சாந்தலர்கள் கிளர்ச்சி (1855)

சாந்தலர்கள் கிளர்ச்சி (Santhal rebellion) அல்லது வனவாசிகள் கிளர்ச்சி (1855-1856) என்பது பீகார் மற்றும் வங்க மாநிலங்களில் (தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலம்) பரவலாக வாழ்ந்து வந்த பழங்குடியினர், தங்களைப் பிழிந்தெடுத்த பிரித்தானியர், மேல்சாதியினர் மற்றும் நில உரிமையாளர்களின் அதிகாரம் மற்றும் ஊழல்களை எதிர்த்து ஈடுபட்ட கிளர்ச்சியாகும். சந்தாலிகள் என்ற பழங்குடியினருக்கு எதிராக பிரித்தானிய அரசு பிறப்பித்த நியாயமற்ற உத்தரவுகளை எதிர்த்து நடந்த இந்தப் போராட்டம் "சாந்தலர்கள் கிளர்ச்சி" என்றழைக்கப்பட்டது. 1855, ஜூன் 30, இல் தொடங்கப்பட்ட இந்தக் கிளர்ச்சியை ஒடுக்க 1855, நவம்பர் 10-ல் பிரித்தானிய அரசு ஓர் இராணுவ சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. இச்சட்டம் 1856, ஜனவரி 3 வரை கிழக்கு இந்தியாவில் நீடித்தது. இது திரும்பப் பெறப்பட்டபோது சாந்தல மக்கள் பிரித்தானியரின் விசுவாசமான படைகளின் கொடூரங்களுக்கு ஆளாகி உயிர்த் தியாகம் செய்திருந்தனர்.

கிளர்ச்சியின் பின்னணி

சாந்தலர்கள் (Santals) என்ற ஒரு பழங்குடி இன மக்கள் வாழ்ந்த மலைப்பாங்கான கட்டாக், தால்பூமி, மான்பூமி, பாராபூமி, சோட்டாநாகபுரி, பாலமாவு, ஹசாரிபாக், மிதன்பூர், பங்குரா மற்றும் வீர்பூமி மாவட்டங்கள், இந்தியாவில் பிரித்தானியர் வருகைக்கு முன் வங்காள இராஜதானியாக அறியப்பட்டது. இவர்கள் வேட்டையாடுதல் மற்றும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகளின் ஜமீன்தார்களின் இனவெறி மற்றும் ஊழல், கந்துவட்டி, லேவாதேவி போன்ற நடைமுறைகளைச் சகித்துக் கொண்டும் சிற்சில எதிர்ப்புகளைக் காட்டியும் வாழ்ந்து வந்தனர்

ஆனால் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் புதிய முகவர்கள், இவர்கள் வாழ்ந்த நிலங்களைத் தங்கள் உரிமையாக எடுத்துக் கொண்டனர். எனவே இப்பழங்குடியின மக்கள் ராஜ்மகால் மலைகளுக்குச் சென்று குடியேறினர். சிறிது காலத்திற்குப் பிறகு பிரித்தானியருடன் இணைந்த ஜமீன்தாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த புதிய நிலத்திலும் தங்களுக்கு உரிமைகள் இருப்பதாகக் கூறத் தொடங்கினர்.

அடிமைகளாக்குதல்

கல்வியறிவில்லாத பழங்குடியின மக்களை ஏமாற்றி அவர்களைத் தங்கள் அடிமைகளாக்கினர். அவர்களுடைய மனைவியருக்கு வஞ்சகமாகப் பொருள்கள் மற்றும் பணம் கொடுத்து அவர்களை மேலும் கடன்சுமையில் தள்ளினர். இதனால் ஒரு சாந்தலர் தன் ஆயுள் முழுவதும் அடிமையாக உழைப்பினும் அக்கடனைத் தீர்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக அம்மக்கள் அடிமை வாழ்வு வாழும் நிலை ஏற்பட்டது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள்

தொழிலாளர் ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரிந்த சாந்தல இனப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். மற்றும் சில பெண்கள், முகவர்கள் மற்றும் கடன் வழங்கிய ஜமீன்தாரர்களின் பாலியல் ஆசைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர். இதனால் கொதித்தெழுந்த சாந்தல இன மக்கள் 1855-ல் சித்து, கானு, சாந்து மற்றும் பைரவ் என்ற பழங்குடியினத் தலைவர்களின் கீழ் தங்கள் இனத்தின் மீதான வன்கொடுமைகளை எதிர்த்துக் கிளர்ச்சியை அறிவித்தனர்.[1]

கிளர்ச்சியின் போக்கு

பத்தாயிரம் சாந்தலர்கள் அணிதிரண்டு நில உரிமையாளர்களுக்கும் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பல கிராமங்களில் ஜமீன்தாரர்கள், மற்றும் நில உரிமையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த திடீர்க் கிளர்ச்சியைக் கண்ட பிரித்தானிய அரசு அதிர்ச்சியடைந்தது. தொடக்கத்தில் சிறிய படையை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்க நினைத்தது. ஆனால் அது வெற்றி பெறாமல் மேலும் கிளர்ச்சி வலுவடையத் தொடங்கியது. சட்டம் ஒழுங்கு நிலைமை கைமீறிச் சென்றதால், கிளர்ச்சியை ஒடுக்க இறுதியாக மிகப்பெரிய எண்ணிக்கையிலான படைத் துருப்பை ஆங்கில அரசு அனுப்பியது.

இனப்படுகொலைகள்

இப்போரில் பெரும் எண்ணிக்கையிலான சாந்தல இனமக்கள் அழிக்கப்பட்டனர். இவர்களின் பழைய போர்முறை ஆயுதங்களான ஈட்டி, வேல், கம்பு முதலியன பிரித்தானியரின் கைத்துப்பாக்கி மற்றும் பீரங்கியின் முன் தோல்வியடைந்தன. ஆயினும் தீரமுடன் போராடிய இவர்களை அடக்க 7ஆவது படைப்பிரிவின் துருப்புகளும் 40 ஆவது படைப்பிரிவின் துருப்புகளும் மேலும் வரவழைக்கப்பட்டன. இம்மோதல் 1855 ஜூலை முதல் 1856 ஜனவரி வரை நடைபெற்றது. ககால்கோன், சூரி, ரகுநாத்பூர் மற்றும் மங்கதோரா முதலிய இடங்களில் மக்களின் எழுச்சி கொடூரமாக நசுக்கப்பட்டது. மூர்ஷிதாபாத் நவாப்பால் வழங்கப்பட்ட யானைகள் சாந்தலர்களின் குடிசையை இடித்துத் தரைமட்டமாக்கின. ஏராளமானோர் உயிரிழந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த வன்முறைக்கு எதிரான இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த சித்து, கானு ஆகியோர் பிரித்தானிய படையினரால் கொல்லப்பட்டனர்.

பீகாரில் கிளர்ச்சி

இதே சமயத்தில் தற்பொழுது ஜார்க்கண்ட் என்றழைக்கப்படும் பீகாரின் தென் பகுதியில் முண்டா இன பழங்குடியினரும் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். இவர்களின் தலைவர் பிர்க்கா முண்டா சிறையில் உயிர் துறந்தார்.

திரைப்படம்

இக்கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு இயக்குநர் மிருணாள் சென் என்பவரால் 1976-ல் மிருகயா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. Retrieved 2012-05-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya