செயின்ட் மரினோ நகரம்
செயின்ட் மரினோ (City of San Marino) என்பது இத்தாலியக் குடாநாட்டில் அமைந்துள்ள செயின்ட் மரினோ குடியரசின் தலைநகரம் ஆகும். [1] இது எட்ரியாட்டிக் கடலின் அருகில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் சனத்தொகை 4,128 ஆகும். இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 7.09 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 749 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. டொகானா மற்றும் போர்கோ மக்கோரி ஆகிய நகரங்களை அடுத்து இதுவே நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்நகரின் எல்லைகளாக செயின்ட் மரினோ நகராட்சிகளான அக்குவாவிவா, போர்கோ மக்கோரி புளோரென்டினோ, சீசனுவா ஆகியவையும் இத்தாலிய நகராட்சியான செயின்ட் லியோவும் அமைந்துள்ளன. வரலாறுசெயின்ட் மரினஸ் என்பவராலும் வேறு சில கிறித்தவ அகதிகளாலும் இந்நகரம் கி.பி. 301 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[2] ரோமானிய அடக்குமுறையிலிருந்து தப்பியோடிய பல அகதிகள் இந்நகரில் வந்து குடியேறினர். இதன் காரணமாக ஐரோப்பாவில் காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த குடியரசுகளில் செயின்ட் மரினோவும் ஒன்றாக விளங்கியது. நகரின் பாதுகாப்பு அங்கு கட்டப்பட்ட மூன்று கோபுரங்களினாலும் உறுதிசெய்யப்பட்டது.[3] அவற்றில் குவைட்டியா[4] எனும் கோபுரம் நகரப் பாதுகாப்பில் முக்கிய இடம் வகித்தது. இது 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோபுரத்தை எதிரிகள் எவரும் கடக்க முடியாது. இதனால் எதிரிகளின் பல்வேறு தாக்குதல்களில் இருந்து இந்நகரம் பாதுகாப்புப் பெற்றது. சிலுவை யுத்தத்தின் போது நகரப் பாதுகாப்பிற்கு மேலும் ஓர் கோபுரம் தேவைப்பட்டமையினால் செச்டா எனும் கோபுரம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அத்துடன் மூன்றாவது கோபுரமாக 14 ஆம் நூற்றாண்டின் மொன்டேல் எனும் கோபுரம் கட்டப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரு கோபுரங்களிலும் பார்க்க இது சிறியதாகும். பொருளாதாரம்கற்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் செதுக்குதலின் மூலமே இந்நகரின் தற்போதைய பிரதான பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. எனினும் சுற்றுலாக் கைத்தொழில், வர்த்தகம், விற்பனைப் பொருட்கள், தபால் முத்திரைகள், விவசாயக் கைத்தொழில் போன்றவற்றின் மூலமும் நகரின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அடையாளங்கள்இந்நகரிற்கு ஆண்டுதோறும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தருகின்றனர். இதனால் இது சுற்றுலாத்துறையில் வளர்ச்சி பெறும் நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. ஆண்டுதோறும் வருகின்ற சுற்றுலாப்பயணிகளில் 85% ஆனோர் இத்தாலியர்களே ஆவர். அத்துடன் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சில்லறை விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்துநீண்ட வளைந்த அகலமான தெருக்களை இங்கு அதிகமாகக் காணலாம். இந்நகர் சாய்வான மலைப்பாங்கான இடமொன்றில் அமைந்துள்ளமையால் நகரின் மையப்பகுதியில் மோட்டார் கார்கள் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுஇந்நகரில் எஸ்.எஸ்.முரட்டா (S.S. Murata)[5]மற்றும் எஸ்.பி.ட்ரே பென்னே (S.P. Tre Penne)[6] எனும் இரு காற்பந்து அணிகள் இருக்கின்றன. 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் தீபமானது இந்நகரினூடாகவும் சென்றுள்ளது. படத்தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia