செல்சீ கால்பந்துக் கழகம் (Chelsea Football Club) இலண்டன் ஃபுல்ஹாமில் அமைந்துள்ள ஓர் ஆங்கிலகால்பந்தாட்டக் கழகமாகும். 1905ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கழகம் முதன்மைக் கூட்டிணைவுப் போட்டிகளில் பங்கெடுத்து வருவதுடன் பெரும்பாலான காலத்தில் கூட்டிணைவின் மேல்நிலை கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 40,341-இருக்கைகள் கொண்ட இசுடாம்போர்டு பிரிட்ஜ் விளையாட்டரங்கம் தொடக்கம் முதலே இவர்களின் தாய் அரங்கமாக விளங்குகிறது. 2003 முதல் உருசிய பெருஞ்செல்வர் ரோமன் அப்ரமோவிச் இக்கழகத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார்.[5]
செல்சீ 1955ஆம் ஆண்டில் முதல்முறையாக கூட்டிணைவு வாகையாளர் பட்டத்தை வென்றது. தொடர்ந்து 1960களிலும் 1970கள்,1990கள் மற்றும் 2000களில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. செல்சீயின் வரலாற்றில் கடந்த பத்தாண்டுகள் மிகவும் வெற்றிகரமான காலமாக அமைந்திருந்தது; 2010இல் முதல்முறையாக கூட்டிணைவு முதலிடத்தையும் எஃப்.ஏ கோப்பையையும் (இது இரட்டை வெற்றி எனப்படும்) வென்றது. 2012இல் முதல்முறையாக ஐரோப்பிய வெற்றியாளர் கோப்பையை வென்றது.[6][7] மொத்தமாக, செல்சீ ஆங்கில கூட்டிணைவு வாகையாளராக நான்கு முறையும் எஃப் ஏ கோப்பையை ஏழு முறையும், கூட்டிணைவுக் கோப்பையை நான்கு முறையும் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்களின் கோப்பையை இரண்டு முறையும் யூஈஎஃப்ஏ வாகையாளர் கூட்டிணைவு வாகையாளராக ஒருமுறையும் வென்றுள்ளனர்.[8]
செல்சீயின் வழமையான சீருடை வெள்ளை வண்ண காலுறைகளுடன் ரோயல் நீல வண்ணத்தில் சட்டைகளும் அரைக்காற் சட்டைகளுமாகும். இதனால் இக்கழகத்தின் அணி பரவலாக த புளூசு (நீலங்கள்) என அழைக்கப்படுகின்றனர். கழகத்தின் சின்னம் பல முறை மாற்றப்பட்டுள்ளது. தற்போதுள்ள சின்னம் 1950இல் அறிமுகப்படுத்தியதன் திருத்தப்பட்ட ஒன்றாகும்.[9] அனைத்துக் காலத்துக்குமான ஆங்கில கால்பந்துப் போட்டிகளுக்கான மிக உயர்ந்த பார்வையாளர் எண்ணிக்கைகளில் தொடர்ந்து ஐந்தாவது தரநிலையில் உள்ளது.[10] 2011-12 பருவத்தில் சராசரியாக தங்கள் தாய் அரங்கில் 41,478 பார்வையாளர்களைக் கொண்டிருந்தது; இது முதன்மைக் கூட்டிணைவில் ஆறாவது மிக உயரிய எண்ணிக்கை ஆகும்.[11]