சிறீநகர் வானூர்தி நிலையம்
சேக் உல்-ஆலம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sheikh ul-Alam International Airport, (ஐஏடிஏ: SXR, ஐசிஏஓ: VISR)) அல்லது பரவலாக சிறீநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சம்மு காசுமீரின் வேனிற்கால தலைநகரமான சிறீநகருக்கு சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்திய வான்படைக்குச் சொந்தமான இந்த நிலையத்திலிருந்து இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பொதுப்பயன்பாட்டிற்கான தனிவளாகத்தை பராமரித்து வருகின்றது. 2005இல் இது பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 2018 வரை பட்டியலிடப்பட்ட பன்னாட்டு பறப்புகள் எதுவும் இங்கிறங்கவில்லை; ஹஜ் பறப்புகள் சில இயக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பறப்புகளுக்கும் பன்னாட்டுப் பறப்புகளுக்கும் ஒருங்கிணைந்த முனையம் உள்ளது. ஓடுபாதை அசுபால்ட்டால் ஆனது. சிறீநகரிலிருந்து வடக்கே 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவிலுள்ள வானூர்தி நிலையத்திலிருந்து நகரத்திற்குச் செல்ல பேருந்து, வாடகையுந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரலாறுதுவக்கத்தில் சிறீநகர் வானூர்தி நிலையம் இந்திய வான்படையால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1947இல் நடந்த இந்தியப் பாக்கித்தான் போரின்போது, இங்குதான் இந்தியப்படைகள் தரையிறக்கப்பட்டு பாக்கித்தான் சிறீநகரைக் கைப்பற்றுவதை தடுத்தது. அப்போது இந்த நிலையம் சிறியதாகவும் வசதிகளின்றியும் இருந்தபோதும் இந்தியத் துருப்புகள் அக்டோபர் 27ஆம் நாள் வெற்றிகரமாக தரையிறங்கினர்.[1] செப்டம்பர் 1965இல்நடந்த போரின்போது இதன்மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சில வானூர்திகள் சேதமடைந்தன.[2][3] 1979இல் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் குடிசார் வளாகமொன்றை நிறுவியது.[4] 1998இல் ஹஜ் பன்னாட்டு பறப்புகளை கையாளுமாறு முனையத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.[5] 2002 சனவரி முதல் ஹஜ் பயணங்கள் இங்கிருந்து இயங்கத் தொடங்கின.[6] 1999ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, இந்த வானூர்தி நிலையத்தை முழுமையாக இந்திய வான்படை கைக்கொண்டது. குடிசார் பறப்புகள் தடை செய்யப்பட்டிருந்தன.[7] மார்ச்சு 2005இல் இந்த வானூர்திநிலையத்திற்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற தகுதி கிட்டியது. 2006இல் இதற்கு சேக் உல்-ஆலம் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது; நந்து ரிஷி என அறியப்பட்ட காசுமீரின் பாதுகாப்புத் துறவியின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.[8] உள்நாட்டுப் பறப்புகளையும் வெளிநாட்டுப் பறப்புகளையும் கையாளும் வண்ணம் முனையம் விரிவாக்கப்பட்டு பெப்ரவரி 14, 2009இல் அரசியல்வாதி சோனியா காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.[4] இத்திட்டத்தின் ஒருபகுதியாக நிறுத்துமிடங்களை நான்கிலிருந்து ஒன்பதாக கூட்டிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.[9] இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ₹130 கோடி (ஐஅ$15 மில்லியன்) ஆகும். இதற்கான முழுச்செலவையும் இந்திய அரசு ஏற்கும்.[4] அதேநாளில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது வாராந்திர துபாய் பறப்பை துவக்கியது. இதுவே சிறீநகரிலிருந்து வெளிநாடு செல்லும் காலவணைப்படியான முதல் பறப்பு ஆகும்.[4][6] இருப்பினும், குறைந்த பயணிகளின் போக்குவரத்தால் இந்த பறபு சனவரி 2010 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.[10] அணுக்கம்சிறிநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவில் உள்ளது.[11] 250 தானுந்துகள் நிறுத்தக்கூடிய தானுந்து நிறுத்தம் உள்ளது.[4] வானூர்தி நிலையத்திற்கும் நகரில் லால் சவுக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மையத்திற்கும் இடையே அரசு கட்டணமின்றி வழங்கும் பேருந்து சேவை உள்ளது. தவிரவும் நிலையத்தின் நுழைவாயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள முனையத்திற்கு வானூர்தி நிலையங்கள் ஆணையம் கட்டணமில்லா பேருந்து இயக்குகின்றது..[12] வாடகைத் தானுந்துகளுக்கும் தானுந்துக் குத்தகை நிறுவனங்களுக்கும் சேவை வழங்கு முகப்புகள் முனையத்திற்கு வெளியே உள்ளன.[13] கட்டமைப்புசிறீநகர் வானூர்தி நிலையம் உள்நாடு, வெளிநாடு பறப்புகளை ஒருசேரக் கையாளும் ஓர் ஒருங்கிணைந்த வானூர்தி நிலையமாகும். 19,700 சதுர மீட்டர்கள் (212,000 sq ft) பரப்பளவில் 950 பயணிகளைக் கையாளுமளவில் கட்டப்பட்டுள்ளது; இதில் 500 உள்நாட்டுப் பயணிகளும் 450 பன்னாட்டுப் பயணிகளுமாவர்.[4] இந்த வானூர்தி நிலையத்தின் முகப்பு இமயமலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சாய்வானக் கூரைகளைக் கொண்டிருப்பதால் பனிப்பொழிவின்போது பனித்தூவி சேர்வதில்லை.[14] கைவினைப் பொருட்களங்காடிகள், தன்னியக்க வங்கி இயந்திரங்கள், நாணயமாற்று, சாக்கலேட்டு கடை ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா ஒய்-ஃபை 30 நிமிடங்களுக்கு வழங்கப்படுகின்றது.[13] இங்கு ஒற்றை அசுபால்ட்டாலான ஓடுபாதை, 13/31 உள்ளது; இது 3,685 by 46 மீட்டர்கள் (12,090 அடி × 151 அடி) அளவுகள் கொண்டது.[15] பெப்ரவரி 2011 முதல் கருவிசார் கீழிறங்கு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.[14] வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia