துத்தநாக பாசுபேட்டு
துத்தநாக பாசுபேட்டு (Zinc phosphate) என்பது Zn3(PO4)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோகங்களின் மேற்பரப்பில் அரிப்புத் தடுப்பியாக மின்முலாம் பூசும் செயல்முறையில் அல்லது சாயம் பூசுவதற்கு முன்பான முதற்பூச்சாகப் பூசும் முறையில் ஒரு மேற்பூச்சாகப் பூச இச்சேர்மத்தை பயன்படுத்துகிறார்கள். ஈயம் அல்லது குரோமியம் மேற்பூச்சுகள் பூசுவதில் உண்டாகும் நச்சு அபாயங்களை துத்தநாக பாசுபேட்டு பூச்சு அகற்றுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் மிகப் பொதுவான அரிப்புத் தடுப்பியாக துத்தநாக பாசுபேட்டு பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது [1]. வெறுமையான உலோகங்களின் மேல் இதைப் பூசுவதைக் காட்டிலும் படிகக் கட்டமைப்பு மேற்பரப்புகளின் மேல் பூசுவது அதிக பலனைக் கொடுக்கும். எனவே சோடியம் பைரோபாசுபேட்டு போன்ற ஒரு பொது முகவரை முன்னதாகப் பூசி பின்னர் துத்தநாக பாசுபேட்டு பூசப்படுகிறது [2]. ஒபெய்ட்டும் பாரா ஓப்பெய்ட்டும் (Zn3(PO4)2•4H2O) துத்தநாக பாசுபேட்டைக் கொண்டுள்ள இயற்கைக் கனிமங்களாகும். Zn2(PO4)(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் டர்புட்டைட்டு கனிமம் இயற்கையான நீரேறிய துத்தநாக பாசுபேட்டுக்கு இணையான கனிமமாகக் கருதப்படுகிறது. இவ்விரண்டுமே துத்தநாகத் தாது படுகைகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது. சிபேலரைட்டு கனிமம் பாசுபேட்டு மிகு கரைசல்கள் மூலம் ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதால் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நீரேறிய வடிவம் இயற்கையாக எங்கும் இதுவரை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துத்தநாக ஆக்சைடு, மக்னீசியம் ஆக்சைடு, பாசுபாரிக் அமிலம், நீர் ஆகியனவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் துத்தநாக பாசுபேட்டு சிமிட்டி பல் மருத்துவத்தில் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் துத்தநாக பாசுபேட்டு பல் சிமிட்டியே பரவலாகப் பயன்படுத்தப்படும் மிகப்பழமையான ஒரு சிமிட்டியாகும். பற்களின் மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும் ஓர் அடிப்படைத் தளமாக குழிகளை நிரப்பவும் இணைப்புகளைப் பொருத்தவும் நிலையான உலோகமாக சிர்க்கோனியம் டையாக்சைடையும் இதையும் பயன்படுத்துகிறார்கள் [3][4][5][6][7][8]. விலை உயர்ந்த கல் பதித்து அழகுபடுத்தக்கூடிய தளங்கள், பல் மூடிகள், பற்பாலங்கள், பல் சிகிச்சைக்கு பயன்படும் சில உபகரணங்கள் மற்றும் எப்போதாவது சில சமயங்களில் தற்காலிக மறு சீரமைப்புக்கும் துத்தநாக பாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது. இச்சிமிட்டியை தர அளவீடுகளுக்கான நிலையான சிமிட்டியாக எடுத்துக் கொள்கிறார்கள். துத்தநாக பாசுபேட்டு பல்வகைப் பயன்பாட்டுடன் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்னமும் இது ஒரு பொதுவான சிமிட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது; எனினும், பிசின்-மாற்றியமைக்கப்பட்ட கண்ணாடி அயனோமர் சிமிட்டிகள் பல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் போது மிகவும் வசதியானவையாக மற்றும் வலுவானவையாக உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia