செங்குந்தபுரம்
செங்குந்தபுரம் என்பது தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் (ஜெயம்கொண்ட சோழபுரம்) பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இக்கிராமத்தில் 1,500 செங்குந்தர் குடும்பங்கள் உள்ளன. இதன் அஞ்சல் குறியீடு 621802 ஆகும். இந்த ஊர் ஜெயங்கொண்டம் நகராட்சியின் 2-வது மற்றும் 11-வது வார்டு பகுதிகளை உள்ளடக்கியது. இந்த ஊர் ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர்தொலைவில் அமைந்துள்ளது. இதன் தென்கிழக்கில் ஜெயங்கொண்டம் நகரம், தெற்கில் சூரியமணல் கிராமம் , மேற்கில் கரைமேடு கிராமம் , வடக்கில் புதுக்குடி கிராமம் எல்லைகளாக உள்ளன. 1916 ஆம் ஆண்டில் செங்குந்தபுரம் உருவானது. மருதுார், வாரியங்காவல் மற்றும் இலையூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பால் இக்கிராமம் உருவானது. உடையார்பாளையம் ஜமீன்தாரிடமிருந்து செல்லக்கணபதி முதலியார் மற்றும் செல்லக்குட்டி முதலியார் அடங்கிய குழுவினரால் 56 ஏக்கர் நிலம் வாங்கி இந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டது. பெரும்பான்மையான மக்கள் நெசவுதொழில் செய்து வந்தனர். இந்த ஊரில் உற்பத்தியாகும் கைத்தறி சேலைகள் மிகவும் பிரபலமானது. ஆந்திராவில் உள்ள கடப்பா, நெல்லூர் , ராஜமுந்திரி பகுதி மக்களிடம் பிரபலமாக உள்ளது. கைத்தறி, பட்டு நெசவு செய்து வந்த பலரும் இப்போது வேறு தொழிலுக்கு மாறியுள்ளனர். தற்போது படித்த இளைஞர்கள் பலரும் வெளியூர்/வெளிமாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இக்கிராமம் 2016 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவினை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடியது. இதனை நினைவுகூறும் விதமாக நினைவுதூண் இக்கிராம மக்களால் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஊரில் விநாயகர் கோயில், மாரியம்மன் கோவில் (அதே வளாகத்தில் சிவன் கோயில்), கிருஷ்ணர் கோவில், அரச மரத்தடி சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாரியம்மன் கோவில் திருவிழா பிரபலமானது. இதில் பெண்கள் பால்குடம் எடுத்தும், ஆண்கள் மயில் காவடி, பூந்தேர், சிலா குத்திக்கொள்ளுதல் மூலம் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருவிழாவின் கடைசி நாளில் வரும் தேர் பிரபலமானது. இந்த ஊர் மக்களின் நீர் மேலாண்மை சிறப்பானது. இந்த ஊரில் மீனம்பாடி ஏரி, மாரியம்மன் கோயில் ஏரி , அரச மரத்து ஏரி என பல ஏரிகள் உள்ளன. ஒரு ஏரி நிரம்பினால் அதன் உபரி நீர் அடுத்த ஏரிக்கு செல்லும்வண்ணம் கால்வாய் வசதிகள் சிறப்பாக உள்ளன. இந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மிக பிரபலமானது. அருகிலுள்ள பல கிராமங்களிலிருந்து மாணவர்கள் பலர் இப்பள்ளியில் படித்து பயன்பெற்றுள்ளனர். மேற்பார்வைவெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia