சீலாந்து
சீலாந்து (Zeeland, இடச்சு: [ˈzeːlɑnt] (ⓘ); வரலாற்று ஆங்கிலப் புறப்பெயர்: Zealand) என்பது நெதர்லாந்தின் மேற்கு மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும். இம்மாகாணம் நெதர்லாந்தின் தென்மேற்கே அமைந்துள்ளது, இதன் எல்லைகளாக கிழக்கே வடக்கு பிராபர்ன்ட், வடக்கே தெற்கு ஒல்லாந்து, தெற்கு மற்றும் மேற்கே பெல்சியம் நாடும் உள்ளன. இது பல தீவுகளையும் மூவலந்தீவுகளையும் (எனவே இதன் பெயர், "சீலாந்து", கடல்நாடு என்று பொருள்படும்), கிழக்கு மற்றும் மேற்கு மேற்கு பிளாண்டர்சு மாகாணங்களின் எல்லையில் ஒரு துண்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் தலைநகர் மிடல்புர்க், 2019 நவம்பரில் 48,544 மக்கள்தொகையாக இருந்தது.[5] சீலாந்தின் மிகப்பெரிய மாநகரம் தெர்நியூசென் (மக்கள்தொகை 54,589). சீலாந்தில் இரண்டு துறைமுகங்கள் உள்ளன. விளிசிங்கன், தெர்நியூசென் ஆகியன. சீலாந்தின் பரப்பளவு 2,934 சதுரகிமீ ஆகும், இதில் 1,151 சதுரகிமீ நீர்ப்பகுதி ஆகும். மொத்த மக்கள்தொகை 383,689.[2] சீலாந்தின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்திற்குக் கீழே உள்ளன. 1953 இல் ஏற்பட்ட வடகடல் வெள்ளப்பெருக்கே கடைசியாக இங்கு ஏற்பட்ட வெள்ள்ம் ஆகும். சுற்றுலா ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகும். கோடையில், அதன் கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக செருமனிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாக அமைகிறது. சில பகுதிகளில், அதிகமான கோடை காலத்தில் மக்கள்தொகை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். சீலாந்தின் சின்னம் தண்ணீரில் இருந்து பாதியாக வெளிப்பட்ட சிங்கத்தைக் காட்டுகிறது, மேலும் luctor et emergo (இலத்தீன் மொழியில் "நான் போராடி வெளிவருகிறேன்") என்பதாகும்.[6] நியூசிலாந்து நாடு டச்சு ஆய்வாளர் ஏபெல் தாசுமனால் பார்க்கப்பட்டதால், சீலாந்தின் பெயரால் அது பெயரிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia