ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்
ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் அல்லது ஜார்ஜ் ஆர். ஆர். மார்டின் (George R. R. Martin, பி. செப்டம்பர் 20, 1948) ஒரு அமெரிக்க கனவுருப்புனைவு எழுத்தாளர். ஜார்ஜ் ரேமண்ட் ரிச்ச்சர்ட் மார்ட்டின் என்பது இவரது முழுப்பெயர். ஜி. ஆர். ஆர். எம் என்று தனது முன்னெழுத்துகளாலும் அறியப்படுகிறார். எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (A Song of Ice and Fire) கனவுருப்புதின வரிசை இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும். கனவுருப்புனைவுகளைத் தவிர திகில் புனைவு, அறிபுனை போன்ற பாணிகளிலும் புத்தகங்களை எழுதியுள்ளார். பல ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களில் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் டொல்கீன் என்று கருதப்படும் மார்ட்டின் தற்போது கனவுருப்புனைவு உலகின் பெரும் புள்ளிகளில் ஒருவராவார். 1970களில் அறிபுனை சிறுகதைகளை எழுதத் தொடங்கிய மார்ட்டின் பல முறை ஹூகோ மற்றும் நெபூலா விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1980களில் தொலைக்காட்சித் துறையில் சேர்ந்து திரைக்கதைகளை எழுதத்தொடங்கினார். தி டிவிலைட் சோன், பியூட்டி அண்ட் தி பீஸ்ட் போன்ற வெற்றிபெற்ற தொடர்களில் திரைக்கதை எழுத்தாளாராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் புத்தகங்களில் தொகுப்பாசிரியாராகவும் வேலை பார்த்தார். 1996ல் எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் வரிசையில் முதல் புதினமான எ கேம் ஆஃப் துரோண்ஸ் (A Game of Thrones) வெளியாகி பெரு வெற்றி பெற்றது. ஏழு புத்தகங்களைக்கொண்ட இந்த வரிசையில் இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டினின் பல படைப்புகள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. தற்சமயம் எ கேம் ஆஃப் துரோண்ஸ் புதினம் அமெரிக்காவின் ஹெச். பி. ஓ நிறுவனத்தால் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. தனது எழுத்துக்காக ஹூகோ, நெபூலா, பிராம் ஸ்டோக்கர் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். வாசகர்களுடன் இணையம் மூலமாகவும், அறிபுனை / கனவுருப்புனைவு கருத்தரங்குகள் மூலமாகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மார்ட்டின் தனது மிகப்பிரபலமான படைப்பான எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் ஐ முடிக்காமல் இழுத்தடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia