சார்பாண்மை மக்களாட்சிசார்பாண்மை மக்களாட்சி (Representative democracy) அல்லது பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்பது ஒருவகை மக்களாட்சி அரசு முறையாகும்.[1] இம்முறை, தனியாள் அதிகாரம் கொண்ட அரசு முறை, எல்லா மக்களுமே நேரடியாகப் பங்குபெறும் நேரடி மக்களாட்சி முறை என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது, இம்முறையில் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினர் மக்கள் சார்பில் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர்.[2][3][4] இம் முறையில் சார்பாளர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செய்பவர்களாக இருப்பதில்லை. மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, மாறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உகந்த முறையில் இயங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நேரடி மக்களாட்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சியில் சார்பாளர்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செயல்படுபவர்களாக இருப்பர். கனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற சார்பாண்மை மக்களாட்சி நிலவும் நாடுகளில், சார்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இத் தேர்தல்கள் பெரும்பாலும் பன்மைத்துவ முறையில் அமைந்தவை. பன்மைத்துவத் தேர்தலில், வெற்றிபெறும் வேட்பாளர் தனித்தனியாக மற்ற ஒவ்வொரு வேட்பாளரிலும் கூடிய வாக்குகள் பெற்றால் போதுமானது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை. தற்போதுள்ள மக்களாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தேர்தல் முறையையே பின்பற்றுகின்ற போதும், கோட்பாட்டளவில், குலுக்கல் முறை போன்ற பிற முறைகளிலும் சார்பாளர்கள் தெரிவு செய்யப்படலாம். சிலவேளைகளில் சார்பாளர்களே பிற சார்பாளர்களைத் தெரிவு செய்வதும் உண்டு. குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளுக்கு சார்பாளர்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர். தனிமனித சுதந்திரத்துக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கும் சார்பாண்மை மக்களாட்சி, தாராண்மை மக்களாட்சி (liberal democracy) எனப்படுகின்றது. அவ்வாறில்லாத சார்பாண்மை மக்களாட்சி தாராண்மையில் மக்களாட்சி (illiberal democracy) எனப்படும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia