திருநந்திக்கரை குகைக் கோயில்![]() திருநந்திக்கரை குகைக் கோயில் (Thirunandikkara Cave Temple) என்பது கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் கால குகைக் கோயில் ஆகும். இது திருநந்திக்கரை கோயிலின் ஒரு பகுதியாக உள்ளது. இது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டாறு அருகே உள்ளது. அண்மைக் காலம்வரை, கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் கேரள பகுதிகளாக இருந்தன. இப்போது தமிழ்நாட்டின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது. இந்தக் குகைக்கோயில் முதலில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சமணர்களுக்காக நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இந்து மதக் கோவிலாக மாறியது.[1][2] குகையின் மண்டபம் மிகுதியாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்டிருந்ததாக கணிப்பு உள்ளது. இருப்பினும், தற்போது மங்கிய நிலையில் உள்ள ஓவியங்களே கடந்தகால ஓவியங்களை நினைவூட்டுவதாக உள்ளன. இந்த சுதை ஓவியங்கள் கி.பி 9-10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியங்கள் ஆகும்.[1][2] முற்காலச் சுவரோவியங்கள் சில கேரள பாணியில் உள்ளன. இந்த ஓவியங்கள் காவியக் கதைகளான இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைக் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்த குகைச் சுவரோவியங்கள் கேரள பாணி பழமையான ஓவியங்களின் எடுத்துக்காட்டுகளாக கூறப்படுகிறது.[2][3][4] இயற்கையான நிறமிகள் மற்றும் தாவர நிறங்கள் ஆகியவற்றைக் கொண்டே பழங்காலத்தின் பாரம்பரிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த ஓவியக் கலை கேரள மாநிலம் காலடியில் உள்ள ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத கல்லூரியிலும், குருவாயூர் கோவிலின் ஆதரவு பெற்ற ஒரு சுவர்ரோவியக் கலைப் பள்ளியிலும் ஆராய்ச்சி செய்தும், அங்கு சுவர் ஓவியக் கலையைக் கற்பித்தலிலும் ஈடுபட்டு வருகின்ற கலைஞர்களின் பணியால் இந்த ஓவியக் கலை, ஒரு புதிய தலைமுறைக் கலைஞர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia