தொல்காப்பியர் சொற்களை மொழிநிலையில் மூன்றாகப் பகுத்துக் காட்டுகிறார். ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன அந்த 3 பாகுபாடுகள்.
தொடர்மொழி என்பது இரண்டு மாத்திரைகளுக்கு மேல் ஒலிக்கும் சொல்.
தொல்காப்பியர் னகரத்தில் முடியும் அஃறிணைப் பெயர்ச் சொற்களை இந்த நூற்பாவில் வரையறை செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நூற்பா
- மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
- னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
- புகர் அறக் கிளந்த அஃறிணை மேன (தொல்காப்பியம் 1-2-49)
- மகர இறுதி அஃறிணைப் பெயரின்
- னகரமோடு உறழா நடப்பன உளவே (நன்னூல் 121)
மயங்கும் மகரம்
பொதுவாக ம் எழுத்தில் முடியும் சொல் ன் என்னும் எழுத்தாக உயிரெழுத்தோடு இணையும்போது மாறும்.
- அகம் குன்றி - திருக்குறள் 277
- அகம் தூய்மை - திருக்குறள் 298
- அகன் அமர்ந்து செய்யாள் உறையும் - திருக்குறள் 92
மகரமொடு மயங்கா னகரத் தொடர்மொழி
இப்படி ம், ன் மயங்காத அஃறிணைப்பெயர் ஒன்பது எனத் தொல்காப்பியர் வரையறை செய்கிறார். (மொழிமரபு கடைசி-நூற்பா)
உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டு
இந்த நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டு தருகின்றனர்.
தொடர்மொழியைத் தொல்காப்பியர் 'இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி' என்று விளக்கத்தோடு குறிப்பிடுகிறார். இரண்டு மாத்திரையின் மிக்கு ஒலிப்பது என்பது இதன் வெளிப்படையான பொருள். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஓரசைச் சொற்கள். வட்டம் என்னும் சொல் வட்டன் என்று வராது என்று எடுத்துக்காட்டு தரும் உரை இங்கு வேண்டாத ஒன்று. (நச்சினார்க்கினியார், மயிலைநாதர்)
- இளம்பூரணர் எடுத்துக்காட்டு
- அழன், உகின், கடான், குயின், செகின், பயின், புழன், வயான், விழன்,
- நச்சினார்க்கினியார் விளக்கம்
- அழன், எகின், கடான், குயின், செகின், பயின், புழன், வயான், விழன்,
- மயிலைநாதர் நன்னூல் நூற்பாவுக்கு விளக்கம்
- பலியன், வலியன், கயான், அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன்
- இவை நிரை வாய்பாடு கொண்டவை அன்றேனும் சொல்லை அறியும்பொருட்டு இங்குத் தரப்படுகின்றன.
சொல்லும் பொருளும்
சொல் |
பொருள்
|
அழன் |
'அழன்ற' = நல்லியக்கோடன் தேரோர்க்கு நிழன்ற கோலையும், தேரோர்க்கு அழன்ற வேலையும் உடையவனாம். {சிறுபாணாற்றுப்படை 234) இதனால் 'அழன்' என்பது எரி மூட்ட உதவும் தீப்பிழம்பு என்பது புலனாகிறது.
|
உகின் |
உகுக்கும் கழிவுநீர்ச் சாய்க்கடை
|
எகின் |
புளியமரத்தைக் குறிக்கும்போது 'எகினங்கோடு' என மெல்லெழுத்து மிகும். (தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் னகர-ஈறு)
அன்னப் பறவையைக் குறிக்கும்போது 'எகினக்கால்' என வல்லெழுத்து மிகும். (தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் னகர-ஈறு)
|
கடான் |
சீம்பாலைக் காய்ச்சிச் செய்யப்படும் கடம்பு.
|
குயின் |
மேகத்தைக் குறிக்கும்போது 'குயின்குழாம்' என இயல்பாகும். (தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் னகர-ஈறு)
|
செகின் |
உயிர் செகுக்கும் நஞ்சு
|
பயின் |
அரக்கு (அகநானூறு 1)
|
புழன் |
அடுப்பு ஊத உதவும் புழை உள்ள ஊதுகுழல்.
|
வயான் |
தூக்கும் பல்லாக்கு. இளம்பூதி என்னும் மறையவன் 'வயனங்கோட்டில்' வந்தான் (மணிமேகலை 13-15)
வையம் என்பது உருள்தேர். வயான் என்பது தூக்குதேர், இது தொங்குவதால் தூங்குதேர் என்றும் கூறப்படும்.
|
விழன் |
இச்சொல் இக்காலத்தில் 'விழல்' என்று வழங்கப்படுகிறது. 'விழலுக்கு இறைத்த நீர்' என்பர். விழல் என்பது நெல்லம்பயிரோடு சேர்ந்து வளரும் கோரைப்புல்லைக் குறிக்கும்.
|