு 9 மைல்கள் (14 கி.மீ.) தெற்கே அவர் இரண்டு தாக்குதல்களை நடத்தினார். இரண்டு தாக்குதல்களும் தோல்வியடைந்தன. பிரித்தானியப் படைகளைவிடப் பலம்வாய்ந்த அமெரிக்கப் படைகளிடம் சிக்கியிருந்த பேர்கோயின், உதவிப் படைகள் எதுவும் வரும் சாத்தியங்களும் இல்லாமையைக் கண்டு சரகோட்டாவுக்குப் பின்வாங்கி அங்கே தனது முழுப் படைகளுடன் அக்டோபர் 17 ஆம் தேதி, அங்கிருந்த அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். வெல்வதற்கு இறுதித் தேவையாக இருந்த வெளிநாட்டு உதவியை அமெரிக்கர்களுக்குப் பெற்றுக்கொடுத்ததால் இவ்வெற்றி, போரின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என வரலாற்றாளர் எட்மண்ட் மோர்கன் கூறுகிறார்.[8] நியூ இங்கிலாந்தைத் தென் மாநிலங்களிலிருந்து பிரிக்கும் பேர்கோயினின் உத்தி சிறப்பாகத் தொடங்கியபோதும், பல பிரச்சினைகளால் மெதுவாகவே முன்னேறியது. அவர், தளபதி ஓராசியோ கேட்சின் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக, பிறீமன் பண்ணைச் சண்டையில் செப்டெம்பர் 19 ஆம் தேதி, பெரிய இழப்புடன் சிறிய உத்திசார்ந்த வெற்றியொன்றைப் பெற்றிருந்தார். பேமிசு ஹைட்ஸ் சண்டையில் அக்டோபர் 7 ஆம் தேதி மீண்டு தாக்குதல் நடத்தியபோது அவரது முன்னைய வெற்றிகள் பயனற்றுப் போயின. அமெரிக்கர்கள் அவரது பாதுகாப்பு அரண்களின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், பிரித்தானியப் படைகள் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. சரகோட்டாவில் இவரது படைகளைப் பெரிய அமெரிக்கப் படை சூழ்ந்துகொண்டதால் அக்டோபர் 17 ஆம் தேதி அவர் சரணடைந்தார். பிரான்சு முன்னரே அமெரிக்கர்களுக்கு ஆயுதங்களையும், பிற தேவைகளையும், குறிப்பாகச் சரகோட்டா வெற்றிக்கு உதவிய டி வில்லியர் பீரங்கிகளை, வழங்கியிருந்தபோதிலும், அமெரிக்கர்களின் வெற்றி பற்றிய இந்தச் செய்தியின் பின்னரே, அமெரிக்கரின் கூட்டாளியாகப் பிரன்சு போரில் முறைப்படி இணைந்துகொண்டது.[9] இதன் விளைவாகப் பிரித்தானியருக்கு எதிரான போரில் எசுப்பெயினும் பிரான்சுடன் சேர்ந்துகொண்டது. பேமிசு ஹைட்சில் இருந்த அமெரிக்கப் பாதுகாப்பு அரண்களைப் பக்கவாட்டில் இருந்து தாக்குவதற்காகத் தனது படைகளில் ஒரு பகுதியை நகர்த்தியபோது செப்டெம்பர் 19 ஆம் தேதிச் சண்டை தொடங்கியது. இதை எதிர்பார்த்த அமெரிக்கத் தளபதி பெனடிக்ட் ஆர்னோல்ட், பிரித்தானியப் படைகள் நகரும் வழியில் பெரிய படையொன்றை நிறுத்தியிருந்தார். பேர்கோயின் பிறீமன் பண்ணையைக் கைப்பற்றியபோதும் அவரது படைகளுக்குப் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. சண்டையைத் தொடர்ந்த நாட்களிலும் மோதல்கள் தொடர்ந்தன. நியூயார்க் நகரில் இருந்து உதவிப் படைகள் வருமென பேர்கோயின் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அமெரிக்கத் தேசபக்தப் படைகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இதேவேளை, அமெரிக்கப் படையினரிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஆர்னோல்டை அவரது பதவியில் இருந்து கேட்ஸ் நீக்கிவிட்டார். பிரித்தானியத் தளபதி என்றி கிளின்டன் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு அமெரிக்கர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக ஹட்சன் ஆற்று மேட்டுநிலப் பகுதியில் இருந்த இரண்டு கோட்டைகளை அக்டோபர் 6 ஆம் தேதி கைப்பற்றிக்கொண்டார். ஆனால், அவரது முயற்சிகள், பேர்கோயினைக் காப்பாற்ற உதவவில்லை. உதவி கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்ட பேர்கோயின் பேமிசு ஹைட்சை அக்டோபர் ஏழாம் தேதி மீண்டும் தாக்கினார். இடம்பெற்ற சண்டையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை அவர்கள் செப்டெம்பர் 19க்கு முன்னிருந்த நிலைக்குப் பிவாங்க வைத்தன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia