சான்ட்டா கிளாரா (Santa Clara, /ˌsæntəˈklærə/) கலிபோர்னியா மாநிலத்தில் சான்ட்டா கிளாரா மாவட்டத்தில் உள்ளதோர் நகரமாகும். 1777இல் இங்கு நிறுவப்பட்டிருந்த எசுப்பானிய குடியேற்றத்தை ஒட்டி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 116,468 ஆகும்; சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் ஒன்பதாவது மிகுந்த மக்கள்தொகை உள்ள இடமாக இது உள்ளது.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 45 மைல்கள் (72 km) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1777இல் நிறுவப்பட்டது; 1852இல் நகரமாயிற்று. கிறித்தவத்தை பழங்குடியினரிடம் பரப்புவதற்காக கலிபோர்னியாவில் நிறுவப்பட்ட 21 எசுப்பானிய சமயச் சபைகளில் எட்டாவது, மிசன் சான்ட்டா கிளாரா டெ அசிசு, இங்கு அமைந்திருந்தது. இதுவே இந்நகருக்குப் பெயர் காரணமாயிற்று.[8] இந்த சமயச்சபையும் பூங்காவும் தற்போதைய சான்ட்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் புரவலர் புனிதராக புனித கிளாரா உள்ளார்.[9]